‘விடியல…முடியல’ எனும் வாசகத்துடன் ‘மக்கள் புகார் பெட்டி’அறிமுகம்… அண்ணாமலையின் நடைபயணத்தில் புதிய டுவிஸ்ட்… பாஜகவின் அடுத்த அதிரடி..!!

Author: Babu Lakshmanan
20 July 2023, 4:30 pm

ஊழலற்ற அரசாங்கம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஊழலுக்கு எதிரான பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ‘என் மண், என் மக்கள்’ நடைபயணம் வரும் 28ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்சா மூலம் ராமேஸ்வரத்தில் தொடங்கி வைக்கப்பட உள்ள நிலையில், நடைபயணத்தில் இடம்பெற உள்ள புகார் பெட்டியின் அறிமுக விழா சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது. கட்சியின் மூத்த நிர்வாகிகளான பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்று விடியல…முடியல எனும் வாசகத்துடன் கூடிய ‘மக்கள் புகார் பெட்டி’ யை அறிமுகம் செய்தனர்.

அண்ணாமலையின் நடை பயணத்தின்போது இந்த புகார் பெட்டியும் இடம்பெற்றிருக்கும் எனவும், ஊழல், சட்டம் ஒழுங்கு, கள்ளச்சாராயம், கட்டப் பஞ்சாயத்து, வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது உள்ளிட்ட புகார்களை பொதுமக்கள் அப்பெட்டியினுள் வழங்கினால், அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது :- ஊழலற்ற நேர்மையான, தூய்மையான அரசாங்கம் வர வேண்டும் என்ற அரசியல் மாற்றத்தை தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர். ‘என் மண் என் மக்கள்’ நடைபயணம் வரும் 28ம் தேதி முதல் தொடங்குகிறது. ஊழலற்ற அரசாங்கம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர வேண்டும். பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால சாதனையை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து, பாஜக கூட்டணியின் அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் இந்த நடைபயணம் திட்டமிடப்பட்டுள்ளது.

திமுகவின் ஊழல் நிறைந்த குடும்ப ஆட்சியின் அவலத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதும் நடைபயணத்தின் இலக்கு. உள்துறை அமைச்சர் ராமேஸ்வரத்தில் தொடங்கி வைக்கிறார். அன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராமேஸ்வரத் தீர்மானங்கள் வெளியிடப்படும். தமிழக பாஜக எந்த திசை, இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் , எப்படியான வெற்றியை பெற வேண்டும் என்ற சிந்தனையுடன் அந்த தீர்மானங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நடைபயணம் 39 நாடாளுமன்ற தொகுதி, 234 சட்டமன்ற தொகுதியையும் கடந்து செல்லும். ஒவ்வொரு நாளும் பாதயாத்திரை மூலமாகவும், வாகனம் மூலமாகவும் அண்ணாமலை மக்களை சந்திப்பார். நடைபயணத்தின் இடையே தமிழுக்கும், தமிழகத்துக்கும் பிரதமர் என்ன செய்தார் என்பது குறித்த 10 லட்சம் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. 1 கோடி குடும்பங்களுக்கு அண்ணாமலையின் கடிதம் அனுப்பப்பட உள்ளன. தமிழ்தாயின் சிலை வைக்க தமிழகம் முழுவதும் நடைபயணம் செல்லும் ஊர்களில் புனித மண் சேகரிக்கப்படும்.

அண்ணாமலை மேற்கொள்ளும் நடைபயணத்தின் இடையே மத்திய அமைச்சர்கள், பாஜகவின் தேசிய தலைவர்கள் 11 பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேச உள்ளனர். அண்ணாமலை நாள்தோறும் கிராம சபையில் மக்களின் குறைகளை கேட்டறிவார். அவற்றை சரிசெய்யும் நடவடிக்கைகளை எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நடைபயணம் நிறைவடையும்போது தமிழகத்தில் மாபெரும் அரசியல் திருப்புமுனை ஏற்படும். 2024 நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் வெற்றியை கைப்பற்றும் வகையில் திருப்புமுனை ஏற்படும். 1967 முதல் நடக்கும் திமுகவின் தவறான ஆட்சிமுறைக்கு எதிராக அரசியல் மறுமலர்ச்சியை யாத்திரை ஏற்படுத்தும். இதை கட்சி யாத்திரையாக கருதாமல், தமிழக மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றும் யாத்திரை வருகிறது எனும் சிந்தனையுடன் தமிழக மக்கள் திருவிழா போல வரவேற்க வேண்டும். புதிய அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தும் இந்த யாத்திரைக்கு ஒட்டுமொத்த தமிழகமும் ஆதரவு தர வேண்டும். இது கட்சிக்கானது அல்ல, 8 கோடி தமிழர்களுக்கானது.

நீங்கள் கேட்பதைப் போன்று அதிமுகவிடம் எங்கள் பலத்தை காட்டுவதற்கான யாத்திரை அல்ல இது, 1967 முதல் தமிழக மக்கள் எப்படி ஏமாற்றப்படுகின்றனர் என்பதை கொண்டு சேர்க்கும் வகையில் அமையும். எங்கள் நடைபயணத்தால் எங்களுக்கு ஆதரவு பெருகத்தான் செய்யும். பாஜக பலம் பெற வேண்டும் என்பதே எங்கள் கருத்து. பாஜக பலம் பொருந்துவதை வரவேற்கதான் செய்வோம்.

உலகிலேயே கடல் பாசியில் அல்வா செய்வோம் என்ற வாக்குறுதியை கொடுத்த கட்சி திமுக. ராமநாதபுரம் மட்டும் அல்ல, 543 தொகுதியிலும் மோடி போட்டியிட வேண்டும் என மக்கள் விரும்பலாம். ஆனால் அவர் போட்டியிடும் இடத்தை பாஜக தலைமைதான் முடிவு செய்யும். ராகுல் காந்தியின் நடைபயணத்தை விட பல மடங்கு பலம் பொருந்தியாதாக அண்ணாமலையின் நடைபயணம் அமையும்.

புகார் பேட்டியில் நயினார் நாகேந்திரனின் மகன் குறித்த நிலப்பதிவு முறைகேட்டு புகாரையும் வழங்கலாமா என்று கேட்கிறீர்கள். நீங்கள் தாராளமாக புகாரை வழங்கலாம். அந்த புகாரை என்ன முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமோ.. அந்த முறையில் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். இப்படியான புகாரைத்தான் வழங்க வேண்டும் என நாங்கள் வரையறுக்கவில்லை. மேலும் அந்த புகாரை எப்படி எதிர்கொள்ள வேண்டுமோ, அப்படி நயினார் நாகேந்திரன் எதிர்கொள்வார், எனக் கூறினார்.

தொடர்ந்து, பேசிய ஹெச் .ராஜா, திராவிட இயக்களின் அடித்தளமாக வெறுப்பு அரசியல்தான் இருக்கிறது என்று கூறினார். மேலும், அமைச்சர் உதயநிதி வீட்டுக்கு அமலாக்கத்துறை விரைவில் சோதனைக்கு வரும் என்றீர்களே… ஆனால், இன்னும் வரவில்லையே என்று ஹெச். ராஜாவை நோக்கிய செய்தியாளர் கேள்விக்கு, ஹெச். ராஜா பதில் கூற முற்பட்ட நிலையில் உதயநிதி குறித்த கேள்விக்கு பதில் அளிக்க வேண்டாம் என்று கூறி ஹெச். ராஜாவை தடுத்துவிட்டார் பொன். ராதாகிருஷ்ணன்.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 583

    0

    0