‘இதுக்கு பேசாம வீடு வீடாக கொண்டு போய் கொடுங்க’… தமிழக அரசின் புதிய சட்டதிருத்தம் மீது வானதி சீனிவாசன் காட்டம்..!!!

Author: Babu Lakshmanan
24 April 2023, 1:05 pm

மதுபானம் குறித்து தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்ட திருத்தம் குறித்து பாஜக சட்டமன்ற உருப்பினர் வானதி சீனிவாசன் காட்டமாக பேசியுள்ளார்.

கோவை தெற்கு சட்டமன்ற சாய்பாபா காலனி பகுதிக்குட்பட்ட 69வது வார்டில் உள்ள பூங்காவை சீர்படுத்தி விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிக்கான பூஜை போடபட்டது. விளையாட்டு மைதான பணிகளை துவக்கி வைத்த கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, அங்கன்வாடி மையங்கள் பூங்காக்களுக்கு முன்னுரிமை கொடுத்து அதிகளவில் தனது தொகுதி மேம்பாட்டு நிதி செலவிடப்பட்டு வருவதாகவும், அரசு நகர்புறங்களில் கட்டிடங்கள் கட்டுவதை ஊக்குவிப்பதை விட பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றார்.

மதுபானம் குறித்து தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்ட திருத்தம் குறித்து பேசியவர், இது எங்கு சென்று முடியும் என்று தெரியவில்லை. ஒரு பக்கம் மதுக்கடைகளை படிப்படியாக குறைப்பதாக கூறிவிட்டு, திருமண மண்டபங்களில், வீடுகளில், விளையாட்டு மைதானங்களில் மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று மது அருந்திக்கொள்ளலாம் என தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது என்பது மது குடிப்பதை அரசே ஊக்குவிப்பது போல் உள்ளது, என குற்றம் சாட்டினார்.

இதற்கு டோர் டெலிவரி செய்யலாம் என காட்டமாக தெரிவித்த அவர், இது ஏமாற்று விஷயம். இது ஒரு சமூக சீரழிவை ஏற்படுத்தும் மக்களை சீரழிவை நோக்கி இழுத்து செல்லும் முயற்சியை அரசு செய்து வருகிறது. இந்த விதிவிலக்கு மற்றும் சட்ட திருத்தம் என்பதை உடனடியாக அரசு திரும்ப பெற வேண்டும். இதனை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கமாட்டோம். மதுக்கொள்கையில் இந்த அரசு நேரடியாக செய்ய முடியாததை மறைமுகமாக செய்கிறது, எனக் கூறினார்.

நிதியமைச்சர் ஆடியோ விவகாரம் தொடர்பாக பாஜகவினர் ஆளுனரை சந்தித்துள்ளனர். கவர்னர் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்வார் என நம்புகிறேன். உண்மை தன்மையை மாநில அரசே நிரூபிக்க வேண்டும். எந்த நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக சந்தேகம் எழுகிறதோ, அவர்கள் மீது சட்ட ரீதியான ஏஜென்சிகள் சோதனை செய்வது என்பது இயல்பு தான். குறிப்பிட்ட நிறுவனங்கள் என்று இல்லை. தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வரி எய்ப்பு செய்துள்ளதாக சோதனை நடத்தபடுகிறது. அதற்கான விளக்கத்தை கொடுத்தால் சோதனை முடிவுறும். இதற்காக அரசியல் கட்சியினர் நடத்தும் நிறுவனங்கள் மீது ரைடு நடத்த கூடாது என்பதை எதிர்பார்க்க முடியாது, என்றார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 363

    0

    0