தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஜூலை 5-ம் தேதி ஒரு கும்பலால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் அரசு மெத்தனமாக நடந்து கொள்கிறது. சிபிஐ விசாரணை வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சென்னை திருநின்றவூரைச் சேர்ந்த திமுக வழக்கறிஞர் அருள், திருவள்ளூர் திமுக மத்திய மாவட்ட இலக்கிய அணி நிர்வாகியின் மகனான சதீஷ், திருநின்றவூரைச் சேர்ந்த பாஜக நிர்வாகியான செல்வராஜ், ஆகியோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அதிமுக நிர்வாகியான மலர்கொடி என்பவரும் கைது செய்யப்பட்டார். இதை அடுத்து மலர் கொடியை அதிமுகவிலிருந்து நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பாஜக முன்னாள் நிர்வாகியான அஞ்சலை கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த அஞ்சலை இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆற்காடு சுரேஷுக்கு நெருக்கமானவர் எனவும், கொலையில் முக்கிய பங்காற்றியதும் தெரியவந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.பெண் தாதாவான அஞ்சலை ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளுக்கு ரூ.10 லட்சம் பணத்தை வழங்கி இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இதன் அடிப்படையில் போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.சென்னை ஓட்டேரி அருகே தலைமறைவாக இருந்த அவரை நேற்று தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புளியந்தோப்பு போலீஸ் நிலையத்தில் உள்ள ரவுடிகள் சரித்திர பதிவேட்டில் அஞ்சலையின் பெயர் உள்ளதாக கூறப்படுகிறது.கந்து வட்டி வசூலிப்பது தொடர்பாக அவர் மீது நிறைய புகார்கள் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
அஞ்சலையைத் தொடர்ந்து மேலும் இரண்டு ரவுடிகளை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை ஐஸ் ஹவுஸை சேர்ந்த எல்லப்பன் என்ற ரவுடியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறைவாசிகளுக்கு வெளியில் இருந்து பண உதவி, சிறைவாசிகளிடம் இருந்து வெளியில் தகவல்களை கூறுபவராக எல்லப்பன் இருப்பதாக கூறப்படுகிறது.