பாஜக பிரமுகர் H.ராஜாவின் சவாலை அமைச்சர் ஏற்பாரா…? தமிழக அரசியலில் திடீர் சூறாவளி!!
Author: Babu Lakshmanan4 June 2022, 6:02 pm
ரூ.15 லட்சம் சர்ச்சை
2014 நாடாளுமன்ற தேர்தல் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பாக தற்போதைய பிரதமர் மோடி பேரணி ஒன்றில் பேசியதாகக் கூறப்படும் சுவிஸ் வங்கிகளில் இந்திய பண முதலைகள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணம் தொடர்பான விவகாரம் இன்னும் ஓய்ந்த பாடில்லை.
அதை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சுட்டிக் காண்பித்து, மீட்கும் கருப்பு பணத்தை ஏழை மக்களின் வங்கி கணக்குகளில் 15 லட்சம் ரூபாய் போடுவதாக சொன்னீர்களே?… அந்த வாக்குறுதியை நிறைவேற்றினீர்களா?… எப்போது நிறைவேற்றுவீர்கள்? … என்று அவ்வப்போது கேள்வி எழுப்புகின்றன.
ஆனால் ஆரம்பத்திலிருந்தே மத்திய அமைச்சர்களான அமித் ஷாவும், ராஜ்நாத் சிங்கும் பிரதமர் மோடி அப்படி பேசவே இல்லை என்று மறுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தில், இந்த கருப்பு பண விவகாரம் மீண்டும் பேசு பொருளாகி இருக்கிறது. அது தமிழக அரசியலில் பெரும் சலசலப்பையும் தற்போது ஏற்படுத்தியுள்ளது.
சவால்
இதுதொடர்பாக, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசும்போது “திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியபடி பெட்ரோல், டீசல் விலையை 30 நாட்களுக்குள் குறைக்கவேண்டும். இல்லையெனில் ஜூன் 20-ல் மாநிலம் முழுவதும் 60 இடங்களில் உண்ணாவிரதம் இருப்போம்.
மே மாதம் வரையிலான ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மத்திய அரசு விடுவித்தது. ஆனால் பிரதமர் பங்கேற்ற விழாவில் பேசிய முதலமைச்சர் ஏற்கனவே 14,000 கோடி பாக்கி உள்ளதாக கூறியுள்ளார். அவர் சரியான புள்ளி விவரத்தை தெரிந்து கொள்ளவில்லையா? அல்லது அவருக்கு எழுதிக் கொடுத்தவர்களுக்கு தெரிய வில்லையா?
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்துவேன் என்று பிரதமர் சொன்னதாக ஊரக வளர்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசியுள்ளார்.
அவர் பிரதமர் கூறியதை புரிந்து கொள்ளவில்லை என்று தெரிகிறது. வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை எடுத்தால் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் செலுத்த முடியும் என்றுதான் கூறியுள்ளார்.
மோடி சொன்னதாக அமைச்சர் நிரூபித்தால் நான் அரசியலை விட்டே வெளியேறுகிறேன். அப்படி நிரூபிக்கவில்லை என்றால் பெரிய கருப்பன் அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அவரது வீட்டின் முன் நின்று நாங்கள் போராட வேண்டிய கட்டாயம் வரும்” என்று ஒரு சவாலையும் விடுத்திருக்கிறார்.
உண்மை என்ன..?
2014 முதல் 2020 வரை பாஜகவின் தேசிய செயலாளர் பதவியை வகித்தவர் ஹெச் ராஜா என்பதால் இந்த விஷயத்தை எளிதில் புறந்தள்ளிவிட முடியாது.
சரி மோடி அப்போது என்ன பேசினார்?… கருப்பு பண விவகாரம் தொடர்பாக அவர் சொன்னது உண்மைதானா?… என்பது பற்றி பேசிய பாஜகவின் மூத்த நிர்வாகிகள் இப்படிச் சொல்கிறார்கள்.
“சத்தீஷ்கர் மாநிலம், கான்கெர் நகரில் 2013 நவம்பர் மாதம் நடந்த பாஜக பேரணியில் மோடி பேசும்போது வெளிநாடுகளில் நமது பண முதலைகள், பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணத்தை மீட்டு வந்தால் அதை இங்குள்ள ஏழை மக்கள்
ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் ரூபாய் வழங்கிட முடியும். அந்த அளவிற்கு வெளிநாடுகளில் இந்தியர்களின் கருப்பு பணம் குவிந்து கிடக்கிறது” என்றுதான் அவர் பேசினார்.
“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியருக்கும் 15 லட்சம் ருபாயை வங்கி கணக்கில் செலுத்துவேன்” என்று ஒருபோதும் மோடி சொல்லவே இல்லை. இதை அவருடைய அப்போதைய பேச்சின் உண்மைத்தன்மை ஆய்வுகளின் மூலமும் உறுதி செய்துகொள்ளவும் முடியும்.
அளந்து விட்ட காங்கிரஸ்
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கூறுவதற்கும்” வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கருப்பு பணத்தை மீட்டு வந்தால் ஒவ்வொரு ஏழைக்கும் 15 லட்சம் ரூபாய் கொடுக்கும் அளவிற்கு பண முதலைகள் பதுக்கி வைத்துள்ளனர்” என்று மோடி சொன்னதற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது.
அண்மையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரியும், அவரது கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை போல் கருப்பு பண மீட்பு விவகாரம் தொடர்பாக தன் இஷ்டத்துக்கு அளந்து விட்டுள்ளார்.
எதிர்க்கட்சிகள்தான், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் என்று மோடி கூறி 2014-ல் ஆட்சியை கைப்பற்றி விட்டார் என்று தற்போது வரை பிரச்சாரம் செய்து வருகின்றன.
மேலும் சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள 72 லட்சம் கோடி ரூபாய் மீட்க மோடி என்ன நடவடிக்கை எடுத்தார்?… என்று அவர்களாகவே ஒரு தொகையையும் நிர்ணயம் செய்து விட்டனர்.
இந்தியர்களின் கருப்புப் பண பதுக்கலின் சொர்க்க புரியாக சுவிஸ் என்று அழைக்கப்படும் சுவிட்சர்லாந்து நாடு இருப்பது உண்மைதான்.
ஆனால் சுவிஸ் அரசு தங்களது வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களின் பெயர் மற்றும் பண விவரங்களை ஒருபோதும் வெளியிடுவதில்லை. அவர்களின் ரகசியங்களை காக்கவே முன்னுரிமை கொடுப்பார்கள். அதை நம்பித்தான் உலகம் முழுவதும் உள்ள 70 நாடுகளைச் சேர்ந்தவர்கள், அங்கே துணிந்து தங்களது கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளனர்.
கருப்பு பணம் பதுக்கல் தடுப்பு
என்றபோதிலும் மோடி அரசு சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்பதற்கு, தீவிர நடவடிக்கை எடுத்து 2017-ம் ஆண்டு அந்த நாட்டுடன் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டது. அதன்படி 2019 முதல் இந்தியர்களின் கணக்கு விவரங்களை சுவிஸ் அரசாங்கம் வெளியிட ஒப்புக்கொண்டது.
ஆனால் இந்த இரண்டு ஆண்டுகளுக்குள், கருப்பு பணத்தை பதுக்கிய இந்திய அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், திரையுலக நட்சத்திரங்கள், வரி ஏய்ப்பாளர்கள், தனியார் நிறுவனங்கள் தங்களுடைய கருப்பு பணத்தை, ரகசிய பரிவர்த்தனைகள் மூலம் மாற்றி வேறு நாடுகளுக்கு கொண்டு சென்றுவிட்டனர்.
ஏனென்றால் இவர்களில் பெரும்பாலானோர் அமெரிக்கா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் துபாய், இந்தோனேஷியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆவர்.
இன்னும் பலர் ஹவாலா முறையை பயன்படுத்தி இந்தியாவிற்கே கருப்பு பணத்தை கடத்தி வந்து பினாமி மற்றும் போலி பெயர்களில் பல்வேறு நிறுவனங்களைத் தொடங்கியும் விட்டனர்.
இதனால்தான் எதிர்பார்த்த அளவிற்கு கருப்பு பணத்தை மீட்க முடியாமல் போனது. என்ற போதிலும், 2019 இறுதி முதல் இந்தியாவில் இருந்து, வெளிநாடுகளுக்கு கருப்பு பணத்தை கடத்தி பதுக்குவது மோடி அரசால் பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளது”என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
0
0