திமுக கவுன்சிலர்கள் இப்படி அராஜகத்தில் ஈடுபடலாமா?…வெகுண்ட அதிமுக, பாஜக!
Author: Udayachandran RadhaKrishnan15 May 2022, 7:01 pm
சேலம் மாவட்டம் அம்மாபேட்டை கிருஷ்ணா நகர் பகுதியில் திமுக பெண் கவுன்சிலர் மஞ்சுளா, நைட்டி அணிந்து அங்குள்ள ஸ்ரீசீதா ராமச்சந்திர மூர்த்தி கோவிலுக்குள் வந்து கண்ணன் என்ற அர்ச்சகரை மிரட்டுவது போன்ற வீடியோ கடந்த வாரம் சமூக ஊடகங்களில் வைரலாகி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
நைட்டியுடன் கோவிலுக்குள் திமுக பெண் கவுன்சிலர்
தவிர அர்ச்சகர் கண்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் சென்னை ஐகோர்ட் வரை சென்று திமுக அரசை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியும் இருக்கிறது.
திமுக கவுன்சிலர்களின் கணவர்கள் அத்துமீறல்
3 நாட்களுக்கு முன்பு மதுரை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டத்தில் திமுக மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் அராஜகத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டதும், அதைப் புகைப்படம் எடுக்க சென்ற செய்தியாளர்கள் இருவர் தாக்கப்பட்டு காயமடைந்த நிகழ்வையும் காணமுடிந்தது. இதுவும் தேசிய அரசியலில் பேசுபொருளாக உருவாகியிருக்கிறது.
இந்த சலசலப்புகள் அடங்குவதற்குள் திமுக கவுன்சிலர்கள் தொடர்பான மேலும் இரு துயர சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.
திமுக கவுன்சிலரால் தற்கொலை செய்த ஊராட்சி செயலர்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூரை அடுத்த ராமநாயினிகுப்பம் கிராமத்தை சேர்ந்த ஊராட்சி செயலாளர் ராஜசேகர் “என் சாவுக்கு திமுக கவுன்சிலர் ஹரிதான் காரணம்” என்று கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஊராட்சிக்கு வழங்கப்படும் நிதிகளை தனக்கு வழங்க வேண்டும் என்று ராஜசேகரை
திமுக கவுன்சிலர் ஹரி வற்புறுத்தியதாகவும், இதற்கு மறுப்பு தெரிவித்ததால் உன் வேலையையும், உன் குடும்பத்தையும் ஒழித்து விடுவேன் என்று அவர் மிரட்டியதாகவும் கூறப்பட்டதை தொடர்ந்து இந்த விபரீத முடிவை ராஜசேகர் எடுத்துள்ளதாக தெரிகிறது.
திமுக கவுன்சிலரின் கணவரால் தற்கொலை
இதேபோல ஈரோடு முல்லை நகர் பகுதியில் வசித்த ராதாகிருஷ்ணன் என்ற நூல் வியாபாரி, ஈரோடு மாநகராட்சியின் திமுக பெண் கவுன்சிலர் கீதாஞ்சலியின் கணவர் செந்தில்குமாரிடம் 62 லட்சம் ரூபாய்க்கு லாட்டரி சீட்டு வாங்கி பணத்தை இழந்ததாக கூறி தற்கொலை செய்துகொண்ட சம்பவமும் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏனென்றால் தமிழகத்தில் லாட்டரி சீட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக கவுன்சிலரின் கணவர் செந்தில்குமார் மட்டும் எப்படி ஈரோட்டில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டுள்ளார்?என்ற கேள்வியுடன் அவர் சட்டவிரோதமாக இதைச் செய்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
மேலும் இறப்பதற்கு முன்பு ராதாகிருஷ்ணன் இறுதியாக பேசிய வீடியோ காட்சியும் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி கண்டனம்
இந்த இரு சம்பவங்களுடன் கடந்த சில வாரங்களில் தமிழகத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகளை குறிப்பிட்டு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி,
திமுக கவுன்சிலர்கள் அட்டூழிய செயல்களில் ஈடுபடுவதாக கூறி அவற்றை வன்மையாக கண்டித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் இதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்? என்ற கேள்வியையும் அவர் எழுப்பியிருக்கிறார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் திமுக கவுன்சிலர்கள் அத்துமீறி நடந்து கொள்வது பற்றி கேள்விக்கணைகளை தொடுத்துள்ளார்.
அண்ணாமலை கண்டனம்
அதுமட்டுமின்றி சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகரில் பக்கிங்காம் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக கூறப்படும் 200-க்கும் மேற்பட்ட வீடுகளை அண்மையில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் போலீசாரை குவித்து புல்டோசர் மூலம் இடித்து தள்ளினர். இதனால் பாதிக்கப்பட்ட கண்ணையா என்ற முதியவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதேபோல திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா கமுதக்குடி கிராமத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மணிகண்டன் என்ற 25 வயது இளைஞர் சொந்தமாக வீடு கட்டி வந்துள்ளார். ஆனால் தமிழக அரசின் மேற்பார்வையாளர் லஞ்சம் வாங்கிக் கொண்டும் கூட திட்டத்துக்கான முழு பணத்தையும் ஒதுக்கீடு செய்யாமல் இழுத்தடித்து வந்ததால் மணிகண்டன் இரண்டு நாட்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன்பு அவர் பேசிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதனால் கொதித்தெழுந்த அண்ணாமலை இதுதான் திமுகவின் ஓராண்டு சாதனையா? திராவிட மாடல் ஆட்சியா?… என்று சூடாக கேள்வியும் எழுப்பியுள்ளார். அரசியல் விமர்சகர்களும் திமுக கவுன்சிலர்களின் போக்கை கடுமையாக விமர்சிக்கின்றனர்.
“தமிழகத்தில் திமுக பெண் கவுன்சிலர்களும் அவர்களது கணவன்மார்கள், பெற்றோர் உடன் பிறந்தோர் என அனைவருமே அத்துமீறி நடந்து கொள்ளும் சம்பவங்கள், கடந்த மூன்று மாதங்களாகவே சர்வ சாதாரண நிகழ்வுகள் ஆகிவிட்டன. முதன் முதலில் திமுக பெண் கவுன்சிலரின் இருக்கையில் அவருடைய கணவர் அமர்ந்து ஆதிக்கம் செலுத்தியது கண்டனத்துக்கு உள்ளானது. அதைத்தொடர்ந்து 30க்கும் மேற்பட்ட இது போன்ற சம்பவங்கள் தமிழகம் முழுவதும் நடந்துவிட்டன. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களிலும் பரவியது.
இத்தனைக்கும் திமுகவினர் தவறு செய்தாலும் கடும் நடவடிக்கை எடுப்போம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருந்தார். ஆனாலும் திமுக மேலிடம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.
கனிமொழி பரபரப்பு பேச்சு
திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பி ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது “இன்று உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் கிடைத்திருக்கிறது. இதை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். அடுத்த தலைமுறையில் உள்ள உங்கள் மகளுக்கும் இந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும்.
குடும்பத்தினர் யாரையும் தலையிட அனுமதிக்காதீர்கள். பெண் கவுன்சிலர்கள் எல்லாம் அவருடைய குடும்பத்தினரால் இயக்கப்படுகிறார்கள் என்கிற கட்டமைப்பை நீங்கள் உடைக்க வேண்டும். பல நேரங்களில் பெண் கவுன்சிலர்கள் சக ஆண் கவுன்சிலர்களை விட மிகச் சிறப்பாக செயல்படக் கூடியவர்களாகத்தான் இருக்கிறார்கள். அதனை செய்து காட்டுங்கள் என்று அறிவுரையும் கூறியிருந்தார். அவர் சொன்னதற்கு மாறாக, தவறு செய்வதிலும், ஆண் கவுன்சிலர்களுக்கு நாங்கள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என்ற நிலை தற்போது வந்துவிட்டது.
கவுன்சிலர்களால் தர்மசங்கடத்தில் திமுக
அதுவும் மிக அண்மையில் இரண்டு திமுக கவுன்சிலர்களால் இருவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் மிகவும் வருத்தத்துக்குரிய விஷயம்.
இதேபோல முதியவர் கண்ணையா, இளைஞர் மணிகண்டன் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டதும் திமுக அரசுக்கு பாதகமான விஷயங்கள்.
இது முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், திமுகவுக்கும் மக்களிடையே அவப்பெயரைத்தான் ஏற்படுத்தும்” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.