திமுக ஆட்சிக்கு ஆபத்தா..? முதல்வர் ஸ்டாலின் இப்படி பேசியது ஏன்..? பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் சொன்ன தகவல்!!

Author: Babu Lakshmanan
10 July 2023, 12:11 pm

எனக்கும், அண்ணாமலைக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்றும், அக்காவும், தம்பியும் சேர்ந்து கட்சியை வளர்த்துவதாக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை ராம்நகர் பகுதியில் அரசு பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- 8 முதல் 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரத்த சோகை, சர்க்கரை பரிசோதனை முகாம் கோவை தெற்குத் தொகுதியில் செய்வதற்கான திட்டம் துவங்கியுள்ளது.
மாணவிகளுக்கு நோய் கண்டறியப்பட்டால் சிகிச்சை அளிக்கவும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

கல்யாண மேடைகளை எதிர்க்கட்சிகளை திட்டவே தமிழக முதல்வர் பயன்படுத்துகிறார். ஆட்சிக்கு பங்கம் வந்தால் கூட பரவாயில்லை என முதல்வர் பேசியிருக்கிறார். அப்படி ஒரு சூழல் தமிழகத்தில் நடக்கும் என்கிற பயம் வந்துவிட்டதா..? மேலும், மோடி பயப்படுகிறார் என முதல்வர் சொல்வது, முதல்வரின் கற்பனை. டாஸ்மாக் பிரச்சனை, சட்டம், ஒழுங்கு, லஞ்சம், ஊழல் போன்றவற்றை குறித்து முதலமைச்சர் சிந்திக்க வேண்டும்.

குடியரசு தலைவருக்கு முதல்வர் கடிதம் எழுதியிருப்பது முழுவதும் கற்பனை மற்றும் உண்மையில்லாத விஷயங்கள். ஒவ்வொரு பிரச்சனைக்கும் கவர்னர் உரிய பதில் கொடுப்பதால் முதல்வருக்கு கோவம் வருகிறது. மேலும், மேடை நாகரீகம் தெரியாமல் பேசக்கூடியவர்கள் தான் திராவிட தலைவர்கள். ஆளுநர்கள் அரசியல் பேசுவது என்பது அவர்கள் வரம்பை மீறி போவதில்லை.

மேலும், எனக்கும், அண்ணாமலைக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. அக்காவும், தம்பியும் சேர்ந்து கட்சியை வளர்த்துகிறோம்.
கோவை பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளர் நிறுத்துவது குறித்து கட்சி முடிவு செய்யும், எனக் கூறினார்.

  • Mysskin controversial speech வாய திறந்தால் கெட்ட வார்த்தை…மேடை நாகரீகம் தெரியாதா…மிஷ்கினை வறுத்தெடுத்த பிரபல இயக்குனர்கள்..!