திமுகவின் அங்கீகாரத்தை ரத்து செய்க… சின்னத்தையும் முடக்குங்க… தேர்தல் ஆணையத்திற்கு சுப்பிரமணிய சுவாமி அழுத்தம்… திகைப்பில் திமுக..!!
Author: Babu Lakshmanan8 June 2022, 8:03 pm
திமுகவின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, பாஜகவுடனான மோதல் போக்கு அதிகரித்தே வருகிறது. இரு கட்சியினரும் சரமாரியாக விமர்சனங்களையும், குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்து வருகின்றனர்.
அந்த வகையில், அண்மையில், பிராமணர்கள் குறித்து திமுகவின் செய்தி தொடர்பாளர் ராஜிவ் காந்தி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது, பெரியார் சொல்லியதை போன்று பிராமணர் சமுதாயத்தை இனப்படுகொலை செய்ய வேண்டும், என அவர் கூறினார். அவரது இந்தப் பேச்சுக்கு கடும் கண்டனங்களை அரசியல் தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பரபரப்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், திமுகவின் அங்கீகராத்தை ரத்து செய்வதுடன், அந்தக் கட்சியின் சின்னமான உதயசூரியனை முடக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், பிராமண சமுதாய மக்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என்று திமுக கட்சி நிர்வாகி பேசியிருப்பது, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தை மீறிய செயல் என்று குறிப்பிட்ட சுப்பிரமணிய சுவாமி, இதுபோன்று மிரட்டி பிராமணர்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பதாகவும், குறிப்பாக தேர்தல்களில் வாக்களிக்க முடியாதபடி அச்சுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். இதன்மூலம், பிராமணர்கள் வாக்களிக்காமல் போனால், பல்வேறு தொகுதிகளில் திமுக எளிதில் வெற்றி பெறும் சூழல் உருவாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து, முளையிலேயே கிள்ளி எறியும் விதமாக, திமுகவின் அங்கீகாரத்தை ரத்து செய்வதுடன், அக்கட்சியின் உதயசூரியன் சின்னத்தையும் முடக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
முந்தைய காலங்களில் சுப்பிரமணிய சுவாமி போட்ட பல்வேறு வழக்குகளில், அவர் நினைத்தபடியே தீர்ப்புகள் வந்திருப்பதால், இந்திய தேர்தல் ஆணையத்திடம் தற்போது அவர் அளித்துள்ள இந்தக் கடிதம், திமுகவினரிடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.