நிதி ஒதுக்கி 2 வருஷமாச்சு.. ஒரு கழிப்பறை கூட கட்டல ; போலி சமூக நீதி பேசித் திரியும் திமுக ; அண்ணாமலை காட்டம்!!

Author: Babu Lakshmanan
18 April 2023, 4:39 pm

ஆதிதிராவிடர் ஆரம்பப் பள்ளிக்கு அடிப்படை வசதிகள் கூட செய்யாமல் போலி சமூக நீதி பேசித் திரிகிறது திமுக என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை காட்டமாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- ராணிப்பேட்டை கீழவீதி பஞ்சாயத்து ஆதிதிராவிடர் ஆரம்பப்பள்ளி, 2021 ஆம் ஆண்டு முதல், பள்ளிக்கான கட்டிடம் இல்லாமல், மின்சாரம் மற்றும் கழிப்பிட வசதி இல்லாத வாடகைக் கட்டிடம் ஒன்றில் இயங்கி வருவதாக நாளிதழில் வந்துள்ள செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, இந்தப் பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்காக 40 லட்சம் நிதி ஒதுக்குவதாக, அறிவிப்பு மட்டும் வெளியிட்டு விட்டு, நிதி ஒதுக்காமல் மாணவர்களையும், பெற்றோர்களையும் அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது திறனற்ற திமுக அரசு.

பட்டியல் சமூக மக்களுக்காக, மத்திய அரசு, ஆண்டுதோறும் ஒதுக்கும் நிதியைப் பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கும் திமுக அரசு, அவர்களுக்கான அடிப்படை வசதிகளைக் கூட நிறைவேற்றாமல் இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அதே கீழவீதி பகுதியில் இருக்கும் மற்றொரு அரசுப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைகள் இருக்கும்போது, ஆதிதிராவிடர் ஆரம்பப் பள்ளிக்கு அடிப்படை வசதிகள் கூட செய்யாமல் போலி சமூக நீதி பேசித் திரிகிறது திமுக.

பெற்றோர்களும் மாணவர்களும் போராட்டம் நடத்தியும்,கண்டுகொள்ளாமல், ஆசிரியர்களுக்கான ஊதியமும் வழங்காமல், ‘வேண்டுமென்றே பட்டியல் சமூக மாணவர்களை பிரித்துப் பார்க்கிறது திமுக’ என்றே கருத வேண்டியிருக்கிறது. உடனடியாக தமிழகம் முழுவதும் இருக்கும் ஆதிதிராவிடர் பள்ளி, விடுதிகளுக்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும், அதற்காக மத்திய அரசு ஒதுக்கும் நிதியை, பட்டியல் சமூக மக்களின் நலனுக்காக முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

தவறினால், மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தவும் தமிழக பாஜக தயங்காது எனவும் தெரிவித்துக்கொள்கிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ