‘திராவிட மாடல்படி நீங்க பிளாஸ்டிக் நாற்காலி பூனைக்குட்டி.. மறந்திடாதீங்க..’ திருமாவளவனை கிண்டலடித்த பாஜக பெண் பிரமுகர்..!!
Author: Babu Lakshmanan1 July 2022, 1:55 pm
குடியரசு தலைவருக்கான பாஜக வேட்பாளர் திரௌபதி முர்மு-வை விமர்சித்த விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு பாஜக பெண் பிரமுகர் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சியின் குறைகளை சுட்டிக் காட்டுவதுடன், அந்தக் கட்சி பிரமுகர்களின் விமர்சனங்களுக்கு பாஜக தலைவர்கள் சரியான பதிலடி கொடுத்து வருவது அண்மை காலமாக அதிகரித்துள்ளது. திமுக vs பாஜக என்ற மோதல் இருந்து வந்தாலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கும், பாஜக பெண் பிரமுகர் காயத்ரி ரகுராமுக்கும் சற்று 7ம் பொறுத்தம்தான்.
இருவரும் சரமாரியாக வார்த்தை போரில் ஈடுபட்டு, பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரால், காயத்ரி ரகுராமுக்கு மிரட்ட வந்ததெல்லாம், கடந்த கால கதையாகும். இதைத் தொடர்ந்து, இவர்கள் இருவரும் தங்களின் வார்த்தை மோதலுக்கு இடைவெளி விட்டிருந்தனர்.
இந்த நிலையில், பாஜகவை கடுமையாக எதிர்த்து வரும் திருமாவளவன், நேற்று மதுரையில் நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்கூட்டத்தில் சரமாரியாக பேசினார். பிரதமர் மோடி, அமித்ஷா என பாஜக தலைவர்களை வார்த்தைகளால் வறுத்தெடுத்தார். அப்போது, குடியரசு தலைவருக்கான பாஜக வேட்பாளர் திரௌபதி முர்மு-வையும் விமர்சித்து பேசினார்.
‘பாரதிய ஜனதா கட்சி சார்பில் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த திரௌபதி முர்மு குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்த போதிலும் அவர் பாரதிய ஜனதா கட்சியால் ஆட்டி வைக்கப்படும் ஒரு சர்க்கஸ் புலி. காட்டு யானை அல்ல பாகன் கையில் சிக்கிய யானை போன்று பாரதிய ஜனதா கட்சி சொல்லும் திட்டங்களுக்கு முழுமையாக ஒத்துழைப்பு தந்து கையெழுத்து இடுபவர்,’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
அவரது இந்தப் பேச்சுக்கு பாஜக பெண் பிரமுகரான காயத்ரி ரகுராம் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், “பழங்குடி சமூகத் தலைவரை, பெண் தலைவரை கேலி செய்வது வெட்கக்கேடானது. திரு. திருமா, திராவிட மாடல் படி நீங்கள் பிளாஸ்டிக் நாற்காலி பூனைக்குட்டியா? மறக்க வேண்டாம்,” எனக் குறிப்பிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.
இதில், திருமாவளவனை பிளாஸ்டிக் நாற்காலி பூனைக்குட்டியா..? எனக் குறிப்பிட காரணம், முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனை சந்தித்த போது, அவர் சொகுசான நாற்காலியில் அமர்ந்திருந்ததும், அருகே பிளாஸ்டிக் நாற்காலியில் திருமாவளவன் அமர்ந்திருந்த புகைப்படம் வெளியாகி அண்மையில் பரபரப்பை கிளப்பியது.
எனவே, திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லிக் கொள்ளும் திமுகவுக்கு, நீங்க பிளாஸ்டிக் நாற்காலி பூனைக்குட்டியா? என்று கிண்டலாக கூறியுள்ளார். அவரது இந்தப் பதிவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் வந்து கொண்டிருக்கின்றன.
1
0