திமுக எம்பி ஆ.ராசா பற்றிய கேள்விக்கு காது கேட்காதா..? அமைச்சர் சேகர் பாபுக்கு பார்சல் மூலம் பதிலடி கொடுத்த பாஜக..!!

Author: Babu Lakshmanan
19 September 2022, 1:40 pm

திமுக எம்பி ஆ.ராசா குறித்த கேள்விக்கு காது கேட்கவில்லை என்பதை போல சைகை காட்டிய அமைச்சர் சேகர் பாபுக்கு புதுக்கோட்டை பாஜகவினர் பதிலடி கொடுத்துள்ளனர்.

திமுக எம்பி ஆ.ராசா இந்துக்கள் குறித்து அவதூறாக பேசுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அதில், ஹிந்துவாக இருக்கிற வரை நீ சூத்திரன்; சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்; ஹிந்துவாக இருக்கிற வரை நீ பஞ்சமன்; ஹிந்துவாக இருக்கிற வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள் என்கின்ற கேள்வியை உரக்க சொன்னால் தான் அது சநாதனத்தை முறியடிக்கின்ற அடிநாதமாக அமையும் என்பதை விடுதலையும், முரசொலியும், திராவிட முன்னேற்ற கழகமும், திராவிடர் கழகமும் எடுக்க வேண்டிய காலம் வந்து விட்டது என பேசியிருந்தார்.

அவரது இந்தப் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, இந்து முன்னணியினர் திமுக எம்.பி. ஆ.ராசாவை மீது காவல்நிலையங்களில் புகார் அளித்ததுடன், அவரைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தையும் நடத்தினர். மேலும், தொடர்ந்து இந்து மதத்தை அவமதித்து வரும் ஆ.ராசா மீது கட்சி ரீதியான நடவடிக்கையை முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.

இருப்பினும், ஆ.ராசாவின் பேச்சு குறித்து அவரது சொந்தக் கட்சியினரே விளக்கம் கொடுக்காமல் விலகி நிற்கின்றனர். அண்மையில், ஆ ராசா இந்துக்கள் தொடர்பாக பேசியதற்கு அமைச்சர் சேகர்பாவிடம் கருத்து கேட்டபோது, இரண்டு முறை கேள்வி கேட்கப்பட்டும் கேள்வியே தன் காதில் விழவில்லை என சைகையால் காண்பித்து, கைகூப்பி வணங்கி செய்தியாளர் சந்திப்பை முடித்துக் கொண்டார். அமைச்சரின் இந்த செயல் கடும் விமர்சனத்திற்கு ஆளானது.

அமைச்சர் சேகர் பாபுவின் செயலைக் கண்டிக்கும் விதமாக, புதுக்கோட்டை பாஜகவினர் பதிலடி கொடுத்துள்ளனர். அதாவது, 7 ஆயிரம் மதிப்புள்ள காது கேட்கும் கருவியை அமைச்சர் சேகர் பாபுவுக்கு தபால் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்
  • Close menu