ஸ்கூலுக்கு போக முடியல.. ட்ராஃபிக் ஆகுது.. நீங்க வாங்க : மழலை குரலால் காவல் நிலையத்தில் புகார் கூறிய UKG மாணவன்..!! (CUTE VIDEO)
Author: Udayachandran RadhaKrishnan19 March 2022, 7:04 pm
ஆந்திரா : காவல் நிலையத்திற்கு சென்று போக்குவரத்தை சீர் செய்ய கோரிய 6 வயது சிறுவன் செய்த செயல் காண்போரை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
சித்தூர் மாவட்டம் பலமனேர் நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் யுகேஜி படித்து வரும் 6 வயது சிறுவன் கார்த்திகேயன். இன்று பலமனேர் காவல் நிலையத்திற்கு சென்ற கார்த்திகேயன் காவல் நிலையத்தில் பணியில் இருந்த ஆய்வாளர் பாஸ்கரை நேரில் சந்தித்து எங்கள் பள்ளி அருகே சாலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் தொடர்ந்து குழி தோண்டி வருகின்றனர்.
மேலும் அங்கு டிராக்டர்களை சாலையின் குறுக்காக நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு செய்கின்றனர். எனவே நீங்கள் வந்து போக்குவரத்தை சரி செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டான்.
அவன் பேசுவதை ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்த போலீசார் இனிப்புகளை கொடுத்தனர். பின்னர் நாங்கள் வந்து போக்குவரத்தை சரி செய்வோம் என்று கூறி அவனை பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.