திமுகவில் ஒன்றரை கோடி பேர் இருங்காங்களாம்… வெறும் 50 லட்சம் கையெழுத்து வாங்க முடியாதா..? வேலூர் இப்ராஹீம் கேள்வி..!!

Author: Babu Lakshmanan
30 November 2023, 4:14 pm

நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று தெரிந்தும் திமுகவினர் அரசியலுக்காக செய்கிறோம் என்று அமைச்சர் கேஎன் நேருவே கூறி விட்டதாக பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு நீட் தேர்வு விலக்கு வேண்டும் என்பதற்காக 50 லட்சம் கையெழுத்து வாங்கப்படும் என்று கூறியிருந்தனர். அதன்படி, தற்போது கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுகவினர் நீட் தேர்வு விலக்கு தொடர்பான கையெழுத்துக்களை அரசு பள்ளிகளுக்கு சென்று சிறுவர் சிறுமிகளிடம் வாங்குவதாக இருந்த குற்றச்சாட்டின் பேரில், நடவடிக்கை எடுக்க கோரி பாஜக சார்பில் அக்கட்சியின் சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தலைமையில் 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வந்தனர்.

உரிய அனுமதி பெற்ற பிறகே மனு கொடுக்க வந்த பிறகும், இரண்டு மணி நேரமாக பாஜகவினரை ஆட்சியர் சந்திக்காமல் புறக்கணித்ததாக கூறப்படுகிறது

இதனால் அதிருப்தி அடைந்த பாஜகவினர் வேலூர் இப்ராஹிம் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கீழே ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாகனத்திற்கு அருகே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. அரை மணி நேரமாக இந்த போராட்டமானது நீடித்தது.

இதனை தொடர்ந்து, காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட ஆட்சியர் சந்திப்பதற்காக அவர்களை அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வேலூர் இப்ராஹிம் கூறியதாவது :- நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று தெரிந்தும் திமுகவினர் கையெழுத்து இயக்கம் என்ற பெயரில் நாடகம் நடத்தி வருகின்றனர். கையெழுத்து இயக்கத்தை அவர்கள் அரசியல் கட்சியினர், பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் ஆகியோர் இடம் பெறலாம் அல்லது ஒன்றரை கோடி உறுப்பினர்கள் இருப்பதாக கூறும் திமுக 50 லட்சம் கையெழுத்தை தொண்டர்களிடம் வாங்கி குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம்.

அதை விட்டுவிட்டு அரசு பள்ளிகளில் படிக்கும் இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு மாணவ, மாணவிகளிடம் நீட் தேர்வு ரத்திற்காக கையொழுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் வாங்கப்படுகிறது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக நாங்கள் வந்தோம். ஆனால் மாவட்ட ஆட்சியர் எங்களை சந்திப்பதற்கு தயாராக இல்லை. எங்களை புறக்கணித்தனர். இதனை தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட பிறகு தற்போது எங்களை மாவட்ட ஆட்சியரை சந்திப்பதற்காக காவல்துறையினர் மற்றும் தாசில்தார் அழைத்துச் செல்கின்றனர்.

நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று தெரிந்தும் திமுக தற்போது நாடகம் நடத்தி வருகிறது. இதை நாங்கள் அரசியலுக்காக தான் செய்கிறோம் என்று அமைச்சர் கே என் நேருவே சமீபத்தில் கூறியுள்ளார். அரசியல் நாடகம் நடத்துவதற்கு சிறுவர், சிறுமிகளா..? கிடைத்தனர். இதனை உடனடியாக திமுக நிறுத்தாவிட்டால் பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும், என்றார்

  • Anirudh updates on Vidamuyarchiஅனிருத் வெளியிட்ட “விடாமுயற்சி” மாஸ் அப்டேட்…அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!
  • Views: - 401

    0

    0