சமூக நீதி பேசும் திமுக சாதியை குறிப்பிடலாமா? சர்ச்சையில் சிக்கிய ஆர். எஸ். பாரதி!!
Author: Udayachandran RadhaKrishnan23 August 2023, 9:54 pm
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து சட்ட ரீதியாக திமுக அரசிடம் ஏதாவது ஒரு கேள்வியை எழுப்பி முதலமைச்சர் ஸ்டாலினை நெருக்கடிக்கு உள்ளாக்குவது கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தொடர்ந்து நடந்து வருகிறது.
பின்னர் அந்த சர்ச்சை ஒரு வழியாக முடிவுக்கு வரும். அந்தப் பரபரப்பு
மெல்ல மெல்ல அடங்குவதற்குள் இன்னொரு விவகாரம் தலை தூக்கி விடும்.
ஆளுநர் ஆர்என் ரவி கொடுக்கும் நெருக்கடி
ஏற்கனவே கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு, தேசிய கல்விக் கொள்கை, ஆன்லைன் சூதாட்டம், திமுக அரசு எழுதிக் கொடுத்த ஆளுநர் உரையில் தேவையற்ற பகுதிகளை நீக்கியது, அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்து பின்னர் அதை நிறுத்தி வைத்தது என்று இருபதுக்கும் மேற்பட்ட விஷயங்களில் ஆளுநர் ரவி சட்டரீதியாக எடுக்கும் நடவடிக்கைகள் திமுக அரசுக்கு கிடுக்குப் பிடிபோடுவது போல அமைந்தும் விடுகிறது.
தமிழக ஆளுநராக இருந்தவர்களில் சென்னா ரெட்டிக்கு பிறகு ஆர்.என். ரவிதான் மாநில அரசிடம் மிகவும் கறாராக நடந்து கொள்கிறார் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.
இந்த நிலையில்தான் ஆளுநர் ரவிக்கும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் இடையே இன்னொரு மறைமுக யுத்தம் தொடங்கியிருக்கிறது.
டிஎன்பிஎஸ்சி தலைவர்
குறிப்பாக டி.என். பி. எஸ். சி. தலைவர் பதவிக்கு ஓய்வு பெற்ற தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவை நியமிக்க பரிந்துரை செய்து ஆளுநர் ரவிக்கு அனுப்பிய பைல்களை அவர் ஏற்க மறுத்து அதை மீண்டும் அரசுக்கே அனுப்பி வைத்து பலத்த ‘ஷாக்’ அளித்திருக்கிறார்.
இதனால் திமுக அரசு கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டது என்றே சொல்லவேண்டும். இந்த மோதல் தமிழக அரசியலில் விவாதத்துக்குரிய ஒன்றாகவும் மாறிவிட்டது.
டி.என்.பி.எஸ்.சி. தலைவர் மற்றும் 8 உறுப்பினர்கள் நியமனம் கடந்த ஓராண்டாகவே நிரப்பப்படாமல் உள்ளது. இதில் தலைவர் பதவிக்கு கடந்த ஜூன் மாதம் மாநில டிஜிபி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற சைலேந்திரபாபுவையும், எட்டு உறுப்பினர்களையும் நியமனம் செய்வதற்கு முடிவு செய்த முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சில வாரங்களுக்கு முன்பு அதை பைல்களாக தயாரித்து ஆளுநர் ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பியும் வைத்தது.
தமிழக அரசுக்கு ஆளுநர் கேள்வி
ஆனால் இந்த நியமனத்தின் மீது பல்வேறு கேள்விகளை ஆளுநர் ரவி எழுப்பி இருக்கிறார். குறிப்பாக, “டி.என்.பி. எஸ். சி. தலைவர், உறுப்பினர்கள் பதவி தொடர்பாக வெளியான விளம்பரங்கள் குறித்த தகவல்கள், பெறப்பட்ட விண்ணப்பங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட செயல் முறையின் வெளிப்படைத்தன்மை, நீக்கப்பட்டவர்களுக்கான அளவுகோல், பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் எவ்வாறு இறுதி செய்யப்பட்டனர்? இந்த பரிந்துரையில் சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட்டுள்ளதா?” என சட்ட ரீதியாக சில விளக்கங்களை கேட்டு அந்தப் பைல்களை திமுக அரசுக்கு அனுப்பி வைத்து விட்டார்.
அதாவது சைலேந்திரபாபு மற்றும் 8 உறுப்பினர்களின் நியமனத்திற்கு சரியான விளக்கம் கொடுத்தால் மட்டுமே அதை ஏற்க முடியும் என்பதை ஆளுநர் ரவி மறைமுகமாக சுட்டிக் காண்பித்திருக்கிறார்.
தர்மசங்கடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின்
இது மாநில முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலினுக்கு தர்ம சங்கட நிலையை ஏற்படுத்தி உள்ளது. ஒரு கவுரவ பிரச்சினையாகவும் மாறிப்போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி உடனே செய்தியாளர்களை சந்தித்து ஆளுநர் ரவி மீது தனது கடும் கோபத்தை காட்டினார்.
அவர் கூறும் போது,”டி.என்.பி.எஸ்.சி. தலைவர் சைலேந்திரபாபுவின் பெயரை பரிந்துரை செய்து அரசு சார்பில் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதை அவர் ஏற்றுக்கொண்டு அனுமதி வழங்குவதுதான் முறையாக இருக்கும். ஆனால் திட்டமிட்டு மறுப்பதற்குரிய உள்நோக்கம் என்ன என்பதை அவர் விளக்கவேண்டும்.
அரசு உயர் பதவிகளில் சமூக நீதி பின்பற்றப்பட வேண்டும் என்ற வகையில் கருணாநிதி செயல்பட்டார். அதே நோக்கத்துடன் இன்றைக்கு டி.என்.பி.எஸ்.சி. தலைவராக எந்த சமுதாயத்தை சேர்ந்தவர் இதுவரையில் தேர்ந்தெடுக்கப்படவில்லையோ, அந்த சமுதாயத்தை சேர்ந்தவரை முதலமைச்சர் ஸ்டாலின் நியமித்து ஆளுநருக்கு பரிந்துரை அனுப்பி இருந்தார்.
சாதியை குறிப்பிட்ட ஆர்எஸ் பாரதி
டி.என்.பி.எஸ்.சி. பதவி நியமனம் தொடர்பாக ஆளுநர் கேட்ட விளக்கங்களுக்கு எல்லாம் பதிலளித்து ஒரு மாதமாகி விட்டது. சைலேந்திரபாபு அரசியல்வாதி அல்ல. வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் நாடார் சமுதாயத்தினர் இதுவரையில் டி.என்.பி.எஸ்.சி. தலைவராக வந்தது இல்லை. எனவே நாடார் சமுதாயத்தை சேர்ந்தவரை சமூக நீதி நோக்கத்தோடு இந்த பதவியில் அமர்த்தவேண்டும் என்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இதை நாங்கள் சாதி கண்ணோட்டத்துடன் பார்க்கவில்லை. இதுவரை இந்த பதவிக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படாத சமுதாயத்துக்கு கொடுத்திருக்கிறோம். இதனை ஆளுநர் வரவேற்று இருக்க வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தலில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஆட்சி மாற்றம் வரும். அப்போது ஆளுநர் தானாகவே ஓடி விடுவார். தற்போது திமுக ரொம்ப மென்மையானதாக இருக்கிறது. எங்கள் தலைவர் அனுமதித்தால் பழைய திமுகவாக மாறுவோம். அப்படி மாறக்கூடியவர்கள் திமுகவில் இருக்கிறார்கள். அவர்களை தலைவர் ஸ்டாலின் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார். சீண்டி பார்த்தால் நிச்சயம் திமுக பழைய உருவத்தை எடுக்கவேண்டிய நிலைமை வரும்” என்று கொந்தளித்தார்.
ஆளுநர் சட்டரீதியாக எழுப்பிய கேள்விகளுக்கு ஆர் எஸ் பாரதி
எந்த விளக்கத்தையும் தெரிவிக்கவில்லை. மாறாக அவர் உள்நோக்கத்துடன் செயல்பட்டு இருக்கிறார் என்ற குற்றச்சாட்டை மட்டுமே கூறி இருப்பதுடன் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியை ஏன் நியமிக்க முடிவு செய்தோம் என்று அவர் விளக்கம் அளித்து இருப்பதுதான் இன்னொரு சர்ச்சையாக வெடித்துள்ளது.
திமுக சாதியை தாங்கி பிடிக்கிறதா?
மூத்த அரசியல் நோக்கர்கள் இது தொடர்பாக வைக்கும் விமர்சனங்கள் இவைதான்.
“திமுக சமூகநீதி பேசுகிற கட்சி. அப்படி இருக்கும்போது குறிப்பிட்ட சாதியை சேர்ந்த போலீஸ் அதிகாரி யாருமே இதுவரை இந்த உயர் பதவிக்கு நியமிக்கப்படவில்லை என்று ஆர். எஸ். பாரதி கூறுவது வேடிக்கையாக உள்ளது. அப்படியென்றால் திமுக சாதியை தாங்கி பிடிக்கிறதா? தமிழகத்தில் சாதிய சிந்தனையை வளர்த்து விடுகிறதா? என்ற கேள்விகளும் எழுகின்றன.
அரசு உயர் பதவிகளில் சமூக நீதி பின்பற்றப்படவேண்டும் என்ற அடிப்படையில் கருணாநிதி செயல்பட்டது போலவே இன்று டி.என்.பி.எஸ்.சி. தலைவராக எந்த சமுதாயத்தை சேர்ந்தவர் இதுவரையில் தேர்ந்தெடுக்கப்படவில்லையோ, அந்த சமுதாயத்தை சேர்ந்தவரை முதலமைச்சர் ஸ்டாலின் நியமித்து ஆளுநருக்கு பரிந்துரை அனுப்பி இருந்தார் என்பதோடு ஆர் எஸ் பாரதி நிறுத்திக் கொண்டிருக்கலாம். அதற்கான அர்த்தத்தை அனைவரும் புரிந்து கொண்டிருப்பார்கள். அவர் எந்த சாதியை சேர்ந்தவர் என்று கூறுவதெல்லாம் தேவையற்றது.
மாறாக, அந்த சாதியில் இதுவரை யாரும் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பதவியை வகிக்கவில்லை. அதனால் அந்த பதவியை அவருக்கு கொடுக்கிறோம் என்று தங்களுக்கு சாதகமாக மடை மாற்றம் செய்வதெல்லாம் 70 ஆண்டுகளுக்கு மேலாக சமூக நீதிப்பற்றி மேடைதோறும் வாய் நிறைய பேசி வரும் திமுக அதன் கொள்கைக்கு நேர் எதிராக செயல்படுவதுபோல் அல்லவா, இருக்கிறது? இது சாதிய வாக்கு வங்கியை குறி வைப்பது போலவும் உள்ளது.
சைலேந்திரபாபு போலீஸ்துறையில் எந்தவிதமான சர்ச்சைகளும் இல்லாமல் சிறப்பாக பணியாற்றியவர். அதன் அடிப்படையில் மட்டுமே அவருக்கு இப்பதவியை கொடுக்கிறோம் என்பதோடு ஆர் எஸ் பாரதி நிறுத்திக் கொண்டிருக்கலாம்.
மறக்குமா நெஞ்சம்?
மேலும் சைலேந்திரபாபு சமூகம் சார்ந்த ஒரு தலைவர் தமிழகத்தின் முதலமைச்சராக ஒன்பது ஆண்டுகாலம் பதவியில் இருந்தபோது அவரை திமுக தலைவர்கள் எப்படியெல்லாம் கேலி பேசினர், நக்கலடித்தனர் என்பது இன்றைய இளைய தலைமுறையினருக்கு தெரியாது. ஆனால் 55 வயதுக்கு மேற்பட்ட அனைவருமே அறிந்த விஷயம்.
எனவே ஓய்வு பெற்ற போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு ஆதரவாக என்னதான் பேசினாலும் அவர் எந்த சாதியைச் சேர்ந்தவர் என்பதை ஆர் எஸ் பாரதி அடையாளப்படுத்தி இருப்பது ஏற்கவே முடியாத ஒன்று.
மேலும் இதை நாங்கள் சாதி கண்ணோட்டத்துடன் பார்க்கவில்லை என்று கூறும்
போதே அதில் தங்களுக்கு சாதிய பார்வை இருக்கிறது என்பதை ஆர் எஸ் பாரதி மறைமுகமாக கூறுகிறார் என்றுதான் அர்த்தமாகிறது.
மத்தியப் பிரதேசத்தில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த ஒருவர் கூட ஐகோர்ட் நீதிபதி கிடையாது. தமிழ்நாட்டில் கருணாநிதி ஆட்சிக்கு வந்த பிறகு வரதராஜனை உட்கார வைத்தார். அதற்குப் பிறகு ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த ஏழெட்டு பேர் நீதிபதிகளாக இருந்தார்கள் என்றால், அது திராவிட இயக்கம் போட்ட பிச்சை என்று 2020ம் ஆண்டு திமுக கூட்டத்தில் பேசி அது பெரும் சர்ச்சையாக வெடித்த பின்பு அதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டவர்தான் ஆர்.எஸ். பாரதி.
ஆர்எஸ் பாரதி சுபாவம் மாறவே மாறாதா?
அப்படி இருந்தும் ஓய்வு பெற்ற உயர் போலீஸ் அதிகாரி ஒருவரின் சாதியை அவர் வெளிப்படுத்த வேண்டியதன் அவசியம் என்ன வந்தது?… ஆர் எஸ் பாரதியின் இந்த சுபாவம் மாறவே மாறாதா?. இது காலம் காலமாக சமூக நீதி பற்றி பேசி வரும் திமுகவுக்கு அவப்பெயரைத்தான் ஏற்படுத்தும்.
ஆர் எஸ் பாரதியின் பேட்டியில் ஆளுநர் ரவிக்கு பகிரங்க மிரட்டல் விடுத்திருப்பதையும் பார்க்க முடிகிறது. சில நாட்களுக்கு முன்புதான் அவரை அமைச்சர் உதயநிதி கடுமையாக சாடி இருந்தார். இப்போது ஆர் எஸ் பாரதி தன் பங்கிற்கு ஆளுநரை போட்டு தாக்கியிருக்கிறார். இந்தப் போக்கு ஏற்புடையது அல்ல” என்று அந்த மூத்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
எது எப்படியோ, சைலேந்திரபாபு விவகாரத்தை கிளப்பப் போய் ஆர் எஸ் பாரதி இன்னொரு சர்ச்சையில் சிக்கிக்கொண்டு விட்டார் என்றே தோன்றுகிறது!