கோவை ; உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், பாஜகவில் வாரிசு அரசியல் இல்லையா..? என்று திமுகவினர் கேள்வி எழுப்பியதற்கு பாஜக மகளிர் அணி தேசிய தலைவி திருமதி வானதி சீனிவாசன் பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அரை நூற்றாண்டு காலம் தி.மு.க. தலைவராக இருந்த திரு. கருணாநிதியின் பேரனும், தந்தையின் மறைவுக்குப் பிறகு தி.மு.க. தலைவராகவும், முதலமைச்சராகவும் ஆகியுள்ள திரு. மு.க.ஸ்டாலினின் மகனுமான திரு. உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகியுள்ளார். இந்திய வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றிலேயே தொடர்ந்து 54 ஆண்டுகள் ஒரு அரசியல் கட்சி, ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருப்பது தமிழகத்தில்தான். அந்த பெருமை தி.மு.க.வுக்கு மட்டும்தான்.
முதலமைச்சர் ஸ்டாலினின் மகன் என்பதால்தான் இப்படி குறுகிய காலத்தில் இந்த உயரத்தை உதயநிதி ஸ்டாலினால் எட்ட முடிந்துள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. தி.மு.க.வில் நடக்கும் இந்த வாரிசு அரசியலை சுட்டிக்காட்டினால், தி.மு.க.வில் மட்டும்தான் வாரிசு அரசியல் இருக்கிறதா?, பா.ஜ.க.வில் இல்லையா?, ராஜ்நாத் சிங், எடியூரப்பா, வசுந்தரா ராஜே சிந்தியா உள்ளிட்ட பா.ஜ.க. தலைவரின் மகன்கள் எம்.பி., எம்.எல்.ஏ.க்களாக இல்லையா? என, தி.மு.க.வினர் எதிர்கேள்வி கேட்கிறார்கள்.
மேம்போக்காக பார்த்தால் இந்த கேள்வியில் நியாயம் இருப்பது போல தோன்றும். ஆனால், அதில் எந்த நியாயமும் இல்லை. குடும்பத்தில் தந்தையோ, தாயோ அரசியலில் இருந்தால், அவர்களது வாரிசுகள் அரசியலுக்கு வரக் கூடாது என்றில்லை. நம் இந்தியா ஜனநாயக நாடு. 18 வயது பூர்த்தி அடைந்த, வாக்களிக்கும் தகுதி கொண்ட யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். தேர்தலில் போட்டியிடலாம். நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக, முதல்வராக, பிரதமராக வரலாம். அதில் எந்த தவறும் இல்லை. பா.ஜ.க.வும் அதனை தவறென சொல்லவில்லை.
ஆனால், வாரிசு அரசியல் என்பது ஒரு கட்சியின் தலைமை ஒரு குடும்பத்திடம் மட்டுமே இருப்பது. பிறப்பின் அடிப்படையில் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே கட்சியின் தலைவராக வருவதுதான் வாரிசு அரசியல். காங்கிரஸில் பண்டிட் நேரு, அவரது மகள் இந்திரா காந்தி, அவரது மகன் ராஜிவ், அவரது மனைவி சோனியா, அவரது மகன் ராகுல், இப்போது ராகுலின் சகோதரி பிரியங்கா என ஒரு குடும்பமே கட்சியை கட்டுப்படுத்துகிறார்கள்.
வேறு ஒருவர் கட்சி தலைவராக இருந்தாலும், காங்கிரஸை நேரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் வழிநடத்துகிறார்கள். மற்றவர்கள் கட்சிக்காக எவ்வளவு உழைத்திருந்தாலும், எவ்வளவு திறமை மிக்கவர்களாக இருந்தாலும், காங்கிரஸை வழிநடத்தும் தலைமை பொறுப்புக்கு வரவே முடியாது. வருவதை நினைத்து பார்க்க கூட முடியாது.
இதுபோன்ற நிலைதான் தி.மு.க.விலும் உள்ளது. 49 ஆண்டுகள் தி.மு.க. தலைவராக இருந்த கருணாநிதி மறைந்ததும், அவருக்கு இணையாக கட்சிக்காக உழைத்த மூத்த தலைவர்கள் பலர் இருந்தும், ஸ்டாலினால் தான் தலைவராக முடிந்தது. இதற்கு காரணம் கருணாநிதியின் மகன் என்பதுதானே. இதுதான் வாரிசு அரசியல். முடிவுகளை எடுக்கும், கட்சியை வழிநடத்தும் தலைமை பொறுப்பு, ஒரு குடும்பத்தினரிடம் மட்டுமே தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தால், மற்றவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்காது. இது பெரும் சமூக அநீதி. அதனைதான் பா.ஜ.க. எதிர்க்கிறது.
ஸ்டாலின் தி.மு.க. தலைவரானதும், அவர் வகித்த இளைஞரணி தலைவர் பதவி, மகன் உதயநிதிக்கு வந்துவிட்டது. நான்கு முறை, மூன்று முறை தொடர்ந்து எம்.எல்.ஏ.வாக இருக்கும், திறமையான பலர் இருந்தும், எம்.எல்.ஏ.வாகி ஒன்றரை ஆண்டுகளிலேயே உதயநிதி அமைச்சராகி விட்டார். அமைச்சரானதும் சென்னை நேரு விளையாட்டரங்கில், விளையாட்டு வீரர்களுடன் உதயநிதி கலந்துரையாடினார்.
அப்போது இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு போன்ற அமைச்சர்கள், உதயநிதியின் உதவியாளர்கள் போல உடன் இருக்கின்றனர். இதற்கு முன்பிருந்த விளையாட்டு துறை அமைச்சர் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு வந்தபோது, இப்படி மற்ற அமைச்சர்கள் உடனிருந்ததில்லை. கட்சித் தலைமையின், முதலமைச்சரின் வாரிசு என்பதால்தான் இப்படி நடக்கிறது. இந்த சமூக அநீதியைதான், வாரிசு அரசியல் என்று பா.ஜ.க. எதிர்க்கிறது.
பா.ஜ.க.வில் தலைமை பொறுப்புக்கு, ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் வருவது கிடையாது. தேசிய தலைமை மட்டுமல்ல, எந்தவொரு மாநில தலைமையிலும் வாரிசுகள் இல்லை. இதனை எப்படி வாரிசு அரசியல் என்று சொல்ல முடியும். எனவே, தங்கள் மீதான வாரிசு அரசியல் விமர்சனத்தை திசைதிருப்பும் நோக்கத்தில் அனைத்து கட்சிகளிலும், பா.ஜ.க.விலும் வாரிசு அரசியல் இருப்பதாக அவதூறு பரப்புவதை தி.மு.க. நிறுத்திக் கொள்ள வேண்டும்.
மகனை அமைச்சராக்கி, 35 பேர் கொண்ட அமைச்சரவையில் 10-வது இடத்தை அளித்துள்ள முதலைச்சர் ஸ்டாலின் அவர்கள், பட்டியலினத்தை சேர்ந்த ஒருவரை துணை முதல்வராக்கியிருக்கலாம். அல்லது பட்டியலினத்தை சேர்ந்த ஒருவருக்காவது உள்துறை, நிதி, பொதுப்பணி, தொழில், வருவாய் போன்ற முக்கிய துறைகளை கொடுத்திருக்கலாம். அப்படி செய்திருந்தால் தி.மு.க. அரசை சமூக நீதி அரசு என பாராட்டலாம்.
இனியாவது பட்டியலினத்தை சேர்ந்த ஒருவரை துணை முதல்வராக்க வேண்டும். முக்கிய துறைகளை ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு ஒதுக்க வேண்டும். சமூக நீதி, சமத்துவம் என்பதை பேச்சில் மட்டுமல்லாது, செயலிலும் காட்ட முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.