முடியாது என்று சொன்ன அனைத்தையும் செய்து முடித்து விட்டார் பிரதமர் மோடி ; அண்ணாமலை பெருமிதம்…!!
Author: Babu Lakshmanan6 February 2024, 9:24 am
சென்னை ; முடியாது என்று சொன்ன அனைத்தையும் பிரதமர் மோடி செய்து முடித்து விட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், இந்த மாத இறுதிக்குள் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சியினரும் ஈடுபட்டு வரும் நிலையில், விரைவில் பாஜக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நாடாளுமன்ற தேர்தலையொட்டி அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் அலுவலகத்தை திறக்க பாஜகவின் தலைமை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்திலும் தேர்தல் அலுவலகங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், என் மண் என் மக்கள் பாதயாத்திரையை வேலூரில் மேற்கொண்ட அண்ணாமலை பேசியதாவது :- 2024ம் ஆண்டில் 5வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறியுள்ளது. 2028ம் ஆண்டில் உலகில் இந்தியா 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும்.
பாஜகவின் குரல் சாமானிய மக்களின் குரல். திமுக அமைச்சரவையில் 35 அமைச்சர்களில் 3 பேர் மட்டுமே பட்டியலினத்தை சேர்ந்தவர்கள். முடியாது என்று சொன்ன அனைத்தையும் பிரதமர் மோடி செய்து முடித்துள்ளார். அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியை நரேந்திர மோடிக்கு ஒப்படையுங்கள், எனக் கூறினார்.