குஷ்புவுக்கு அங்கீகாரம் வழங்கிய பாஜக : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டு!!
Author: Udayachandran RadhaKrishnan27 February 2023, 2:18 pm
சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை குஷ்பு இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் திறமை கொண்டு பின்னர் அரசியலிலும் இணைந்தார்.
திமுகவில் கடந்த 2010 ஆம் ஆண்டு இணைந்தார். பின்னர் 2014 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் நட்சத்திர பேச்சாளராக இருந்தார்.
திமுகவில் கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக கடந்த 2014ஆம் ஆண்டு குஷ்பு அக்கட்சியிலிருந்து வெளியேறினார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
2016, 2019 ஆம் ஆண்டு சட்டசபை, நாடாளுமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் செய்திருந்த குஷ்பு, பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை கடுமையாக தாக்கி பேசியிருந்தார்.
பின்னர் காங்கிரஸ் கட்சியுடனும் ஏதோ மனக்கசப்பு ஏற்பட்டு வெளியேறினார். அவர் திமுகவிலேயே திரும்பவும் இணைவார் என சொல்லப்பட்ட நிலையில் அவர் பாஜகவில் இணைந்தார்.
சுமார் 3 ஆண்டுகளாக பாஜகவில் உள்ள குஷ்பு 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பின்னர் அவருக்கு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டது.
தமிழக அரசியல் நிலவரம் குறித்து பாஜக தேசிய தலைமை கேட்கும் நபர்களில் குஷ்புவும் ஒருவர். தொடர்ந்து எங்கு அநியாயம் நடந்தாலும் தட்டி கேட்பார்.
பாஜக ஆளும் மாநிலங்களில் தவறு நடந்தால் அதையும் சுட்டிக் காண்பித்து தட்டிக் கேட்கும் ஆளுமை கொண்டவர் குஷ்பு. குஜராத்தில் சமீபத்தில் நடந்த பில்கிஸ் பானு வன்கொடுமை குற்றவாளிகள் விடுதலையான போது பாலியல் கொடுமைக்குள்ளாக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என குரல் கொடுத்தவர்.
அது போல் பெரியார் சிலை உடைப்பு, காவி பூசுதல் என எந்த விஷயம் நடந்தாலும் சரி முதல் ஆளாக ஓடி வந்து குரல் கொடுப்பது குஷ்புதான். இப்படிப்பட்ட குஷ்புவுக்கு இன்று தேசிய அளவில் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து குஷ்பு கூறுகையில் தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராக நியமிக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை, பெண்களுக்கான சுயமரியாதையின்மை ஆகியவற்றை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன்.
அந்த வகையில் தற்போது எனக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் போராடுவோம் என தெரிவித்தார்.
குஷ்புவுக்கு தமிழக பாஜக அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் அண்ணாமலை கூறியிருப்பதாவது: தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட குஷ்புவுக்கு தமிழக பாஜக சார்பில் வாழ்த்துகள். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமையை எதிர்த்து தொடர்ந்து போராடிய குஷ்புவுக்கு கிடைத்த அங்கீகாரம் என அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.