பாஜகவினர் பண்டாரங்கள்… எங்களை அசைத்து பார்க்கலாம் என நினைக்கிறார்கள் : அமைச்சர் துரைமுருகன் பேச்சு!!
Author: Udayachandran RadhaKrishnan11 ஜூன் 2023, 10:38 காலை
சேலம் மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், நாடாளுமன்றத் தேர்தல் முன்கூட்டியே வர இருக்கிறது. தேர்தலை சந்திக்க தயாராக வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் சேலத்தில் பெரு வாரியாக வெற்றி பெற திமுகவினர் பாடுபட வேண்டும். அடுத்த ஆண்டுதான் நாடாளுமன்றத் தேர்தல் என திமுகவினர் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது என கேட்டுக்கொண்டார்.
பாஜக ஆட்சி காலத்தில் தமிழகத்துக்கு என்ன செய்தனர் என்பதை சென்னைக்கு வந்துள்ள அமித்ஷா பட்டியலிட வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்து 8 ஆண்டுகள் ஆகியும் மதுரையில் எய்ம்ஸ் கட்ட நடவடிக்கை எடுத்தனரா?. தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக பணம் ஒதுக்க மனம் இல்லையா என கேள்வி எழுப்பியிருந்தார்.
முன்னதாக பேசிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், ஒரு காலத்தில் சேலத்தில் தான் அரசியல் பயின்று கொண்டேன். ஜஸ்டிஸ் கட்சியை திராவிடர் கழகமாக மாற்றிய ஊர் சேலம், திராவிடர் கழகம் பின்னாளில் திராவிட முன்னேற்ற கழகமாக மாறியது.
பல்வேறு சூழ்நிலைகளிலும் திமுக நிலைத்து நிற்க தொண்டர்கள்தான் காரணம். உலகத்திலே எந்தக் கட்சிக்கும் இதுபோன்ற தொண்டர்கள் இல்லை. மிசாவை பார்த்தவர்கள், விவசாயப் போராட்டத்தைக் கண்டவர்கள், எதிர்க்கட்சியின் தொல்லைகளை பார்த்தவர்கள் திமுக தொண்டர்கள். இப்போது இருப்பவர்களை பார்த்தா பயப்பட போகிறார்கள் என கேள்வி எழுப்பினார்.
இதைவிட பலமான ஆட்சியை பார்த்தவர்கள். ஒரு காலத்தில் பலமாக இருந்த காங்கிரஸ் கட்சியை சூறையாடினோம். இன்றைக்கும் நம்முடைய பக்கத்தில் மட்டுமே அவர்கள் இருக்க முடிகிறது.
மிசாவை காட்டினால் அதை கருணாநிதி தைரியமாக எதிர்கொண்டார். பூச்சாண்டி காட்டுவது போல இன்றைக்கு செயல்படுகிறார்கள். அகில இந்தியாவிலேயே காங்கிரஸூக்கு ஆதரவாக இருக்கக்கூடிய ஒரே தலைவர் ஸ்டாலின் மட்டும்தான்.
எங்களை அசைத்து பார்க்கலாம் என பாஜகவினர் நினைக்கிறார்கள். அவர்கள் பண்டாரங்கள். கலைஞருக்கு முதலமைச்சராகி 10 வருடத்திற்கு பிறகு இந்திய அளவிலான அங்கீகாரம் கிடைத்தது. ஆனால் ஸ்டாலினுக்கு முதலமைச்சரான உடனே அகில இந்திய அங்கீகாரம் கிடைத்து விட்டதாக துரைமுருகன் தெரிவித்தார்.
0
0