இந்து வெறுப்பு கொண்ட திமுகவின் உண்மை முகம்… அம்பலப்படுத்திய முரசொலி : வானதி சீனிவாசன் தடாலடி..!!

Author: Babu Lakshmanan
15 June 2022, 2:44 pm

கட்டுரை என்ற பெயரில் மதுரை ஆதினத்திற்கு, திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் அநாகரிக வார்த்தைகளால் மிரட்டல் விடுத்திருப்பதற்கு கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிரணித் தலைவருமான வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;- திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான, ‘முரசொலி’யில், மதுரை ஆதினம் அவர்களுக்கு, கட்டுரை என்ற பெயரில், அநாகரிக வார்த்தைகளால் மிரட்டல் விடுத்துள்ளனர். மதச்சார்பற்ற அரசு, இந்து மத கோயில்கள், வழிபாட்டு முறைகள், மடங்கள், சம்பிரதாயங்களில் மட்டும் தலையிடுவதை தான், மதுரை ஆதினம் விமர்சித்திருந்தார். மதச்சார்பற்ற அரசு, இந்து மத கோயில்களை மட்டும் தங்கள் பிடியில் வைத்திருப்பது, மதச்சார்பின்மைக்கே எதிரானது என்பதால் தான், இந்து அறநிலையத் துறையை கலைக்க வேண்டும் என, மதுரை ஆதினம் அவர்கள் பேசினார். இதில் என்ன தவறு இருக்கிறது?

இந்திய நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் தனது கருத்தை தெரிவிக்க, நமது அரசியலமைப்புச் சட்டம் உரிமை வழங்கியிருக்கிறது. தமிழையும், சைவத்தையும் பல நூற்றாண்டுகளாக வளர்த்து வரும் மதுரை ஆதினத்திற்க்கு, திமுக மிரட்டல் விடுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. “காஞ்சி மடத்தில், சங்கராச்சாரியார் சுவாமிகளுக்கு நடந்தது நினைவிருக்கும் என கருதுகிறோம்” என, ‘முரசொலி’யில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் திமுக என்ன சொல்ல வருகிறது? அதுபோல, மதுரை ஆதினத்தையும் சிக்க வைத்து விடுவோம் என மிரட்டுகிறார்களா?

சட்டத்திற்கு புறம்பாகவோ, சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலோ மதுரை ஆதினம் எதுவும் பேசவில்லை. எனவே, இந்து மத துறவிகளை அவமானப்படுத்துவது, மிரட்டல் விடுப்பது போன்ற நடவடிக்கைகளை கைவிட்டு, ஆக்கப்பூர்வமாக, அனைத்து மதத்தினருக்கும் பொதுவான அரசாக, திமுக அரசு செயல்பட வேண்டும். மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லும் முதல்வர், இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்துச் சொல்வதில்லை. இந்துக்களுக்கு வாழ்த்து கூட சொல்ல மனமில்லாத, இந்து வெறுப்பு கொண்ட திமுகவின் உண்மை முகத்தை ‘முரசொலி’ வெளிப்படுத்தியிருக்கிறது.

மதுரை ஆதினம் அவர்களுக்கு விடப்பட்ட இந்த மிரட்டல், தனிப்பட்ட ஆதினத்திற்க்கு விடுக்கப்பட்டதல்ல, இந்துக்களுக்காக, இந்துக்களின் வழிபாட்டு உரிமைக்காக குரல் கொடுக்கும் போராடும் அனைவருக்கும் எதிரான மிரட்டலாகவே பார்க்க வேண்டியுள்ளது. மதுரை ஆதினம் மட்டுமல்ல, இந்துகளுக்காக போராடும் யாரும் இந்த மிரட்டலுக்கு எல்லாம் அஞ்ச மாட்டார்கள். இதனை உணர்ந்து, மிரட்டல் போக்கை கைவிட்டு, இந்து நம்பிக்கைகளில் மட்டும் தலையிடுவதை, திமுக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும், என தெரிவித்துள்ளார்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…