‘கோவை சிறைக்கு மிரட்டல்’… இன்னொரு தாக்குதல் சம்பவம் தாங்காது… உடனே வழக்கை NIA-க்கு மாற்றுங்க ; வானதி சீனிவாசன் கோரிக்கை!!

Author: Babu Lakshmanan
15 December 2023, 2:10 pm

தொழில் நகரமாம் கோவை இன்னொரு பயங்கரவாத தாக்குதலை தாங்காது என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X தளப்பதிவில் கூறியிருப்பதாவது :- கோவை மாநகரம் தொடர் குண்டுவெடிப்பு, கலவரங்கள் என 25 ஆண்டுகளுக்கு மேலாக பயங்கரவாதிகளின் இலக்காக இருந்து வருகிறது. தற்போது கோவை மத்திய சிறைச்சாலையில் இருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவாளர் ஆசிப் முஸ்தஹீன், சிறையிலிருந்து வெளியேறுவேன், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிற்காக தீவிரவாத வேலைகளை தொடர்வேன், அப்போது நீங்களும் இருக்க மாட்டீர்கள், சிறைச்சாலையும் இருக்காது என மிரட்டல் விடுத்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கின்றது.

ஏற்கனவே, 1998ம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பு, 2022ம் ஆண்டு நடைபெற்ற சிலிண்டர் குண்டுவெடிப்பு என பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து கோவை மீண்டு வருவதற்குள், கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி கோவைக்கு கொண்டு வரப்பட்ட 2953 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் என்ற செய்திகளால் வெளியான பதட்டம் தணிவதற்குள், தற்போது ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவாளர் கோவை மத்திய சிறைச்சாலையில் தீவிரவாத தாக்குதல் நடத்துவோம் என மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும்.

காலம் தாழ்த்தாமல் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவாளர் ஆசிப் முஸ்தஹீன் மீதான விசாரணையை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்ற வேண்டும். அப்போதுதான் முழு உண்மைகளும் விரைவாக வெளிவரும்! தொழில் நகரமாம் கோவை இன்னொரு பயங்கரவாத தாக்குதலை தாங்காது, எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ