இதுக்கெல்லாம் கனிமொழி பெருமை படக்கூடாது… திராவிட மாடல் என்பவர்கள் பொங்கி எழாதது ஏன்..? நாராயணன் திருப்பதி கேள்வி

Author: Babu Lakshmanan
9 மே 2024, 4:11 மணி
Quick Share

உத்தரபிரதேச மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்து, மாநிலத்தில் தொழில் வளர்ச்சியும் அதிகரித்துள்ளதால், அந்த மாநிலத்தின் ஜிஎஸ்டி வருவாய் முதன்முறையாக தமிழகத்தை விட அதிகரித்துள்ளதாக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக இந்தியா முழுவதும் நடைபெற்று வரும் நிலையில், தென்னிந்திய மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றபோது மாநிலங்களுக்கு முறையான நிதி பகிர்வு வழங்கப்படவில்லை என்றும், இட ஒதுக்கீட்டை அடிப்படையாக வைத்தும் மத்திய, மாநில அரசுகளிடையே பிரிவினையை ஏற்படுத்திய காங்கிரஸ், தற்போது வடமாநிலங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், நிறத்தின் அடிப்படையில் இந்திய மக்களை பிளவுபடுத்தும் வகையில் தென்னிந்தியர்களை ஆப்ரிக்கர்கள் என்று கூறியுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து, அவர் பேசியதாவது :- இண்டி கூட்டணி பிரிவினைவாத முழக்கங்களை முன்வைத்து வருவது அதிர்ச்சி தருகிறது. தென்னிந்திய மாநிலங்களில் மக்களவைத் தேர்தல் நடந்தபோது நிதிப்பகிர்வு குறித்து மாநில அளவிலான பிரச்சனையை உருவாக்கியது காங்கிரஸ். இடஒதுக்கீடு குறித்து பேசி சாதி , மொழி ரீதியாகவும் பிரிவினையை ஏற்படுத்தியது இந்தி கூட்டணி.

மேலும் படிக்க: நீதிமன்ற உத்தரவுக்கு பின் மருத்துவமனை வந்த சவுக்கு சங்கர்.. மேலும் 2 வழக்குகளில் கைது : அடுத்த அதிர்ச்சி!

நேற்று காங்கிரஸ் நிறவெறி என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது. தென்னிந்தியர்கள் ஆப்ரிக்கர்களைப் போல கருப்பானவர்கள் எனக் கூறி, இந்தியர்களிடையே பிளவை ஏற்படுத்த முயல்கிறது இண்டி கூட்டணி. இதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது. திமுக, கம்யூனிஸ்ட், விசிக தலைவர்கள் இதுவரை அதற்கு கண்டனம் தெரிவிக்காததது பதவி, காசை எதிர்பார்த்து எதையும் அவர்கள் பொறுத்துக் கொள்வார்கள் என்பதைக் காட்டுகிறது.

மக்கள் மனங்களில் விசத்தை விதைப்பது தவறானது. திராவிடர்களை கருப்பர் என்றவுடன், திராவிட மாடல் என்பவர்கள் பொங்கி எழாதது ஏன்..? விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கர்நாடகத்தில் மேகதாது அணை கட்டப்படுவதை ஆதரிக்கிறது.

திமுக ஆட்சி 3 ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில், தனது ஆட்சி சொல் ஆட்சி அல்ல, செயல் ஆட்சி என்கிறார் முதல்வர், விலைவாசி, வரி, போதை, கஞ்சா, கொலைகள்தான் அதிகரித்துள்ளது. வீடுகளில் குடிநீர் இணைப்பு வழங்க பள்ளம் தோண்டுவதற்கு வீட்டு உரிமையாளர்களிடம் பணம் வசூலிக்கின்றனர். இது சட்டப்படி தவறு. ஆனால் உள்ளாட்சியில் பணம் இல்லை என்று கூறி வசூலில் ஈடுபடுகின்றனர். குடிநீர் வரிக் கட்டணம் வசூலித்தும் போதுமான நிதி இல்லை என்கின்றனர்.

திமுக நடத்திய முதலீட்டாளர் மாநாடுகள் மூலம் எவ்வளவு முதலீடு தமிழகத்திற்கு வந்துள்ளது என வெள்ளை அறிக்கை தர முடியுமா..? வேலைவாய்ப்பின்மை குறித்து காங். பொய் கூறி வருகிறது. 70 கோடி பேருக்கு இந்தியாவில் வேலை கிடைக்கவில்லை என பிரியங்கா காந்தி கூறுவது தவறான தகவல். ஆண்டுக்கு 3 கோடிக்கு மேல் வேலை கிடைத்துள்ளது என்பதே உண்மை.

உத்தர பிரதேசத்தின் ஜிஎஸ்டி வருவாய் முதன்முறையாக தமிழகத்தை விட அதிகரித்துள்ளது. காரணம் அந்த மாநில மக்களின் வாங்கும் சக்தி, தொழில் முன்னேற்றம் அதிகரித்துள்ளதுதான். உத்தர பிரதேசத்தவரை பானி பூரி, பேல் பூரி விற்பவர்கள், வடக்கன் என்று தமிழகத்தில் பேசி வந்தனர். ஆனால் அந்த மாநிலம் முன்னேற்றம் அடைந்துள்ளது. தமிழகத்தில் எளிதில் தொழில் தொடங்க முடிவதில்லை.

பல இடங்களில் கம்யூனிஸ்ட், காங்கிரசை எதிர்த்து நிற்கிறது. கம்யூ வேட்பாளர் ஆனிராஜா, வயநாட்டில் ராகுலை எதிர்த்து போட்டியிடுகிறார். அவர் உத்தர பிரதேசத்தில் ராகுலை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். 400 இடங்களை பாஜக கூட்டணி பெறும். போதுமான அளவில் பேருந்தே இல்லை. பின்னர் இலவச பேருந்து எதற்கு…?, மாதம் ஆயிரம் எல்லோருக்கும் சென்றதா இல்லை ? கல்விக் கடனை ஏன் இவர்கள் ரத்து செய்யவில்லை.

செலவு செய்ய வேண்டுமானால் முதலில் சம்பாதிக்க வேண்டும். ஓட்டுக்காக இலவசத்தை அறிவிக்கின்றனர். தொடர்ந்து இலவசத்தை அறிவிப்பது மாநிலத்தில் சர்வ நாசத்தை ஏற்படுத்திவிடும். 100 நாள் திட்ட நிதியில் 14 சதவீத நிதியை மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கியுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பிகாருக்கு கூட 5-7 சதவீதம்தான் நிதி செல்கிறது.

தமிழகம் உற்பத்தி மாநிலமாக இருந்தது. ஆனால் தமிழக ஆண்கள் உழைக்கும் நிலையில் இல்லை என்பதால்தான் 100 நாள் திட்டத்தில் அதிக பெண்கள் வேலை செய்கின்றனர். அதிக பெண்களுக்கு இத்திட்டம் மூலம் வேலைவாய்ப்பு கிடைப்பதாக கனிமொழி போன்றவர்கள் கூறுகின்றனர். ஆனால் இது பெருமையல்ல. 44 சதவீத பெண்கள் இந்தியாவில் தகவல் தொழில்நுட்பம் பயில்வதை பார்த்து நாம் பெருமைப்படலாம். ஆனால் 100 நாள் திட்டத்தில் அதிக பெண்கள் வேலை செய்கின்றனர் என்பதில் பெருமை இல்லை.

தமிழக அரசு வருவாயைப் பெருக்கும் வழியைப் பாருங்கள். தமிழகத்தின் பொருளாதார கொள்கைகள் சரியாக இல்லாததால்தான் தமிழகம் பின்தங்கியுள்ளது. மகாராஷ்டிராவில் எலக்ட்ரிக் பேருந்து கொள்முதல் செய்கின்றனர். ஆனால் தமிழகம் டீசல் பேருந்துக்காகத்தான் தற்போதும் ஒப்பந்தம் போடுகிறது. யாரும் யாரையும் அநாகரிகமாக, ஆபாசமாக பேசக் கூடாது. ஆனால் ஒரு கண்ணுக்கு வெண்ணெய், மற்றொரு கண்ணுக்கு சுண்ணாம்பா..? திமுக குறித்து பேசியதற்காக சவுக்கு சங்கரை கைது செய்தவர்கள், பிரதமர் , இந்து மதம் குறித்து அநாகரிகமாக பதிவிடுவோர் ஏன் கைது செய்யப்படவில்லை.

சவுக்கு சங்கரை சிறையில் தாக்கி இருந்தால் அது தவறு. வேலியே பயிரை மேய்வது போல் அரசு உள்ளது. திமுகவை, முதல்வரை எதிர்த்ததால் மட்டுமே அவரை தாக்கியுள்ளனர். தமிழக அரசியல் படுபயங்கரமான நிலையில் உள்ளதை காங்., மாவட்ட தலைவர் ஜெயகுமார் தன்சிங் கொலை காட்டுகிறது. அரசியலில் இருந்தால் சம்பாதிக்கலாம் என்ற போக்கு அதிகரிக்கிறது. அவரது கொலையும், பண விவகாரத்தால்தான் ஏற்பட்டுள்ளது. இன்னும் கொலையாளிகள் கைது செய்யப்படவில்லை என்பது தமிழக அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள சவால் . காசிருந்தால்தான் கட்சிப் பதவியில் இருக்க முடியும் என்ற நிலை உள்ளது. எல்லா கட்சிகளும் இதை உணர்ந்து செயல்பட வேண்டிய தருணம் இது.

இந்து மதம் என்பது மதமே இல்லை… சனாதன தர்மம்தான் இந்து. சனாதனம் என்பது வாழ்க்கை முறை என்பதை நீதிமன்றமே கூறியுள்ளது, என்று கூறினார்.

  • KASTHURI மேடை முதல் மன்னிப்பு வரை.. கஸ்தூரி விவகாரத்தில் நடந்தது என்ன?
  • Views: - 370

    0

    0