கோவில் அறங்காவலர்கள் குழுவில் இவங்களை நியமிக்கலாமே : திமுக அரசுக்கு ஐடியா கொடுத்த திருமாவளவன்!!!
Author: Udayachandran RadhaKrishnan9 June 2023, 3:46 pm
மதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட வைகோவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை அண்ணா நகரில் உள்ள வைகோ இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து இரண்டு பேரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திருமாவளவன் வாழ்த்து சொல்ல வந்தது மனதில் ஒரு எழுச்சியையும், ஊக்கத்தை தருகிறது. மதிமுகவில் 1401 பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தவர்,
மதிமுகவின் 29வது பொதுக்குழு வருகிற ஜூன் 14-ம் தேதி நடைபெற உள்ளதாகவும் கூறினார். இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் தலையிட வேண்டும் என்று தெரிவித்தார். இந்த விவகாரத்தில் இன வெறியுடன் இலங்கை அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.
இதனை தொடர்ந்து பேசிய திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளராக வைகோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் அக்கட்சி சிறப்பாக செயல்படும் என வாழ்த்து தெரிவித்தார்.
விழுப்புரம் மேல்பாதி ஊரில் கோவில் பூட்டி சீல் வைக்கப்பட்ட விவகாரம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த திருமாவளவன், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அறங்காவலர் குழுவில் தாழ்த்தப்பட்ட ஒருவரையும் பெண் ஒருவரையும் உறுப்பினராக தமிழக அரசு நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும் இன்று மாலை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக நடைபெறவுள்ள போராட்டத்தில் மதிமுக சார்பாக துரை வைகோ பங்கேற்க இருப்பதாக தெரிவித்தார்.