அரசு அலுவலகங்களில் ஆயுதப் பூஜை கொண்டாட தடையா..? CM ஸ்டாலினுக்கு தெரியாமல் இது நடக்க வாய்ப்பே இல்ல ; கொந்தளிக்கும் வானதி சீனிவாசன்..!!

Author: Babu Lakshmanan
20 October 2023, 4:39 pm

அரசு அலுவலகங்களில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடக் கூடாது என்பது போன்ற அரசாணைகள் வெளியாகியிருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை என்பது இந்து மத பண்டிகை என்பதை தாண்டி நாடெங்கும் மக்களின் வாழ்வியலோடு ஒன்றிவிட்ட பண்டிகை. ஆயுத பூஜை என்பது மதங்களைக் கடந்து உழைக்கும் மக்களின் கொண்டாட்டமாக மாறியுள்ளது. ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற தமிழர் பண்பாடுதான் ஆயுத பூஜை. ஆனால், சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையின்போது கடவுள்களின் படங்களைப் பயன்படுத்தக் கூடாது என தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள், நிறுவனங்கள், அரசு கல்வி நிலையங்கள் வாய்மொழி உத்தரவிட்டிருப்பதாகவும், சில அரசு துறைகள், நிறுவனங்கள் வெளிப்படையாகவே அறிவிப்பாணைகள் வெளியிட்டுள்ளதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. இது கடும் கண்டனத்திற்குரியது.

இது திமுக அரசுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்துச் சொல்லாத திமுக அரசு, இப்போது இந்து மத பண்டிகைகளை சீர்குலைக்கும் முயற்சியில் இறங்கியிருப்பது கண்டனத்திற்குரியது. நமது அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள மதச்சார்பின்மை என்பது மதங்களை மறுப்பதோ, மத பண்டிகைகளை நிராகரிப்பதோ அல்ல. மதங்களுக்கு இடையே நல்லிணக்கத்தைப் பேணுவது தான் மதச்சார்பின்மை. திமுகவில் 90 சதவீதம் பேர் இந்துக்கள் இருக்கிறார்கள் என, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே கூறியிருக்கிறார்.

அதன்படி, தமிழ்நாடு அரசுப் பணிகளிலும் 90 சதவீதம் பேர் இந்துக்களாக இருப்பார்கள். அவர்களின் மத நம்பிக்கையை மறுப்பது, கொச்சைப்படுத்துவதுதான் திமுக அரசின் மதச்சார்பின்மையா? அரசு அலுவலகங்களில் இந்து மத கடவுள்களின் படங்கள் வைத்து சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடக் கூடாது என்றால், இந்து மத கோயில்களை மட்டும் அரசே நிர்வகிப்பது எப்படி சரியாகும்? இந்து கோயில்களை நிர்வகிக்கும் மாநில அரசு, இந்து மத பண்டிகைகளுக்கு எதிராக செயல்படுகிறது. இந்த விந்தையை திமுக ஆட்சியில் மட்டும்தான் பார்க்க முடியும். தமிழ்நாட்டில் பல அரசு அலுவலகங்கள் , மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன.

கோயில் நிலத்தில் அரசு அலுவலகங்களை கட்டி விட்டு அங்கு, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையின் போது கடவுள் படங்களை வைத்து வணங்கக் கூடாது என்பது இந்துக்களின் வழிபாட்டு உரிமையை மறுக்கும் செயல். இதுபோன்ற அடக்குமுறைகளை மொகலாயர்கள் போன்ற அன்னியர் ஆட்சிகளில் தான் நடந்திருக்கிறது. நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட அன்னியர் ஆட்சியில் நடந்த கொடுமைகள் எல்லாம் திமுக ஆட்சியில் நடக்கத் துவங்கியுள்ளது.

எனவே, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜைகளை மக்கள் அவரவர் விருப்பப்படி கொண்டாட அனுமதிக்க வேண்டும். முதலமைச்சர் இதில் தலையிட்டு மக்களின் வழிபாட்டு உரிமை பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். உழைக்கும் மக்களின் கொண்டாட்டமான ஆயுத பூஜைக்கு, அனைவருக்கும் பொதுவான முதலமைச்சர் என்ற முறையில் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவிக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

  • 150 நடிகைகளுடன் தனுஷ்… சரமாரியாக தாக்கும் சுசித்ரா..!
  • Views: - 368

    0

    0