மக்கள் மாமன்றமா? கேளிக்கை நிகழ்ச்சி நடத்தும் ஆடம்பர மண்டபமா?: கோவை மாநகர மன்றத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்.. அதிமுக கண்டனம்!!
Author: Udayachandran RadhaKrishnan29 May 2022, 11:25 am
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு நமது நாட்டை பிரிட்டிஷ் அரசு கட்டுப்பாட்டில் இயங்கிக்கொண்டிருந்தது. அப்பொழுது பிரிட்டிஸ் அரசின் இளவரசியான விக்டோரியா மகாராணி பிறந்திருந்தார்.
மகாராணியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் குறிப்பாக தமிழகத்தில் சென்னை, மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், திருப்பூர், தாராபுரம் போன்ற முக்கிய நகர்ப்புறங்களில் விக்டோரியா ஹால் என்று கட்டடங்கள் கட்டப்பட்டன.
இந்த கட்டடங்களில் பொதுமக்கள் கருத்து கேட்பு மன்றங்களாக செயல்பட்டு வந்தன. இந்தியா 1947 க்கு பிறகு சுதந்திரம் அடைந்த பிறகு தமிழகத்தில் பிரிட்டிஷ் அரசால் கட்டப்பட்ட விக்டோரியா ஹால் கட்டிடங்கள் தமிழக அரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்தன.
கோயம்புத்தூரில் பெரிய கடை வீதியில் நகர சபையாக செயல்பட்டுக் கொண்டிருந்த விக்டோரியா ஹால் ( மன்றம் ) கோவை நகர சபை மாநகராட்சியாக தரம் உயர்த்திய பிறகு கடந்த 1996 இல் நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஜி கோபாலகிருஷ்ணன் என்பவர் முதல் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அன்று முதல் இன்றுவரை மாநகராட்சி வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹால் ( மன்றம்) மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் பேசும் கூட்ட அரங்காக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
இப்படிப்பட்ட பாரம்பரியமிக்க விக்டோரியா ஹால் வரலாற்று உண்மைகளை தெரிந்து கொள்ளாமல் மாநகராட்சி மன்றம் கூட்ட அரங்கில் ஒரு மாமன்ற உறுப்பினர் ஒருவரின் பிறந்தநாள் விழாவை கொண்டாடியது முகம் சுளிக்க வைக்கிறது.
அத்துடன் வரலாற்று சிறப்புமிக்க விக்டோரியா ஹாலை ஏதோ மாநகராட்சியில் உள்ள கல்யாண மண்டபத்தை போல நினைத்து ஆளுங்கட்சி கவுன்சிலர்களும் மேயரும் மாநகராட்சி அதிகாரிகளும் பிறந்தநாள் கொண்டாட்டத்தை கொண்டாடியது கேலிக் கூத்தாக்கி உள்ளது.
மேயர் கல்பனா, கமிஷ்னர் (பொ) ஷர்மிளா, உதவி கமிஷ்னர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் கேக் வெட்டிய தெய்வாணை, மேயருக்கு ஊட்டினார். இது சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.
இது தொடர்பாக கோவை மாநகரக மாவட்ட அதிமுக செயலாளரும், எம்எல்ஏவுமான அம்மன் அர்ஜூனன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராணி விக்டோரியா நினைவாக 1892ல் கட்டப்பட்ட மாமன்றத்தில் பாரம்பரியமிக்க கட்டட வளாகத்தல் மாநகராட்சி கூட்டங்கள் நடந்து வருகின்றன.
முக்கிய பிரமுகர்களான ரத்தினசபாபதி முதலியார், பொன்னுசாமி முதலியார், நஞ்சப்ப செட்டியார், சுக்கூர் போன்றவர்கள் கோவை மக்களுக்காக பல திட்டங்களை தீட்டிய மாமன்றம் இது.
அங்கு மேற்கு மண்டல தலைவர் தெய்வாணை பிறந்தநாளை திமுக மேயர் தலைமையில் துணை கமிஷ்னர், உதவி கமிஷ்னர் போன்றோர் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியிருக்கின்றனர். இது மக்கள் மாமன்றமா அல்லது கேளிக்கை நிகழ்ச்சி நடத்தும் ஆடம்பர மண்டபமா என கண்டனம் தெரிவித்துள்ளார்.
சொத்து வரியை உயர்த்தி மக்களின் கஷ்டங்களை மறந்து பிறந்த நாள் நிகழ்ச்சி நடத்தியதை, மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள் என்பதை மறக்க வேண்டாம் என அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.