அதிமுக எம்எல்ஏக்கள் குறித்து சர்ச்சை கருத்து… இருகட்சியினர் இடையே வார்த்தை மோதல் : உடனடியாக விளக்கம் கொடுத்த நயினார் நாகேந்திரன்..!!

Author: Babu Lakshmanan
25 January 2022, 8:13 pm

சென்னை : அதிமுக எம்எல்ஏக்கள் குறித்து சர்ச்சை கருத்து கூறியது தொடர்பாக பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் விளக்கம் கொடுத்துள்ளார்.

தஞ்சை கிறிஸ்துவ பள்ளியில் பயின்று வந்த பிளஸ் 2 மாணவி, மதமாற்ற நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்டார். அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற போது, இறுதியாக தனக்கு நேர்ந்த கதியை அதில் வாக்குமூலமாக கூறியிருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக சார்பில் நீதி கேட்கும் போராட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்த இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் எச்.ராஜா, சிபி ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் உள்பட 300 பேர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் மாணவியின் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், உடனடியாக மதமாற்ற தடை சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட முக்கிய 4 கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.

இந்தக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பாஜக எம்எல்ஏ பேசினார். அப்போது, “சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேசக்கூடிய அதிமுகவினர் ஒருவரை கூட பார்க்க முடியவில்லை. எதிர்க்கட்சியாக இல்லாமலும் ஊடகங்களுக்கு தைரியமாக பேட்டி கொடுப்பவர் அண்ணாமலை மட்டுமே,” எனக் கூறியதாகக் சொல்லப்படுகிறது.
இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தனது கருத்து தொடர்பாக பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அதில், “இன்று வள்ளுவர் கோட்டத்தின் போராட்டத்தின் போது, அதிமுக பற்றிய என்னுடைய கருத்துக்கள் தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது! நான் கூறிய கருத்துக்கு எந்த விதமான உள்நோக்கமும் இல்லை ! போராட்டத்தின் மூலம் நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் ஒரே எண்ணம்!,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Khalid Rahman, filmmaker Ashraf Hamsa arrested for cannabis possession in Kochi கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!