பாமகவுக்கு பிரகாசமான வாய்ப்பு : ஆதரவு தந்த பிரசாந்த் கிஷோர்? பெருமிதத்தில் அன்புமணி ராமதாஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
31 December 2022, 10:41 am

பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்,”2022-ஆம் ஆண்டுக்கு விடை கொடுப்போம்; 2023-ஆம் ஆண்டை வரவேற்போம்” என்ற தலைப்பில் இன்று நடைபெற்றது. புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில், சுங்கச்சாவடி அருகில் உள்ள சங்கமித்ரா திருமண அரங்கத்தில் நடைபெற்றது.

இந்த பொதுக்குழு கூட்டத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ், கவுரவத் தலைவர் ஜி.கே. மணி, பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி,”2022 பாமக கடுமையாக உழைத்த ஆண்டு. வருகின்ற 2023 ஆம் ஆண்டு நமக்கு மிக மிக முக்கியமான ஆண்டு. 2023 இல் தேர்தல் கிடையாது. ஆனால், தேர்தல் பணிகளுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.

அதனால் தான் மிக முக்கியமான ஆண்டாக 2023ஐ நாம் கருதுகின்றோம். அதற்கேற்ப தீர்மானங்கள் எல்லாம் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. வருகின்ற 2023 ஆம் ஆண்டில் நாம் செய்யக்கூடிய செயல் திட்டங்கள் அனைத்தையும் மருத்துவர் அய்யா அவர்கள் திட்டமிட்டு கொடுப்பார். அந்த செயல்திட்டங்களை எல்லாம் நாம் செய்து முடிப்போம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

காரணம் நமக்கு இருக்கின்ற செயல் தலைவர்கள் நீங்கள் தான். உங்களைப் போன்ற செயல் தலைவர்கள் வேறு எந்த கட்சியிலும் கிடையாது. உங்களை பார்த்து எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. 2014 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என்று தேர்தல் ஆலோசகராக செயல்பட்ட பிரசாந்த் கிஷோர், அதன் பிறகு மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி, தமிழகத்தில் ஸ்டாலின் போன்ற முதலமைச்சர்களை எல்லாம் வெற்றி பெற உதவினார். அண்மையில் அவர் தமிழகத்தில் உள்ள கட்சிகளில் எந்த கட்சியில் அதிக இளைஞர்கள் இருக்கின்றார்கள் என்று ஆய்வு எடுத்ததில், பாட்டாளி மக்கள் கட்சியில் தான் இளைஞர்கள் அதிகமாக உள்ளார்கள் என்று ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.

இது உண்மை. இதை யாரும் மறுக்க முடியாது. நம் கட்சியில் உள்ள இளைஞர்களை போன்று எந்தக் கட்சிகளிலும் கிடையாது. தற்போதைய அரசியல் சூழ்நிலையும், களமும் நமக்கு ஏற்றாற் போல் உள்ளது. தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகளை பார்த்தால் கலைந்து, பிரிந்து, உடைந்து, தேய்ந்து இருக்கின்ற சூழல். ஒரே ஒரு கட்சி மட்டும் தான் வேகமாக, வீரமாக நடை போட்டுக் கொண்டிருக்கிறது. அது நம் பாட்டாளி மக்கள் கட்சி தான் என பெருமையாக பேசியுள்ளார்.

  • Amaran Conducted Grand Ceremony of Success Meet கொண்டாடப்படும் அமரன்.. பிரம்மாண்ட விழா நடத்தும் படக்குழு : சிறப்பு விருந்தினர் இவருதான்!
  • Views: - 488

    0

    0