தமிழக பாஜக திடீர் ‘அட்டாக்’… எகிறி அடிக்கும் அண்ணாமலை… அலறித் துடிக்கும் திருமா.,!!
Author: Babu Lakshmanan15 April 2022, 5:40 pm
பாஜக – விசிக மோதல்
அம்பேத்கரின் 132-வது பிறந்த நாளையொட்டி, நடந்த மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிகளில் சென்னை,புதுக்கோட்டை, சேலம் உள்ளிட்ட பல நகரங்களில் பாஜகவினரும், திருமாவளவனின் விடுதலைகள் சிறுத்தைகள் கட்சியினரும், மோதிக்கொண்டது, தமிழக அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.
குறிப்பாக, சென்னை கோயம்பேட்டில் அம்பேத்கரின் சிலைக்கு திருமாவளவன் மாலை அணிவித்து விட்டு சென்ற சிறிது நேரத்தில் அங்கு மத்திய இணை அமைச்சர் எல் முருகன், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் தொண்டர்களுடன் வந்துள்ளனர். அதற்காக ஏற்கனவே அந்த பகுதியில் பாஜக கொடிக்கம்பங்களும் நடப்பட்டிருந்தது.
அப்போது அங்கிருந்த விசிகவினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கொடி கம்பங்களை பிடுங்கி வீசி எறிந்ததாகவும் பாஜக கொடிகளை தரையில் போட்டு மிதித்ததாகவும் கூறப்படுகிறது. தவிர அண்ணாமலைக்கு எதிராகவும் அவர்கள் முழக்கமிட்டனர்.
அப்போதுதான் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு கைகலப்பும் கல்வீச்சும் நடந்துள்ளது. இதில் பாஜக நிர்வாகிகள் 3 பேரின் மண்டை உடைந்தது. இதேபோல் விசிகவினர் 2 பேரும், ஒரு போலீஸ்காரரும் காயமடைந்துள்ளனர்.
பொங்கிய திருமா.,
இந்த மோதலை கேள்விப்பட்ட திருமாவளவன், பாஜகவை கண்டித்து வெளியிட்ட அறிக்கையில், “கோயம்பேடு அம்பேத்கர் சிலையில் நான் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்திவிட்டு திரும்பினேன். அப்போது அங்கே குழுமியிருந்த பாஜகவினர் பாரத் மாதாகி ஜே என கூச்சலிட்டுக்கொண்டே திடீர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். திட்டமிட்டு ரவுடிகளை ஏவி வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ள சனாதனக் கும்பலான பாஜகவினரைக் கைதுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
புரட்சியாளர் அம்பேத்கரின் சமத்துவக் கொள்கைக்கு நேரெதிரான சனாதன கொள்கையைக் கொண்ட பாஜகவினருக்கு அம்பேத்கரின் சிலைகளுக்கு மாலை அணிவிக்க அருகதை இல்லை. இந்த நாடக அரசியலை மக்களிடம் அம்பலப்படுத்துவோம்”என்று பொங்கி இருந்தார்.
அண்ணாமலை பதிலடி
மாநில பாஜக தலைவர் அண்ணாமலை உடனடியாக திருமாவளவனுக்கு பதிலடி கொடுத்தார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, திருமாவளவனின் பெயரைக் குறிப்பிடாமல் “அம்பேத்கர் பிறந்தநாளில் பாஜக மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை வழங்கி கொண்டாடியுள்ளது. சென்னை கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனையில் பிறந்த 21 குழந்தைகளுக்கு தமிழ்ப் புத்தாண்டு மற்றும் அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு தங்க மோதிரம் வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல மாநிலம் முழுவதும் அம்பேத்கர் ஜெயந்தியை தமிழக பாஜக கொண்டாடி உள்ளது.
விசிக தொண்டர்கள் மீது எப்போதும் எங்களுக்கு காழ்ப்புணர்ச்சி இல்லை. ஆனால் சில தலைவர்கள் அவர்களை தவறாக வழி நடத்துகின்றனர். அண்ணல் அம்பேத்கர் பெயரை வைத்துதான் அரசியல் வியாபாரம் செய்ய முடியும் என்னும் நிலைக்கு சில கட்சிகளின் தலைவர்கள் உருமாறி இருக்கின்றனர். அப்படிப்பட்டவர்களை திருத்த முடியாது. சிறுத்தை குட்டிகள் செய்ததை அம்பேத்கர் கூட ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார். எங்கள் கட்சியினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை காவல்துறையினர் வேடிக்கை பார்த்தது, துரதிஷ்டவசமானது.
அம்பேத்கரின் சித்தாந்தத்தை முழுமையாக பின்பற்றுகின்ற கட்சிதான் பாஜக.
அம்பேத்கருக்காக அவர் தொடர்புடைய டெல்லி, மும்பை, லண்டன் உள்ளிட்ட 5 நகரங்களில் மக்கள் மண்டபங்களை மோடி அரசு அமைத்து பெருமை சேர்த்துள்ளது.
ஒருபோதும் வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது. ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை அன்புக்காக காட்டும் கட்சியாக பாஜக உள்ளது” என்று குறிப்பிட்டார்.
இப்படி இரு கட்சிகளின் தலைவர்களும் வெளிப்படையாகவே மோதிக் கொண்டிருப்பது, தமிழக அரசியல் களத்தை அனல் பறக்க செய்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே, தமிழகத்தில் பொது இடங்களில் இதுபோல் பாஜகவினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் மோதிக் கொள்வதை காண முடிகிறது. இதற்கான காரணம் என்னவாக இருக்கும்?…
செல்வாக்கு அதிகரிப்பு
இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் கூறும்போது “மோடியின் அமைச்சரவையில் தற்போது தலித் வகுப்பைச் சேர்ந்த 12 பேர், பழங்குடியினர் 8 பேர், பிற்படுத்தப்பட்டோர் 27 பேரும் இடம் பிடித்துள்ளனர். இவர்கள் மோடி அரசு, தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கு நிறைவேற்றி வரும் நலத்திட்டங்களையும், அண்ணல் அம்பேத்கரின் புகழைப் பரப்புவதற்காக அர்ப்பணிப்புடன் எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகளையும் நாடு முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் தலித்துகள், பழங்குடியின மக்களிடையே பாஜகவின் செல்வாக்கு அதிகரித்திருப்பது கண்கூடு. இவர்களில் பெரும்பாலானோர் முன்பு காங்கிரஸ், கம்யூனிஸ்டு, மாநில கட்சிகளை ஆதரித்தவர்கள். இது தேர்தலில் வாக்குகள் ரீதியாக பாஜகவுக்கு நல்ல பலனைத் தரவும் தொடங்கி இருக்கிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை எம்பியாக இல்லாத நிலையிலேயே பட்டியலின வகுப்பைச் சேர்ந்த எல் முருகனுக்கு மத்திய அமைச்சரவையில் பிரதமர் மோடி பதவி வழங்கிய பிறகு அவரும் கிராமங்கள் தோறும் இதில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அண்ணாமலையும் மாநில பாஜக தலைவராக பதவியேற்ற பின்பு அனைத்து வகுப்பு மக்களிடையேயும் மிகுந்த தோழமையும், நட்பும் பாராட்டத் தொடங்கி இருக்கிறார். அது மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள 13 ஆயிரம் கிராமங்களிலும் பாஜகவை வளர்க்க சூறாவளி சுற்றுப் பயணங்கள் மூலம் தீவிர நடவடிக்கையும் எடுத்து வருகிறார்.
தலித்துகளின் பாதுகாவலர்
தமிழகத்தில், தான் மட்டுமே தலித்துகளின் பாதுகாவலர், அம்பேத்கர் புகழை பரப்ப முழுத் தகுதி பெற்றவர் என்று கருதிக்கொள்ளும் திருமாவளவன் போன்றவர்களுக்கு இது பெருத்த அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் திமுக கூட்டணியின் அபார வெற்றிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் 5 சதவீத வாக்குகளும் முக்கிய காரணமாகும்.
தனது வாக்கு வங்கியை தமிழக பாஜக அப்படியே கபளீகரம் செய்து விடுமோ? என்ற அச்சமும், கலக்கமும் தற்போது திருமாவளவனுக்கு வந்துள்ளது. 2024 தேர்தலில்
இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் அவர் கருதுகிறார். அப்படியொரு நிலை ஏற்பட்டால் எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி 20 இடங்களில் வெற்றி பெறுவது கூட கடினமாக இருக்கும்.
இதை திமுக தலைமையும் நன்றாக உணர்ந்துள்ளது. எனவேதான் விசிகவால் ஏற்படும் இழப்பை சரிகட்ட பாமகவை தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவர திமுக நினைக்கிறது என்கிறார்கள்.
மேலும் மத்திய அரசின் நலத் திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறது என்று கடுமையாக விமர்சனம் செய்யும் அண்ணாமலை கோவையில் உள்ள ஒரு ரேஷன் கடையில், பிரதமர் மோடியின் போட்டோவை, முதலமைச்சர் ஸ்டாலின் போட்டோவுக்கு மேலாக வைத்து அதிரடியும் காட்டி இருக்கிறார். அவ்வப்போது நடக்கும் திமுக அரசின் முறைகேடுகளையும் அம்பலப்படுத்துகிறார்.
தவிர ஆளுநர் ரவி 11 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காததற்கு காரணம் கூறி எழுதிய கடிதங்களை திமுக அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிடுமா? என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார். இதனால் திமுக தலைவர்களும் திகைத்துப் போய் இருக்கிறார்கள் என்பதே நிஜம். எனவே 2024 தேர்தலுக்கு தமிழக பாஜக இப்போதே தயாராகி விட்டதை உணர முடிகிறது “என்று அந்த அரசியல் விமர்சகர்கள் காரணங்களை அடுக்கினர்.