அண்ணாமலையைப் பார்த்து திமுக, காங்கிரசுக்கு பயம் ; தமிழக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி பேச்சு!!

Author: Babu Lakshmanan
6 August 2022, 10:58 am

திமுக, காங்கிரஸின் முழு நேர வேலை ஊழல் செய்வது மட்டும்தான் என்று திருச்சி விமான நிலையத்தில் தமிழக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

சிதம்பரத்தில் நடைபெற உள்ள பல்வேறு கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பாஜக தேசிய பொதுச்செயலாளரும், தமிழக மேலிட பொறுப்பாளருமான் சி.டி‌.ரவி இன்று திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார். இவருக்கு திருச்சி பாஜகவினர் வரவேற்பு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் பேசியதாவது :- பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியா வலிமையுடன் முன்னேறி சென்று கொண்டிருக்கிறது. பாஜகவில் உள்ள ஒவ்வொருவரின் கடமையும், ஒவ்வொரு இந்திய குடிமகனின் வளர்ச்சி தான், எனக் கூறினார்.

இதேபோல, 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ஊழல் நடைபெற்று இருப்பதாக திமுக, காங்கிரஸ் குற்றம் சாட்டுகின்றது என்ற கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது :- 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ஊழல் நடைபெற்றதற்க்கான ஆதாரம் இருந்தால் காட்டச் சொல்லுங்கள். திமுக,காங்கிரஸின் நோக்கம் அவர்களது குடும்பத்தை வளர்ப்பது தான்.

திமுக காங்கிரஸ் முழு நேர வேலையை ஊழல் செய்வது மட்டும்தான். ஆனால் எங்களுடைய வேலை மக்களுக்கான திட்டம் தான்,” என்றார்.

2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக, பாஜக கூட்டணி ஏற்படுமா என்ற கேள்விக்கு, நாங்கள் கட்சியை வலுப்படுத்திக் கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு இடத்திலும் பாஜகவை நிலைநிறுத்திக் கொண்டிருக்கின்றோம் என்று சொல்லி கேள்வியை தவிர்த்தார்.

தொடர்ந்து, அவர் பேசியதாவது :- அண்ணாமலை தலைமையின் கீழ் நாங்கள் எல்லா மக்களின் கைகளைப் பிடித்து நடந்து கொண்டிருக்கின்றோம். மக்கள் சேவை மட்டும்தான் எங்களது ஒரே நோக்கம். நாளுக்கு நாள் பாஜக தமிழகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது. அண்ணாமலையை பார்த்து எல்லோரும் பயப்படுகின்றனர்.

அவருடைய நடவடிக்கைகள், செயல் திட்டங்களை பார்த்து எதிர்க்கட்சியினர் பயப்படுகிறார்கள். இதன் அடிப்படையில் பாஜக தமிழகத்தில் வலுவாக இருக்கிறது. முன்னாள் பிரதமர் நேரு ஒரு முறை சொன்னார் நாலு பேரை வைத்துக்கொண்டு பாஜக இயங்கக் கொண்டிருக்கிறது. ஆனால் தற்போது மொத்த நாடும் எங்களுக்கு பின் உள்ளது, என்றார்.

  • Mohanlal Appreciates Lubber Pandhu Team லப்பர் பந்து வேற லெவல் படம்.. திறமையா எடுத்திருக்காங்க : உச்ச நடிகர் பாராட்டு!
  • Views: - 506

    0

    0