நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கும் அண்ணாமலை…? மேலிடத்தில் இருந்து வந்த க்ரீன் சிக்னல் ; எந்தத் தொகுதியில் தெரியுமா..?
Author: Babu Lakshmanan1 March 2024, 3:01 pm
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், திமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை துரிதமாக மேற்கொண்டு வருகிறது. ஆனால், காங்கிரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் இழுபறியாகவே இருந்து வருகிறது. அதேபோல, அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.
மறுபக்கம், திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தேசிய கட்சியான பாஜக, கூட்டணியை அமைக்கத் தீவிரம் காட்டி வருகிறது. அதேவேளையில், ஆளும் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று முடிவோடு அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை செயல்பட்டு வருகிறது.
திமுக ஆட்சியின் ஊழல்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை அம்பலப்படுத்தி வருவதுடன், நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரமாக என் மண் என் மக்கள் யாத்திரையையும் வெற்றிகாரமாக நிறைவு செய்து விட்டார். அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் யாத்திரை மேற்கொண்ட அவர், மத்திய அரசின் நலத்திட்டங்களை மத்திய அரசுக்கு எடுத்துச் சென்றதுடன், அப்பகுதியினரின் பிரச்சனைகளையும் கோரிக்கை மனுக்களாக பெற்றுள்ளார்.
இந்தப் பயணத்தின் போது, நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுவாரா..? என்று பலமுறை அவரிடம் கேள்வி கேட்ட போது, மேலிடம் என்ன முடிவு எடுக்கிறதோ..? அதன்படி பணியாற்றுவேன் என்று கூறியிருந்தார்.
இதனிடையே, தமிழகத்தில் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துவிட்டு, பிரதமர் டெல்லி திரும்பிய நிலையில், தமிழக பாஜகவில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூர் அல்லது கோவை தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் அவர் போட்டியிட இருப்பதாக சொல்லப்படுகிறது.