என் மண் என் மக்கள் யாத்திரை மூலம் தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் : அண்ணாமலை நம்பிக்கை!
Author: Udayachandran RadhaKrishnan23 February 2024, 10:59 am
என் மண் என் மக்கள் யாத்திரை மூலம் தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் : அண்ணாமலை நம்பிக்கை!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்று வரும் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை கோவை மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் நடைபெற்றது.
பழையூர் பகுதியில் துவங்கிய யாத்திரை சித்தாபுதூர் பகுதியில் நிறைவு பெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன், மத்திய இணை அமைச்சர்கள் எல்.முருகன், ராஜீவ் சந்திரசேகர், பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் மற்றும் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
யாத்திரையின் நிறைவாக சித்தாபுதூர் அருகே பிரம்மாண்ட பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட வானதி சீனிவாசன் பேசுகையில்,’பெண்கள் முன்னேற்றத்திற்காக மத்திய பாஜக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. பெண் குழந்தைகளை போற்றுவோம் திட்டம், சுகன்யா சம்ரிதி திட்டம் என பல்வேறு திட்டங்களில் தமிழகம் பெரும் பயன் அடைந்துள்ளது.
இவற்றோடு பெண்களின் பொருளாதார நிலையை முன்னேற்றும் விதமாக நாட்டின் மூன்று கோடி பெண்களை லட்சாதிபதிகளாக ஆக்குவேன் என பிரதமர் உறுதி அளித்து, இப்போது 2 கோடி பெண்களை லட்சாதிபதியாக உருவாக்கியுள்ளார். பெண்களை வாக்கு வங்கியாக பிரதமர் எப்போதும் பார்ப்பதில்லை.
கட்சியின் வேட்பாளர் பட்டியல் தயாராகும்போது எத்தனை பெண்கள் அதில் இருக்கிறார்கள் என கேட்பார். பெண்கள் அரசியலில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் விதமாக 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியுள்ளார்’ என கூறினார்.
இதனை அடுத்து பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது,
‘என் மண், என் மக்கள் யாத்திரையின் மூலம் பாஜக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் கொண்டு செல்வதோடு, தமிழகத்தை ஆளும் திமுக அரசின் குறைகளையும் ஊழல்களையும் மக்களிடம் எடுத்துக் கூறி வருகிறோம். இதற்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது.
வேல் யாத்திரையின் மூலம் எப்படி நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைத்தார்களோ, அதே போல் இந்த யாத்திரையின் மூலம் தமிழக மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்பது உறுதியாகி உள்ளது.
இளைஞர்கள், பெண்கள், வியாபாரிகள், விவசாயிகள், தொழில் முனைவோர் என அனைவர் மத்தியிலும் இந்த யாத்திரைக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக நமது நாட்டை மிகவும் வேகமாக வளர்ச்சி பாதையில் கொண்டு சென்று வருகிறார்.2047 ஆம் ஆண்டில் இந்தியா வல்லரசு நாடாக உருவாக வேண்டும் என்கிற இலக்கை நோக்கி நமது நாடு பயணித்து வருகிறது.
இலவச வீடு திட்டம், இலவச கேஸ் திட்டம், ஜல்ஜீவன் திட்டம் என பல்வேறு திட்டங்கள் ஏழை எளிய மக்களின் மேம்பாட்டுக்காக சிறப்பாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.தமிழகத்திற்கு 5 வந்தே பாரத் ரயில் சேவை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக கோயம்புத்தூரில் இருந்து 2 வந்தே பாரத் ரயில் சேவை இயங்கி வருகிறது.
இந்தியாவில் உத்திரபிரதேசம் மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்கள் மட்டுமே பாதுகாப்பு தளவாடங்களுக்கான உற்பத்தி மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மாநிலங்களின் வளர்ச்சி தான் ஒட்டுமொத்த பாரதத்தின் வளர்ச்சி என பிரதமர் செயல்பட்டு வருகிறார்.பிரதமர் மோடி அவர்கள் மூன்றாவது முறையாக, ஹாட்ரிக் சாதனையாக, 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் ஆவது உறுதியாகி உள்ளது.
தமிழகத்திலிருந்து 40 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்கும் பணிகளை நாம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்’ என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது,’சிறு குறு தொழில்களுக்கு புகழ் பெற்ற மாவட்டமாக கோவை மாவட்டம் உள்ளது. முத்ரா கடன் உதவி திட்டத்தின் மூலம் அதிகமாக பயனடைந்த மாவட்டமாக கோவை உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் உதிரி பாகங்கள் உலகம் முழுவதும் அனுப்பப்படுகின்றன.
கோயம்புத்தூர் மக்கள் என்றைக்குமே பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக இருந்துள்ளனர். உண்மையான அரசியல் சூழலை அறிந்து கொண்டு செயல்படுபவர்கள் கோவை மக்கள்.
2024 ஆம் ஆண்டும் கோவை மக்கள் பாஜக வேட்பாளரை வெற்றி பெறச் செய்வார்கள்.வரும் 27 ஆம் தேதி பல்லடத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பிரம்மாண்ட பொது கூட்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதனை பாரதிய ஜனதா கட்சியினர் ஒவ்வொருவரும் தங்களது குடும்ப நிகழ்வாக கருதி, பெரும் எண்ணிக்கையில் கலந்து கொள்ள வேண்டும்.
கட்சியில் உழைப்பவர்களை கண்டறிந்து பொறுப்புகளை வழங்கும் கட்சியாக பாஜக உள்ளது. சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து, கட்சியில் உழைத்து பல்வேறு பதவிகளை அடைந்து இரண்டாவது முறையாக ராஜ்யசபா உறுப்பினராக எல்.முருகன் அவர்கள் பொறுப்பேற்றுள்ளார்.
அதேபோல் வரும் தேர்தல்களில் பாஜக உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் சட்டமன்ற உறுப்பினர்களாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் வரலாம். எல்லோருக்கும் வாய்ப்பு இருக்கிறது என்பதை பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து உணர்த்திக் கொண்டு வருகிறது.தமிழக சட்டமன்றத்தில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் சிறப்பாக கேள்விகளை எழுப்பி வருகிறார்.
பிற சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்கள் செயல்படாத நிலையில் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் ஐஎஸ்ஓ தர சான்றிதழ் பெற்று சிறப்பித்துள்ளது. வானதி சீனிவாசன் அவர்களிடம் அவரது அலுவலகத்தில் கொடுக்கப்படும் பொதுமக்களின் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்காகவே ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் அரசியல் சூழல் மாறி வருவதை உணர முடிகிறது. மக்கள் மத்தியில் பாஜகவிற்கு பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. பாஜக தொண்டர்கள் மத்திய பாஜக அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்று, வரும் நாடாளுமன்ற தேர்தலில் அவர்கள் அனைவரையும் பாஜகவிற்கு வாக்களிக்க உழைக்க வேண்டும்’ என தெரிவித்தார்.