நடிகைகள் புதிய நாடாளுமன்றம் செல்வதை பற்றி ஒரு நடிகர் விமர்சிக்கலாமா? ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் அட்டாக்!!
Author: Udayachandran RadhaKrishnan23 September 2023, 2:31 pm
நடிகைகள் புதிய நாடாளுமன்றம் செல்வதை பற்றி ஒரு நடிகர் விமர்சிக்கலாமா? ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் அட்டாக்!!
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, ஜனாதிபதி திரவுபதி முர்முவை புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவுக்கு அழைக்கவில்லை. ஏன் அழைக்கவில்லை? அவங்க மலைவாழ் மக்கள். அதுமட்டுமல்ல கணவரை இழந்தவர். அதனால் கூப்பிடவில்லை.
நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா வருகிறது. அதற்கு இந்தி நடிகை எல்லாம் கூப்பிட்டு போய் இருக்கின்றனர். ஆனால் ஜனாதிபதியை கூப்பிடவில்லை.
ஏன்? கணவரை இழந்தவர் என்ற காரணத்தாலேயே ஜனாதிபதியை நாடாளுமன்றத்துக்கு மத்திய பாஜக அரசு அழைக்கவில்லை. இதுதான் சனாதனம். நாம் பிறப்பால் எல்லோரும் சமம் என்கிறோம். இதை மறுக்கிற சனாதனத்தை ஒழிப்போம் என்பதுதான் நமது குரல். இதற்காக நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம் என்று பேசியிருந்தார்.
இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சை விமர்சிக்கும் வகையில் தெலுங்கானா மற்றும் புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறும் போது, சனாதனம் விவகாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டரீதியாக பதில் அளிக்க வேண்டும். அரசியல் அமைப்பு சட்டத்தில் பெரும்பான்மையோ சிறுபான்மையோ ஒருவருக்கு ஒரு நம்பிக்கை இருந்தது என்றால், அந்த நம்பிக்கை அவமரியாதை செய்யப்பட கூடாது என்பதும், அவமதிக்கப்பட கூடாது என்பதும் தானே அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ளது. அது தானே சரியானது.
ஒரு அமைச்சராக இருப்பவர் அரசியல் அமைப்பு சட்டத்தையும், சட்ட விதிகளையும் மீறி ஒரு குறிப்பிட்ட சதவீத மக்கள் பின்பற்றும் வாழ்க்கை முறையை, ஒழுக்கமான வாழ்க்கை முறையை நீங்கள் ஒழிப்பேன் என்று சொல்வது சரியாக இருக்காது என்றார்.
மேலும் அவர் கூறுகையில், நடிகராக இருக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு நடிகைகள் செல்வது தவறு என்று கூறுவதா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் திரவுபதி முர்மு குடியரசு தலைவர் ஆகக்கூடாது என்று நினைத்தவர்கள் தான் இன்று அவருக்கு ஆதரவாக பேசுகிறார்கள் என்றும் விமர்சித்தார்.