“மத்திய அமைச்சர் என சொல்லு”… ஒன்றிய அமைச்சர் எனக் கூறியதால் எதிர்ப்பு ; பேச்சை பாதியில் நிறுத்திய திமுக கூட்டணி எம்பி..!! (வீடியோ)

Author: Babu Lakshmanan
2 September 2023, 11:42 am

ஒன்றிய அமைச்சர் எனக் குறிப்பிட்டதால் திமுக கூட்டணி கட்சியின் எம்பி நவாஸ் கனிக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், மத்திய அமைச்சர் கலந்து கொண்ட கூட்டத்தில் சலசலப்பு நிலவியது.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே உள்ள மூக்கையூர் துறைமுகத்திற்கு மீனவர்களுடைய கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா மற்றும் மத்திய மீன்வளம் கால்நடை பராமரிப்புத்துறை இணை அமைச்சர் எல் முருகன், மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி ஆகியோர் வருகை தந்திருந்தனர்.

மாலை 4 மணிக்கே விழா தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இரவு 8:30 மணி அளவில் நிகழ்ச்சிக்கு வந்த மத்திய அமைச்சர் மற்றும் மத்திய இணை அமைச்சர் ஆகியோர்களை வரவேற்று பேசிய ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி மத்திய அமைச்சரை குறிப்பிடும் பொழுது, ” ஒன்றிய அமைச்சர்” என குறிப்பிட்டார்.

இதனால் அங்கிருந்த பாஜக தொண்டர்கள் நவாஸ் கனிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி, ‘மேடையில் இருந்து கீழே இறங்கு உனது பேச்சை நிறுத்து’, எனவும் கூறி, மத்திய அமைச்சர் என சொல்லுமாறு ஒருமையில் பேசி கோசமிட்டனர். இதனை அடுத்து பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தனது பேச்சை நவாஸ் கனி பாதியில் நிறுத்திக் கொண்டார்.

மேலும், அங்கு கூடியிருந்த பாஜக தொண்டர்கள் மத்திய அமைச்சர் என கூற வேண்டுமென தொடர்ந்து கூச்சலிட்டனர். இதனை அடுத்து, சூழ்நிலையை உணர்ந்த மத்திய அமைச்சர், அவரிடமிருந்து மைக்கை வாங்கி, நான் மாலை வருவதாக இருந்த நிலையில், இரவு வரை எனக்காக காத்திருந்த மீனவ மக்களை சந்திப்பதற்கு நான் இங்கு வந்துள்ளேன், நன்றி வணக்கம் என தமிழில் பேசி பேச்சை முடித்துக் கொண்டார்.

இதனை அடுத்து பேசிய மத்திய இணை அமைச்சர் எல் முருகன் அதே கருத்தை வலியுறுத்தினார். மேலும், நவாஸ் கனி, ஒன்றிய அமைச்சர் என குறிப்பிட்டு பேசிய பேச்சுக்கு அங்கிருந்த பாஜக தொண்டர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து, நவாஸ் கனி ஒழிக என கோசமிட்டபடியே இருந்தனர்.

இதனால் விழா முடிந்த நிலையில், பரபரப்பான சூழ்நிலையை அறிந்த மத்திய அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா தனது காரிலேயே நவாஸ் கனியை ஏற்றிக்கொண்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். நீண்ட நேரம் நடைபெற வேண்டிய இந்த நிகழ்ச்சி நவாஸ் கனியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக, விழா பாதியிலேயே நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பாஜக தொண்டர்களின் இந்த எதிர்ப்பை கொஞ்சமும் எதிர்பாராத நவாஸ் கனி, மேடையில் அமைச்சருக்கு நான் பேசியதில் எந்த தவறும் இல்லை என்பது போன்று தனது விளக்கத்தை அளித்தார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ