அடுத்தடுத்து கொலைகள்… மயான அமைதி… இதைத் தான் சொல்கிறதோ திமுக அரசு..? பாஜக கடும் விமர்சனம்!!
Author: Babu Lakshmanan28 April 2023, 9:36 pm
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்ற ஒன்று இருக்கிறதா… ? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;- நான் தற்போது கர்நாடக மாநில தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழகத்தில் நடக்கும் சம்பவங்கள் மிகுந்த அதிர்ச்சியையும், காவல்துறையின் மீது, அரசின் மீது நம்பிக்கையின்மையையும் அதிகரிக்கச் செய்கிறது.
முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் திரு லூர்து ஃப்ரான்சிஸ் அவரது அலுவலகத்திலேயே வைத்து மணல் கொள்ளை ரவுடிகளால் வெட்டி கொலை செய்யப்பட்டதும், பாஜக பட்டியல் அணி மாநில பொருளாளர் திரு.PPGD.சங்கர் அவர்கள் ரவுடிகளால் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்ட கொடூரச்செயலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது என்பதையே காட்டுகிறது.
கிராம நிர்வாக அலுவலர் லூர்து ஃப்ரான்சிஸ் மற்றும் PPGD.சங்கர் ஆகிய இருவருக்கும் ஏற்கனவே அச்சுறுத்தல் இருப்பது காவல்துறைக்கு நன்கு தெரிந்திருந்தும், இருவரின் கொலை நடந்திருப்பதை பார்க்கும் போது காவல்துறை சுதந்திரமாக செயல்படுகிறதா? அல்லது, ஆட்சியாளர்களின் கட்டளைக்காக காத்திருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது.
முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்கள் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது, சாதிய மத மோதல்கள் நடக்கவில்லை, மேலும் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது என்றெல்லாம் சில நாட்களுக்கு முன்பாக தமிழக சட்டசபையில் பேசினார். ஆனால் நிதர்சனம் என்ன என்பதற்கு நடந்திருக்கும் படுகொலைகளே சாட்சி. ஒருவேளை அமைதிப் பூங்கா என்பதை, தொடர்ந்து அடுத்தடுத்து பல படுகொலைகள் நடந்து அதனால் ஏற்படும் மயான அமைதியைத் தான் சொல்கிறதோ ஆளும் அரசு?
சாமானியர்கள், அரசுப் பணியாற்றும் அலுவலர்கள், அரசியல்வாதிகள் என அனைத்து மட்டத்தில் இருப்போரின் பாதுகாப்பும் கேள்விக்குரியாக இருப்பதால் அரசு அலட்சியம் காட்டாமல் சட்டம் ஒழுங்கை சீராக்கவும், காவல்துறை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் செயலாற்றிடவும் கவனம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
பாஜக பட்டியல் அணி மாநில பொருளாளர் திரு.PPGD.சங்கர் அவர்கள் கொலையில் சம்மந்தப்பட்ட குற்றாவாளிகள் விரைவில் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க செய்திட தமிழக அரசும், காவல்துறையும் முனைப்பு காட்டிட வேண்டும் என்று வலியுறுத்திட கடமைப்பட்டுள்ளேன், என தெரிவித்துள்ளார்.
0
0