காரில் சென்று கொண்டிருந்த எச்.ராஜா திடீர் கைது… காரணம் இல்லாமல் கைது செய்ததாக புகார்… !!
Author: Babu Lakshmanan18 May 2022, 8:46 pm
பழனியில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்த பாஜக பிரமுகர் எச்.ராஜாவை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இந்து ஆலய பாதுகாப்பு குழு சார்பில் பழனி இடும்பன் கோவில் குளக்கரையில் மகா சங்கமம் ஆரத்தி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தனர். இந்த நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளராக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச். ராஜா மற்றும் மன்னார்குடி செண்டலங்கர ஜீயர் ஆகியோர் கலந்து கொள்ள இருந்தனர்.
பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா இன்று பரபரப்பு டுவிட் ஒன்றை போட்டிருந்தார். அதில், “தற்போது நான் பழனியிலுள்ள இடும்பன் குளத்திற்கு ஆரத்தி வைபவத்தில் கலந்து கொள்ள வரும் வழியில் திண்டுக்கல் எஸ்.பி அவர்களால் எவ்வித காரணமும் கூறாமல் கைது செய்யப்பட்டுள்ளேன். (சத்திரப்பட்டி அருகில்) அருகாமையில் உள்ள இந்து உணர்வாளர்களை சந்திக்க விரும்புகிறேன்,” என்று தெரிவித்திருந்தார். இது பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், உரிய அனுமதி பெறாமல் அந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாகவும், பக்தர்கள் எத்தனை வாகனங்களில் வருகை தருவார்கள் என்ற விபரம் அளிக்கவில்லை என கூறி மகா சங்கமம் ஆரத்தி நிகழ்ச்சிக்கு காவல் துறை அதிரடியாக அனுமதி மறுத்தது. இதையறிந்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா போலீசாரின் உத்தரவை மீறி இந்த நிகழ்ச்சியை தலைமையேற்று நடத்த போவதாக அறிவித்துவிட்டு சம்பவ இடம் நோக்கி வந்துள்ளார்.
இதையடுத்து, பழனி உட்கோட்ட காவல் பிரிவு எல்லை சத்திரப்பட்டியில் வைத்து, திண்டுக்கல் போலீசார் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவை கைது செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், அவர் விடுதலை செய்யப்பட்டார்.