குஜராத்தில் வரலாறு படைத்த பாஜக : எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை திட்டம் பணால்?…

Author: Udayachandran RadhaKrishnan
8 December 2022, 10:00 pm

குஜராத், இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் தேசிய அளவில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், தெலுங்கானா ராஷ்டிர சமிதி, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, திமுக, ஐக்கிய ஜனதாதளம், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட18 எதிர்கட்சிகளுக்கு பெருத்த அதிர்ச்சியையும், ஏமாற்றதையும் தருவதாக அமைந்திருப்பதை காண முடிகிறது.

எதிர்க்கட்சிகளை ஷாக் ஆக வைத்த குஜராத் முடிவு!!

ஏனென்றால் இந்த முடிவுகளைப் பொறுத்தே 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்படும் என்று தேர்தல் பார்வையாளர்கள் தொடர்ந்து கூறி வந்தனர்.

அதிலும் குறிப்பாக குஜராத்தில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பதைப் பொறுத்தே எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி அமையும் என்றும் கூறப்பட்டது.

இதனால் பாஜகவுக்கு போட்டியாக காங்கிரஸ் தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை யாத்திரையில் இருந்ததால் குஜராத்தில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ளாமல் தவிர்த்து விட்டார். ஆனால் மல்லிகார்ஜுனா கார்கே, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்
உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அந்த மாநிலத்தில் உள்ள 182 தொகுதிகளிலும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரங்களில் ஈடுபட்டனர்.

தீவிரமாக களமிறங்கிய ஆம் ஆத்மி!!

அதேநேரம் டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஆளுங்கட்சியாக உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி 2017 தேர்தலைப் போல் இல்லாமல் முழு வீச்சில் குஜராத் தேர்தலில் களத்தில் குதித்தது.

ஐந்து மாதங்களுக்கு முன்பே டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் குஜராத்தின் மூலை முடுக்கெல்லாம் பிரச்சாரத்தை தொடங்கியும் விட்டார்.

இதனால் மாநிலத்தில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக இருமுனை போட்டி மட்டுமே இருந்த தேர்தல் ஆம் ஆத்மியின் வருகையால் மும்முனைப் போட்டியாக மாறியது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பஞ்சாபில் நடந்த சட்டப் பேரவை தேர்தலில் யாருமே எதிர்பாராத விதமாக ஆம் ஆத்மி 92 இடங்களில் வென்று ஆட்சியைப் கைப்பபற்றி இருந்தது.

அந்த உற்சாகத்தில் 300 யூனிட் இலவச மின்சாரம், கல்வி, அனைவருக்கும் இலவச மருத்துவம்,18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை, படித்துவிட்டு வேலையில்லாமல் உள்ள இளைஞர்களுக்கு மாதந்தோறும் 3,000 ரூபாய் உதவித்தொகை, மாணவர்களுக்கு இலவச லேப் டாப் என ஏராளமான வாக்குறுதிகளை ஆம் ஆத்மி அள்ளித் தெளித்தது.

குஜராத்தில் முகாமிட்ட பாஜக முகங்கள்

அதேநேரம் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் வெற்றி பெற்று விட்டால், மத்தியில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி விட முடியும் என்ற சென்டிமெண்டோடு பாஜகவும் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டது.

பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதலமைச்சர்கள் யோகி ஆதித்யநாத், சிவராஜ் சிங் சவுகான், ஹிமந்தா பிஸ்வா சர்மா, பிரமோத் சாவந்த் உள்ளிட்டோர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கினர்.

இப்படி ஒட்டுமொத்த பாஜக முகங்களும் தேர்தல் பணியில் குவிந்திருக்க காங்கிரஸ் மௌனத்தை மட்டுமே காட்டியது. அதன் இரண்டாம் கட்ட தலைவர்களின் பிரச்சாரமும், வியூகங்களும் சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை. அவை நடுநிலையான வாக்காளர்களை கவரும் வகையிலும் இல்லை. தவிர காங்கிரஸ் வெற்றிபெறும் நோக்கில் உத்வேகத்துடன் தேர்தல் பணிகளை மேற்கொண்டதாகவும் தெரியவில்லை. மோசமான தோல்வியைச் சந்திக்காமல் கணிசமான வெற்றியைப் பெறுவதில் மட்டுமே அது கவனம் செலுத்தியது.

சோர்ந்து போன காங்கிரஸ்

இன்னும் சொல்லப்போனால் இமாச்சலப் பிரதேச தேர்தலில் காட்டிய ஆர்வத்தில் ஐந்தில் ஒரு பங்கு கூட குஜராத்தில் காங்கிரஸ் காட்டிய மாதிரி தெரியவில்லை. அதை தேர்தல் முடிவுகளும் வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது.

குஜராத் மாநிலத்தில் கடந்த முறை 49 சதவீத ஓட்டுகளுடன் 99 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக தற்போது 53 சதவீத வாக்குகளுடன் 150க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது. காங்கிரஸோ 27 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற்று 20க்கும் குறைவான தொகுதிகளுடன் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. 2017 தேர்தலில் அக் கட்சி 42 சதவீத ஓட்டுகளுடன் 77 இடங்களில் வெற்றி கண்டிருந்தது, இங்கே நினைவு கூரத்தக்கது.

முதன்முறையாக ஆம் ஆத்மி நுழைகிறது

இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் கடந்த தேர்தலில் ஒரு சதவீதத்திற்கும் மிகக்குறைவான ஓட்டு மட்டுமே வாங்கி இருந்த ஆம் ஆத்மி இந்த முறை 13 சதவீத வாக்குகளுடன் 5 தொகுதிகளில் வென்று முதல் முறையாக குஜராத் சட்டப் பேரவைக்குள் காலடி எடுத்து வைத்தும் உள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தை பொறுத்தவரை ஐந்தாண்டுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் நிச்சயம் என்பதை உறுதி செய்வது போல மொத்தமுள்ள 68 இடங்களில் காங்கிரஸ் 40 தொகுதிகளை வென்று ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. இங்கு பாஜகவுடன் கடுமையான இழுபறிக்குப் பிறகே இந்த வெற்றி கிடைத்துள்ளது. பாஜக 25 தொகுதிகளை வென்றுள்ளது.

7வது முறையாக அரியணை ஏறும் பாஜக

“இந்த இரு மாநிலத் தேர்தல்களில், குஜராத்தில் பாஜக அமோக வெற்றி பெற்றிருப்பது 2024 தேர்தலில் அப்படியே பிரதிபலிக்கும் என்ற நம்பிக்கையை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரிடம் மட்டுமின்றி மூத்த பாஜக தலைவர்கள் அனைவரிடமும் ஏற்படுத்தி இருக்கிறது. அதேநேரம் எதிர்க்கட்சிகளிடம் ஒரு பெரிய குழப்பத்தையும் இந்த முடிவுகள் உருவாக்கி விட்டுள்ளது” என்று டெல்லியில் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

“ஏனென்றால் இப்போது குஜராத்தில் பாஜகவின் அபார வெற்றியை கணக்கிட்டால் அந்த மாநிலத்தில் உள்ள 26 நாடாளுமன்ற தொகுதிகளையும், அப்படியே அக்கட்சி கைப்பற்றி விடுவதற்கான வாய்ப்புகளே அதிகம் தென்படுகிறது.

மண்ணைக் கவ்விய காங்கிரஸ்

குஜராத்தில் காங்கிரசுக்கு கிடைக்க வேண்டிய ஓட்டுகளில் 12 சதவீதத்தை ஆம் ஆத்மி ‘ஸ்வாகா’ செய்துவிட்டது. அதனால்தான் காங்கிரசால் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றதில் மூன்றில் ஒரு பங்கு இடங்களைக் கூட தற்போது பெற முடியாமல் போய்விட்டது. ஆம் ஆத்மி அள்ளித் தெளித்த ஏகப்பட்ட இலவச வாக்குறுதிகளை கிராமப்புற, நகரப்புற ஏழை மக்கள் அப்படியே நம்பி ஓட்டுபோட்டு விட்டதால்தான் காங்கிரசுக்கு இந்த மோசமான நிலைமை ஏற்பட்டது என்பதும் உண்மை.

அதேநேரம் இமாச்சலப் பிரதேசத்தில் நாங்கள் ஆட்சி அமைத்தால் 5 லட்சம் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்ற பிரியங்காவின் கவர்ச்சிகர வாக்குறுதிதான் காங்கிரசுக்கு வெற்றியை கொடுத்துள்ளது என்றே சொல்லவேண்டும்.

இந்த மாநிலத்தில் காங்கிரஸ் 44 சதவீத ஓட்டுகளையும் பாஜக 43 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளன. ஆனால் இங்கு ஆம் ஆத்மியின் கவர்ச்சி வாக்குறுதிகள் எதுவும் எடுபடவில்லை. அதனால் அக்கட்சியால் ஒரு சதவீத வாக்கை மட்டுமே பெற முடிந்தது.

காங்கிரசு ஓரங்கட்டும் ஆம் ஆத்மி

என்றபோதிலும், காங்கிரசின் வாக்கு வங்கியை கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி நாடு முழுவதும் கணிசமாக கரைத்து வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. அடுத்த ஆண்டின் இறுதிக்குள் கர்நாடகா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா உள்ளிட்ட ஒன்பது மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கிறது. இவற்றிலும் ஆம் ஆத்மி தீவிரமாக களம் இறங்க வாய்ப்பு உள்ளது.

இந்த மாநிலங்களிலும் ஏராளமான இலவச திட்டங்களை அறிவித்து, ஆம் ஆத்மி வாக்காளர்களை கவர்ந்திழுக்கலாம். இது பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் இடையே நேரடி போட்டி நடக்கும் மாநிலங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். காங்கிரஸின் ஓரிரு சதவீத வாக்குகளை ஆம் ஆத்மி தன் பக்கம் இழுத்துவிட்டால் கூட காங்கிரஸ் நிலைமை திண்டாட்டம்தான்.

அது மட்டுமல்ல 2024 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு இணையாக, இன்னொரு தேசிய கட்சியாகவும் ஆம் ஆத்மி உருவெடுக்கும் நிலையும் ஏற்படும்.

எதிர்க்கட்சிகள் திணறல்

350க்கும் மேற்பட்ட தொகுதிகளில் கெஜ்ரிவால் தனது கட்சி சார்பாக வேட்பாளர்களை நிறுத்தினால் காங்கிரஸின் தலைமையை ஏற்பதா?… அல்லது ஆம் ஆத்மியின் பின்னால் செல்வதா?…என்ற பெரும் குழப்பம் திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, திமுக, மார்க்சிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிர சமிதி, ராஷ்ட்ரிய தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய பிரதான கட்சிகளுக்கு ஏற்படும். இதனால் எதிர்க்கட்சிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளர் யார்? என்பதை அறிவிப்பதிலும் சிக்கல் உருவாகும்.

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் இதை முடிவு செய்து கொள்ளலாம் என்று நினைத்தால் அது பாஜகவின் சார்பில் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படும் மோடிக்கு சாதகமாக அமையும் வாய்ப்புகளே அதிகம். ஏனென்றால் எதிர்க்கட்சிகள் சார்பில் யாரும் முன்னிலைப்படுத்தப்படாத நிலையில் அதை பாஜக எளிதில் எதிர்கொண்டுவிடும்” என்று அந்த அரசியல் நோக்கர்கள் காரணங்களை அடுக்குகின்றனர்.

  • 150 நடிகைகளுடன் தனுஷ்… சரமாரியாக தாக்கும் சுசித்ரா..!
  • Views: - 392

    0

    0