பண்ணையபுரம் முதல் பாகுபலி வரை… தென்னிந்தியர்களுக்கு முக்கிய பதவி… பாஜகவின் மாஸ்டர் மூவ்..!!
Author: Babu Lakshmanan7 July 2022, 9:04 am
நாடாளுமன்ற நியமன எம்பிக்கள் விவகாரத்தில் தென்னிந்தியர்களுக்கு பாஜக முக்கியத்துவம் வழங்கியிருப்பது அரசியல் கட்சியினரிடையே சற்று கவனிக்க வேண்டியதாகி உள்ளது.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் 12 உறுப்பினர்களை நியமன எம்.பி.க்களாக குடியரசு தலைவரால் நேரடியாக நியமனம் செய்ய முடியும். கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, சட்டம், சமூக சேவை உள்ளிட்ட துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு இந்த நியமன எம்.பி. பதவி வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
தற்போது, உச்சநீதிமன்ற முன்னாள் ரஞ்சன் கோகாய் உள்பட 5 பேர் மட்டுமே நியமன எம்.பி.க்களாக இருந்து வருகின்றனர். 7 இடங்கள் காலியாக உள்ளனர். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் பதவி காலம் முடிய உள்ள நிலையில், எஞ்சிய காலி நியமன எம்பிக்களின் இடத்தை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், தமிழகத்தை சேர்ந்த இசைஞானி இளையராஜாவை மாநிலங்களவை எம்.பி.யாக மத்திய அரசு நியமித்து நேற்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இசைத்துறையில் அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்புக்கு, மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் மட்டும் போதாது என்னும் விதமாக, இளையராஜாவுக்கு நியமன எம்.பி. பதவி வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில், அம்பேத்கர் இருந்திருந்தால் பிரதமர் மோடியின் நிர்வாகத் திறமையை பாராட்டியிருப்பார் என்று கருத்து கூறியிருந்தார். இதற்கு தமிழக அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், தனது கருத்தில் இருந்து அவர் பின்வாங்கவில்லை.
அப்போதே, அவருக்கு மாநிலங்களவை நியமன எம்.பி. பதவி வழங்கப்படலாம் என்றும் யூகங்கள் கிளம்பியிருந்தது நினைவுகூரத்தக்கது.
மாநிலங்களவை நியமன எம்.பி. பதவி வழங்கப்பட்டிருக்கும் இளையராஜாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் உள்பட ஏராளமான திரையுலகினர், அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
இளையராஜாவைப் போலவே மற்றொரு திரை பிரபலமான பாகுபலி, ஆர்.ஆர்.ஆர். உள்ளிட்ட பிரமாண்ட திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதிய ஆந்திராவை சேர்ந்த பிரபல கதாசிரியரும், இயக்குனர் ராஜமவுலியின் தந்தையுமான வீரேந்திர பிரசாத்தும் மாநிலங்களவையின் நியமன எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், கர்நாடகாவை சேர்ந்த சமூக சேவகரும், தர்மஸ்தலா கோவில் நிர்வாகியுமான வீரேந்திர ஹெக்டே, கேரளாவை சேர்ந்த தடகள வீராங்கனை பி.டி.உஷாவுக்கும் நியமன எம்.பி. பதவி வழங்கப்பட்டு இருக்கிறது.
மாநிலங்களவையின் புதிய நியமன எம்.பி.க்களாக நியமிக்கப்பட்டுள்ள இந்த 4 பேரும் தென்னிந்தியாவை சேர்ந்தவர்களாவர். வட இந்தியாவைப் போல, தென்னிந்தியாவில் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் பாஜக செயல்பட்டு வரும் நிலையில், கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான முதல் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. ஐதராபாத்தில் நடந்த பாஜக செயற்குழு கூட்டத்தில் தென்னக மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு நியமன எம்.பி. பதவி வழங்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டதன் அடிப்படையில் தற்போது இந்த நியமனங்கள் செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.