ரூ.100 கோடி தொகை நிலுவை… ஜவுளி தொழிலை முடக்கிய திமுக ; அண்ணாமலை கொடுத்த வார்னிங்..!!

Author: Babu Lakshmanan
9 February 2024, 10:00 pm

ஜவுளி தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி ரீபண்ட் தொகை நான்கு மாதங்களாக நிலுவையில் வைத்திருப்பதால், உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- ஜிஎஸ்டி வரி கட்டும் அனைவருக்கும், மத்திய மாநில அரசுகள் ஜிஎஸ்டி ரீபண்ட் தொகை வழங்குவது வழக்கம். மத்திய அரசின் ரீபண்ட் தொகை குறித்த நேரத்தில் அனைவருக்கும் வழங்கப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி ரீபண்ட் தொகையை, நிதிப் பற்றாக்குறை என்று காரணம் கூறி, திமுக அரசு நிலுவையில் வைத்துள்ளதாகத் தெரிகிறது.

குறிப்பாக, தமிழகம் முழுவதும் விவசாயத்திற்கு அடுத்ததாக, பெரிய தொழிலாக விளங்கும் ஜவுளித் தொழிலில், விசைத்தறியாளர்களுக்கு மாநில அரசின் ஜிஎஸ்டி ரீபண்ட் தொகையை கடந்த நான்கு மாதங்களாக வழங்காமல் இருப்பதாகத் தெரிகிறது. பொதுவாக, ஜிஎஸ்டி ரீபண்ட் தொகை மீண்டும் தொழில் முதலீடாகவே பயன்படுத்தப்படும் நிலையில், நான்கு மாதங்களாக நிலுவையில் வைத்திருப்பதால், உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொங்கு பகுதியில் உள்ள ஜவுளி மில்களுக்கு மட்டுமே சுமார் 100 கோடி ரூபாய் அளவிலான ஜிஎஸ்டி ரீபண்ட் தொகை நிலுவையில் இருக்கிறது என்பது, இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்துகிறது. தொழில் முதலீடு குறைவது, தமிழகத்தின் தொழில் வளர்ச்சியையும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பெருமளவில் பாதிக்கும் என்பதைக் கூட இந்த திமுக அரசு உணராமல் இருக்கிறது.

ஜிஎஸ்டி ரீபண்ட் தொகை நிலுவை என்பது, விசைத்தறியாளர்களுக்கு மட்டுமல்ல, தமிழகத்தின் அனைத்துத் தொழில்களையும் பாதிக்கும் பிரச்சினை ஆகும். உடனடியாக, தமிழக அரசு நிலுவையில் வைத்திருக்கும் அனைத்துத் தொழில் உற்பத்தியாளர்களுக்கும், ஜிஎஸ்டி ரீபண்டு தொகையை வழங்குமாறு தமிழக பாஜக
சார்பாக வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 342

    0

    0