OPSக்கு பாஜக வைத்த ஆப்பு?…அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்!!
Author: Udayachandran RadhaKrishnan3 July 2022, 7:12 pm
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் ஜார்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்மு
சென்னையில் நேற்று கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரியபோது அதிமுக பொருளாளர் ஓ பன்னீர்செல்வம் எதிர்பார்த்த எதுவும் நடக்காதது அவருக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
புதுச்சேரியில் திரௌபதி முர்மு!!
முதலில் நேற்று மதியம் புதுச்சேரி சென்ற திரவுபதி முர்மு அங்கு புதுவை முதலமைச்சர் என் ரங்கசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினார். பின்னர் மாலையில் சென்னை வந்த அவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில், அதிமுக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
அதிமுகவிடம் ஆதரவு கேட்ட முர்மு
திரவுபதி முர்மு வரும் வரையில், அந்த நட்சத்திர ஹோட்டலில் அதிமுக தலைமை நிலையச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் இருவரும் தனித்தனி அறைகளில் காத்திருந்தனர். பின்னர் கூட்ட அரங்கிற்கு எடப்பாடி பழனிசாமி அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், தம்பித்துரை எம்பி ஜெயகுமார், பொன்னையன், செங்கோட்டையன், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோருடன் சென்றார்.
அங்கு அவர்களை மத்திய இணை அமைச்சர் எல் முருகன், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக எம்எல்ஏக்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் ஆகியோர் வரவேற்று மேடையில் உட்கார வைத்தனர். அதிமுக தலைவர்களை திரவுபதி முர்முவுக்கு அவர்கள் அறிமுகமும் செய்தனர். அப்போது அவருக்கு எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் பொன்னாடை போர்த்தி வரவேற்றதுடன் அதிமுகவின் முழு ஆதரவையும் தெரிவித்தார்.
ஒதுக்கப்பட்ட ஓபிஎஸ்
அந்த நேரத்தில் ஓபிஎஸ் நிகழ்ச்சி மேடைக்கு செல்லவில்லை. அவர் தனது மகன் ரவீந்திரநாத் எம்பி, ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியனுடன் தனியறையில் காத்திருந்தார். எடப்பாடி பழனிசாமி சென்றபிறகு அவர் உடனடியாக மேடை மேடையேறி தனது ஆதரவை தெரிவிப்பார் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
தவிர, பாஜக தலைவர்கள் இரண்டாவதாக தன்னை அழைப்பார்கள் என்று ஓ பன்னீர்செல்வம் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தார் என்றும் கூறுகிறார்கள். ஆனால் அது நடக்கவில்லை. பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மேடைக்கு சென்று பாமக சார்பாக ஆதரவு தெரிவித்தார். அதன்பிறகே ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் மேடைக்கு சென்று முர்முவுக்கு பொன்னாடை அணிவித்து தன் ஆதரவை தெரிவிக்க நேர்ந்தது.
தனியாக சென்று ஆதரவு அளித்த ஓபிஎஸ்
இந்நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஆகியோருடன் எடப்பாடி பழனிசாமி, அவருடைய ஆதரவாளர்கள் மட்டும் மேடையை அலங்கரித்ததும், ஓபிஎஸ் தனியாக சென்று ஆதரவு தெரிவித்ததும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அது பேசு பொருளாகவும் மாறியுள்ளது.
அதிமுக பொதுக்குழுவில் நடந்த விவகாரங்களை அக்கட்சிக்குள் நடைபெற்றதாக பாஜக எடுத்துக் கொண்டாலும் கூட திரவுபதி முர்மு நிகழ்ச்சியில், இபிஎஸ்சுடன் சரிசமமாக மேடையில் ஓபிஎஸ்ஸை உட்கார வைக்கவில்லை. இந்த நிகழ்ச்சியில் அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தும் எந்த முயற்சியையும் கூட்டணி கட்சியான பாஜக மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. மாறாக, எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக முதல் மரியாதை கொடுத்திருப்பதும் பளிச்சென்று தெரிகிறது. இதனால் ஓபிஎஸ்சும் அவருடைய ஆதரவாளர்களும் கடும் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர் என்று பரபரப்பாக பேசப்படுகிறது.
“சென்னை நிகழ்ச்சி பாஜக முழுமையாக எடப்பாடி பழனிசாமி பக்கம் சாய்ந்துவிட்டதையே காட்டுகிறது. ஓ பன்னீர்செல்வத்தை தற்போது தீவிரமாக ஆதரிக்கும் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருக்கும் பலத்த அடி விழுந்துள்ளது. அவர்களது மூவர் அணி திட்டத்துக்கும் இது பேரிடியாக அமைந்துள்ளது” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இதற்காக அவர்கள் சொல்லும் பல்வேறு காரணங்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இருக்கின்றன.
பாஜக அழைப்பு
“தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் மனு தாக்கல் செய்யும் நாளன்று அந்த நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் இருவருக்குமே பாஜக அழைப்பு விடுத்தது.
பொதுவாக இதுபோன்ற நிகழ்வுகளில் மாநில கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பது அபூர்வம். அதனால் அதிமுக சார்பில் தம்பித்துரை எம்பி கலந்து கொண்டார். ஆனால் ஓபிஎஸ்சோ தனது மகன் ரவீந்திரநாத் எம்பியுடன் நேரடியாக சென்றிருந்தார்.
இதற்கு எந்த அவசியமும் கிடையாது. மகனை மட்டும் அவர் அனுப்பி வைத்திருந்தால் கூட போதுமானது.
ஓபிஎஸ் போட்ட கணக்கு
அதுமட்டுமின்றி பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசுவதற்காக மேலிட பாஜக தலைவர்கள் மூலம் அனுமதி பெறுவதற்கும் போராடிப் பார்த்தார். ஆனாலும் அது நடக்கவில்லை. ஒரு வேளை அப்படி நேரம் கிடைத்திருந்தால் கட்சியில் நிலவும் பிரச்சினை குறித்து பேச அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும். அதனால் பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் சந்திக்க முடியாதது அவருக்கு கிடைத்த கசப்பான அனுபவம் என்றே கூறவேண்டும். இதற்காக ஓபிஎஸ் டெல்லியில் 36 மணி நேரம் தவம் கிடந்ததுதான் மிச்சம்.
ஸ்கோர் செய்த இபிஎஸ்
அதேநேரம் குடியரசுத்தலைவர் தேர்தலில் முர்மு மனு தாக்கல் செய்தபோது தம்பிதுரையை மட்டுமே அனுப்பி வைத்த எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்தவாறே ‘ஸ்கோர்’ செய்துவிட்டார்.
தற்போது பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்மு சென்னையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களின் ஆதரவை நேரடியாகப் பெற வந்தபோதும் எடப்பாடி பழனிசாமி அதே தம்பிதுரையை வைத்தே,
தான் நினைத்ததை சாதித்தும் விட்டார்.
எடப்பாடிக்கு முன்னுரிமை அளித்த பாஜக
சென்னையில் அவருடைய தலைமையிலான அதிமுகவுக்குதான் பாஜக தலைவர்கள் முன்னுரிமை கொடுத்ததை காணமுடிந்தது. இதற்கு காரணம் அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்கள், நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், தலைவர்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் என்று அனைத்து தரப்பினருமே எடப்பாடி பழனிசாமியின் பின்னால் அணிவகுத்து நிற்கிறார்கள் என்பதை பாஜக புரிந்து கொண்டிருப்பதுதான்.
இது டெல்லி மேலிட பாஜக தலைவர்களுக்கும் நன்றாகவே தெரியும். மேலும் ஓபிஎஸ்சின் செயல்பாடுகள், திமுகவுக்கு சாதகமாக அமைந்துவிடும் என்றும் பாஜக மேலிடம் கருதுகிறது. அதன் வெளிப்பாடுதான் சென்னையில் கூட்டணி கட்சித் தலைவர்களிடம் திரவுபதி முர்மு ஆதரவு கேட்ட நிகழ்வு.
ஏமாற்றிய ஸ்டாலின்
தவிர இந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது “முதல்முறையாக சமூகத்தில் பின்தங்கிய பழங்குடி இனத்தை சேர்ந்த பெண் வேட்பாளர் ஒருவர் குடியரசு தலைவர் தேர்தலில் நிற்கிறார். ஆனால் அவரை ஸ்டாலின் ஆதரிக்காமல் திராவிட மாடல், சமூகநீதி என்று சொல்லிக்கொண்டு மக்களை ஏமாற்றி வருகிறார்” திமுகவை கடுமையாக தாக்கினார்.
ஆனால் ஓபிஎஸ்சோ தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளரை வெற்றி பெற வைப்போம் என்று மட்டும் பேசினாரே தவிர சமூக நீதி தொடர்பாக திமுகவை விமர்சிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நான்தான் ஒருங்கிணைப்பாளர்
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், “திரவுபதி முர்முவை ஆதரித்து அதிமுக சார்பாக இதயபூர்வமான ஆதரவை தெரிவித்துள்ளோம். கழக சட்ட விதிகளின்படி நான்தான் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறேன்” என்றுதான் கூறினார்.
இதன்மூலம் அவருடைய நோக்கமெல்லாம் கட்சியில் இரட்டை தலைமைப்பதவியே நீடித்து அதனால் அதிமுக அல்லல்பட வேண்டும், அழிந்து போகவேண்டும், தன்னை விட கட்சியில் வேறு பெரிய தலைவர் யாரும் கிடையாது என்பதாகத்தான் இருக்கிறது. அவருடைய இந்த சுயநலத்தை அதிமுகவின் சாதாரண தொண்டர்கள் கூட எளிதில் புரிந்து கொண்டு விடுவார்கள். அது ஓபிஎஸ்சின் அரசியல் வாழ்க்கைக்கு அவரே குழி வெட்டிக் கொள்வது போல அமைந்துள்ளது” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டனர்.
இதை ஓபிஎஸ் புரிந்து கொண்டால் சரி!
0
0