பாஜக, பாமக தலைவர்கள் EPS-க்கு முழு ஆதரவு : திண்டாட்டத்தில் OPS!!

Author: Udayachandran RadhaKrishnan
12 July 2022, 8:14 pm

ஜூலை 11 அதிமுக சிறப்பு பொதுக்குழுவை நடத்த கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்திருப்பதால் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது. ஒரு கட்சியின் செயல்பாட்டை மேம்படுத்தவும், ஏதாவது பிரச்சினை இருந்தால் அதை சரி செய்யவும் கட்சியின் பொதுக்குழுதான் விதிகளை உருவாக்கும்.

நீதிமன்ற தீர்ப்பால் ஓபிஎஸ் அதிர்ச்சி

ஒரு அரசியல் கட்சியின் உள் விவகாரங்களில் உயர்நீதிமன்றம் பொதுவாக தலையிடாது. எனவே பொதுக்குழுவுக்கு தடை கேட்கும் இந்த மனுவை ஏற்க முடியாது. வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்ற தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் அதிமுக பொதுக்குழு தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாக வழங்கியது. இது, வழக்கை தொடர்ந்த ஓ பன்னீர் செல்வத்திற்கு பேரிடியாக அமைந்தது.

அதுமட்டுமின்றி பொதுக்குழுவை எதிர்கொள்வதற்கு பதில் ஒருங்கிணைப்பாளர் பதவியில் உள்ள மனுதாரர் உயர்நீதிமன்றத்துக்கு ஓடி வந்துள்ளது, துரதிஷ்டவசமானது.
அவர் பொதுக் குழுவில் பங்கேற்று கட்சியின் வளர்ச்சிக்கு என்ன செய்யப் போகிறேன் என்பதை உறுப்பினர்களிடம் எடுத்துக் கூறி அவர்களது நம்பிக்கையையும் ஆதரவையும் பெறவேண்டும். ஆனால் கட்சி வழியாக சாதிக்க முடியாத மனுதாரர் இந்த நீதிமன்றம் மூலம் சாதிக்க முயற்சிக்கிறார்” என்று உயர்நீதிமன்றம் தெரிவித்த கருத்து ஓ பன்னீர் செல்வத்தின் தலையில் ‘நங்’கென்று கொட்டு வைப்பது போலவும் இருந்தது.

இதை ஓபிஎஸ் தனிப்பட்ட முறையில் எப்படி எடுத்துக் கொண்டார் என்பது தெரியவில்லை. ஆனால் அவருடைய ஒரு சில ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருப்பார்கள் என்பது மட்டும் நிச்சயம். தவிர இந்திய அரசியல் வட்டாரத்தில் இதுதான் தற்போது பெரும் பேசுபொருளாகியும் உள்ளது.

ஓபிஎஸ் நீக்கம்

அதேநேரத்தில் பொதுக்குழுவில், எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் ஓ பன்னீர் செல்வத்தின் பொருளாளர் பதவியும் பறிக்கப்பட்டது. அது மட்டுமின்றி கட்சியில் இருந்தும் அவர் அதிரடியாக நீக்கப்பட்டார்.

இப்படி அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஓபிஎஸ், அதிமுகவில் இனி எந்த விதத்திலும், உரிமை கொண்டாட முடியாத அளவிற்கு கட்சி ஆப்பு வைத்து விட்டது.

இந்த அதிர்வலைகளில் இருந்து ஓபிஎஸ் விடுபடுவதற்குள், அவருடைய எதிர்கால அரசியல் கணக்குகளுக்கு வேட்டு வைக்கும் விதமாக, மேலும் சில நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளன.

இபிஎஸ்க்கு குவிந்த வாழ்த்து

கடந்த 2019 நாடாளுமன்ற மற்றும் 2021 சட்டப்பேரவை தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக,பாமக, தமாகா ஆகிய கட்சிகளின் தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை அங்கீகரிக்கும் விதமாக வாழ்த்தும் தெரிவித்துள்ளனர். அதுவும் பொதுக்குழுவில் இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே வாழ்த்துச் செய்திகளை அவர்கள் தெரிவித்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்கள்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தன்னுடைய பதிவில் “சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் பணி சிறக்க எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!” என்று குறிப்பிட்டு இருந்தார்.

பாஜக வாழ்த்து

இதேபோல் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து கூறி சிறிது நேரம் பேசியும் இருக்கிறார்.

கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமியையும், ஓ பன்னீர்செல்வத்தையும் அண்ணாமலை தனிப்பட்ட முறையை சந்தித்து பேசியிருந்தார். அப்போது ஓ. பன்னீர்செல்வத்துக்கு சில அறிவுரைகளையும் அவர் வழங்கியதாக பேசப்பட்டது.

எடப்பாடி பழனிசாமிக்கு அண்ணாமலை, வாழ்த்து தெரிவித்திருப்பது மூலம், தனக்கு டெல்லி பாஜக தலைமை, கைகொடுக்கும் என்று உறுதியாக நம்பியிருந்த ஓபிஎஸ்-ன் கனவு முற்றிலுமாக தகர்ந்து போய் விட்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

அன்புமணி வாழ்த்து

இதேபோல் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது பதிவில், “அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக  அக்கட்சியின் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  அவர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!” என்று மகிழ்ச்சி பொங்க கூறியிருக்கிறார்.

இதேபோல தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன், பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என் ஆர் தனபாலன் உள்ளிட்ட பல தலைவர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.

“இதுதான் ஓபிஎஸ்க்கு மேலும் ஒரு இடியாப்ப சிக்கலாக அமைந்திருக்கிறது” என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

அதிமுக அலுவலகத்தில் ஆவணங்கள் திருட்டு

“அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் ஓபிஎஸ்சின் ஆதரவாளர்கள் சென்னை ராயப் பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தின் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றதுடன் அங்கிருந்த கம்ப்யூட்டர்களை அடித்தும் நொறுக்கினர். கட்டுக்கட்டாக ஆவணங்களையும் அவர்கள் அங்கிருந்து எடுத்துக் கொண்டு ஒரு வேனில் தப்பி சென்றனர். இது அனைத்து தொலைக்காட்சி செய்தி சேனல்களிலும் நேரடியாக ஒளிபரப்பாகி பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

வேதனையில் அதிமுகவினர்

இந்த சம்பவங்கள் நடந்த சிறிதுநேரம் கழித்து ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அங்கு கதவுகள் உடைக்கப்பட்டு பொருட்கள் சூறையாடப்பட்டது பற்றி அவர் கவலைப்படாமல் தனது ஆதரவு நிர்வாகிகள் சிலருடன் பால்கனி பகுதிக்கு சென்று அதிமுக கொடியை காட்டினார். இந்த இரண்டு சம்பவங்களும் அதிமுக தொண்டர்களின் மனதில் ரண வேதனையை ஏற்படுத்தி உள்ளது. கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்த ஒருவர் இதுபோல நடந்து கொண்டதை அவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை.

அதிமுக தலைமை அலுவலகம் பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட காரணமாக இருந்த ஓபிஎஸ்சையும் அவருடைய ஆதரவாளர்களையும் ஒருபோதும் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்கவே செய்யாது. கட்சியில் செல்வாக்கை இழந்துவிட்டதால் ஆத்திரத்தின் உச்சியில் ஓபிஎஸ் இப்படி நடந்து கொண்டிருக்கிறார். இது அதிமுகவின் கூட்டணியினரையும் வேதனை அடையச் செய்து விட்டது.

திமுகவுடன் மறைமுக உறவு?

திமுகவுடன் மறைமுகமாக கைகோர்த்துக்கொண்டு ஓ பன்னீர்செல்வம் இந்த மோசமான செயலில் ஈடுபட்டுள்ளார் என்பது இதன் மூலம் வெளிப்பட்டு இருப்பதும் அந்த தலைவர்களுக்கு நன்கு புரிகிறது.

அதனால்தான் டாக்டர் ராமதாஸ், அண்ணாமலை, ஜி.கே.வாசன் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் தலைவர்கள் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்கள்.

ஓபிஎஸ் டாட்டா காட்டும் அரசியல்

இதன்மூலம் இன்னொரு விஷயத்தையும் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். எடப்பாடி பழனிசாமி தலைமையை அவர்கள் முழுமனதோடு அங்கீகரித்து இருக்கிறார்கள், என்பதுதான் அது.

அதிமுக தொண்டர்களின் வெறுப்பை முழுமையாக சம்பாதித்துள்ள ஓபிஎஸ் இனி ஒரு போதும் அரசியலில் தேறமாட்டார், அவரை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லை என்பதை நன்றாக புரிந்து கொண்டு பாஜக, பாமக, தமாகா தலைவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் நிச்சயமாக நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தும். அது அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும்” எனவும் அந்த அரசியல் நோக்கர்கள் நம்புகின்றனர்.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 813

    0

    0