வெளிப்படை சிகிச்சை என்றால் நேரு ஸ்டேடியத்தில் வைத்து இருதய அறுவை சிகிச்சை செய்யலாமா? அமைச்சர் மா.சுப்பிரமணியன்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 June 2023, 1:41 pm

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று 100 இடங்களில் கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. சென்னையில் மட்டும் 10 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.

காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நடைபெறுகிறது. இந்த முகாமில் சிறப்பு மருத்துவர்கள், பொது மருத்துவர்கள், அறுவை சிகிச்சை மருத்துவர்கள், மகளிர் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவர்கள் உள்ளனர். இந்த முகாமில் தமிழ்நாடு அரசின் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்திற்கான புதிய பயனாளிகளும் பதிவு செய்யப்பட உள்ளனர்.

இந்த நிலையில் சென்னை கோடம்பாக்கம் புலியூர் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அதற்குப் பிறகு அங்கு நடைபெற்ற வரும் மருத்துவ சேவைகளை அமைச்சர் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,
கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெறும் என்று அறிவித்திருந்த நிலையில் மக்கள் தேவைக்கேற்ப 103 இடங்களில் நடைபெற்று வருகிறது.

2000-த்திற்கும் மேற்பட்டோர் ஒவ்வொரு முகாமிலும் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஒரு முகாமில் 2000 பேர் பயன்படுத்தினால் பல்லாயிரம் நபர்கள் இதன் மூலம் பயன்பாடுவார்கள். ஒவ்வொரு முகாமிலும் 60 முதல் 70 மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

முதல் முறையாக இந்த துறையின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. Icon திட்டம் என்ற வகையில் கடந்த 15ஆம் தேதி கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை தொடங்கப்பட்டது. அதுமட்டுமின்றி விரைவில் இளம் சிறுவர்களுக்கான கண்ணொளி முகாம் தமிழகம் முழுவதும் 100 இடங்களில் நடைபெற உள்ளது.

1959 ஆம் ஆண்டு கலைஞர் அவருடைய சொந்த ஊரில் சொந்த செலவில் அவருடைய தாய் தந்தை பெயரில் மருத்துவ கட்டமைப்பை உருவாக்கினார்.108 திட்டம், கலைஞர் காப்பீட்டு திட்டம், வரும் முன் காப்போம் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை கலைஞர் கொண்டு வந்துள்ளார். மருத்துவமனை இருக்கும் இடத்திற்கு மக்கள் சென்றார்கள்.

திமுக அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு மக்கள் இருக்கும் இடத்திற்கு மருத்துவ உபகரணங்கள் கொண்டு சென்று பரிசோதனை செய்து அவளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இன்னுயிர் காப்போம் 48 என்ற திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. 1,67 லட்சம் நபர்களுக்கு இந்த திட்டம் மூலம் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவரின் கண்காணிப்பில் உள்ளார் சிறைத்துறை காவலர்கள் அனுமதியுடன் அவர் குடும்பத்தினர் பேசி வருகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சையை விமர்சிக்கும் எதிர் கட்சியினர் அவர்களுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்துக் கொண்டால் தான் அதன் தீவிரம் அவர்களுக்கு தெரியக்கூடும்.

வெளிப்படைத்தன்மை உடன் இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனில் நேரு ஸ்டேடியத்தில் வைத்து 15 ஆயிரம் பார்வையாளர்கள் முன்னிலையில் பன்ன முடியுமா என மா.சுப்பிரமணியன் கேள்வி எழுப்பினார்.

  • Siragadikkai Aasai Vidhya Reveal the Truth about Leaked Video மீண்டும் அதிர்ச்சி.. சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் ஆபாச வீடியோ லீக் : சிக்கிய ஆதாரம்?!