மலைபோல் குவியும் வழக்குகள்?… திமுக அமைச்சர்கள் ‘திடுக்’!!

Author: Udayachandran RadhaKrishnan
24 August 2023, 9:36 pm

அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி இருவரும் அமலாக்கத்துறையின் பிடியில் சிக்கிக்கொண்டுள்ள நிலையில் இன்னொரு அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணனும் அவர்களோடு விரைவில் இணைந்து விடுவார் என்ற பரபரப்பு பேச்சும் அரசியல் வட்டாரத்தில் பலமாக அடிபடுகிறது.

இந்த நிலையில் அமைச்சர் பொன்முடியின் மகன் தெய்வீக சிகாமணி எம்பி மற்றும் அவருடைய உறவினர்கள் நான்கு பேர் செம்மண் குவாரிகளில் சட்ட விரோதமாக மண்ணை அள்ளி தமிழக அரசுக்கு 28 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுத்தியதாக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறையும் இணைந்து கொண்டது. மேலும் கடந்த மாதம் அமைச்சர் பொன்முடி வீட்டிலும், அவருடைய மகன் கௌதம சிகாமணி வீடு, அலுவலகங்களிலும் அதிரடி ரெய்டும் நடத்தியது.

அமைச்சரை உலுக்கிய அமலாக்கத்துறை

அப்போது பொன்முடியின் வீட்டில் 82 லட்ச ரூபாய் ரொக்கமும், 13 லட்ச ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளும் சிக்கின. அவர் வங்கிகளில் வைப்பு தொகையாக போட்டு வைத்திருந்த 42 கோடி ரூபாயை அமலாக்கத்துறை முடக்கவும் செய்தது.

அதேநேரம் கௌதம சிகாமணி எம்பி இந்தோனேசியா நாட்டில்
100 கோடி ரூபாய்க்கும் மேலாக தொழில் முதலீடு செய்திருப்பது தொடர்பான ஆவணங்களை கைப்பற்றி சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் வழக்கும் பதிவு செய்தது. இதில் அவர் உள்பட ஆறு பேர் மீது குற்றப்பத்திரிகையை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு அமலாக்கத்துறை தாக்கல் செய்தது. தெய்வீக சிகாமணி எம்பி என்பதால் அவர் தொடர்புடைய இந்த வழக்கும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்பி எம்எல்ஏக்களுக்கான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்படும் வாய்ப்புகளே அதிகம்.

அமலாக்கத்துறை வசம் சிக்கும் அடுத்த அமைச்சர்

ஏனென்றால் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கிலும் இதுபோல் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை அமலாக்கத்துறையின் வேண்டுகோளை ஏற்று பிறகு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது இங்கே நினைவு கூரத்தக்கது.

எம்பி, எம்எல்ஏக்களுக்கான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு வழக்கு கொண்டு செல்லப்பட்டால் விரைவாக விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டு விடும் என்பதற்காக அமலாக்கத்துறை இந்த முடிவை எடுத்துள்ளது.

அதேபோல இன்னொரு அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணனும் EDயின் விசாரணை வலையத்திற்குள் வருவதற்கான வாய்ப்புகளும் தென்படுகின்றன.

வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவிப்பு

2001-2006ம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சி காலத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக 4 கோடியே 90 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி, மகன்கள் என 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது.

தற்போது இந்த வழக்கு மீதான விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கை ஆதாரமாக கொண்டு சட்ட விரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அமலாக்கத்துறை 2020ம் ஆண்டு 6 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை முடக்கியது.

சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையில் தங்களையும் இணைக்கக்கோரி அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்துள்ளது. ஆனால் இதற்கு அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் கடும் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மீதான விசாரணை பலமுறை ஒத்தி வைக்கப்பட்டு தற்போது செப்டம்பர் 13ம் தேதி நடத்தப்பட இருக்கிறது.

தானாக சிக்கிய அமைச்சர்கள்

இப்படி இந்த மூன்று அமைச்சர்கள் மீதும் அமலாக்கத்துறையின் பிடி இறுகி வரும் நிலையில் சோதனை மேல் சோதனை என்பதுபோல சீனியர் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் இருவரையும் சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து கீழமை நீதிமன்றங்கள் விடுவித்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.

இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு 2006 முதல் 2011 வரை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் 76 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை வருமானத்துக்கு அதிகமாக சேர்த்ததாக அவர் மீதும் அவருடைய மனைவி மணிமேகலை மீதும் 2012ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இதே காலகட்டத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் 44 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கு குவித்ததாக அவர் மீதும் அவருடைய மனைவி ஆதிலட்சுமி, நண்பர் சண்முகமூர்த்தி ஆகியோர் மீதும் ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு கோர்ட்டில் தனித்தனியாக இரு வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

இவர்கள் மட்டுமல்ல ஏற்கனவே அமைச்சர் பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 36 லட்ச ரூபாய் சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் நான்கே நாட்களில் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு அவரும் அவருடைய மனைவி விசாலாட்சியும் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராகவும் இதேபோல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து மீண்டும் விசாரணைக்கு
எடுத்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிர்ச்சி கொடுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர்
மீதான வழக்குகளை மீண்டும் எடுத்துக் கொள்வதற்கு என்ன காரணம் என்பது பற்றி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறும்போது சில அதிர்ச்சிகரமான தகவல்களையும் வெளியிட்டார்.

அவர் சொன்னது, இதுதான். “இந்த வழக்குகளில் இருந்து தங்களை விடுவிக்க கோரி அமைச்சர்கள் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவுக்கு 2021ம் ஆண்டு ஏப்ரல் வரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அதே போலீசார் அப்படியே யூ டேர்ன் அடித்து விட்டனர். ஏற்கனவே விசாரித்த வழக்கில் மேற்கொண்டு நடத்தப்படும் விசாரணையில் சேகரிக்கப்படும் ஆதாரங்களின் அடிப்படையில் கூடுதல் குற்றப்பத்திரிகைதான் தாக்கல் செய்ய முடியும்.

ஆனால் இந்த வழக்குகளில் ஆதாரங்கள் இல்லை என்று கூறி வழக்குகளை முடித்து வைக்க போலீசார் பரிந்துரைத்துள்ளது வினோதமாக இருக்கிறது. இதை ஏற்று அனைவரையும் விடுவித்துள்ள கீழ் கோர்ட்டின் அணுகுமுறை சட்ட விரோதமானது.

3 நாட்களாக தூங்கவே இல்லை

இந்த வழக்குகளின் ஆவணங்களை ஆராய்ந்தபோது ஏதோ ஒன்று ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நடந்திருப்பதை நிதர்சனமாக உணர்ந்து கொள்ள முடிகிறது.
இரு அமைச்சர்களுக்கும் எதிரான இந்த விடுவிப்பு உத்தரவுகள் ஒரே மாதிரியாக காப்பி அடித்தது போல உள்ளன. அதில் பெயர்கள் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது,

இது இந்த ஐகோர்ட்டின் மனசாட்சியை உலுக்கும் விதமாக இருக்கிறது. இதனால் நான் மூன்று நாட்கள் தூங்கவே இல்லை. இது போன்ற சூழ்நிலையில் இந்த ஐகோர்ட்டு கண்களை மூடிக்கொண்டு இருக்க முடியாது. ஏனென்றால் ஐகோர்ட்டு ஒரு குறிப்பிட்ட கட்சிக்கோ அல்லது அரசுக்கோ உரியது அல்ல. மாறாக நாட்டில் வாழும் குப்பனுக்கும், சுப்பனுக்கும் உரித்தானது” என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.

பின்னர் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு அதிகாரி உள்ளிட்டோர் பதில் அளிக்கவேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கின் மீதான விசாரணையை செப்டம்பர் 20ம் தேதிக்கு தள்ளி வைத்தார். அதேநேரம் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு விசாரணை வரும் 7ம் தேதி நடக்கிறது.

அமைச்சர்கள் மீதான இந்த வழக்குகள் பற்றி அரசியல் பார்வையாளர்கள் கூறுவது என்ன?

திமுகவுக்கு போதாத காலம்

“திமுக அமைச்சர்களுக்கு இது போதாத காலம் போலிருக்கிறது. இதுவரை செந்தில் பாலாஜி, பொன்முடி, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் என்று நான்கு பேர் விசாரணை வளையத்திற்குள் வந்துவிட்டனர். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்கு விசாரணையில் தங்களையும் இணைத்துக் கொள்ளவேண்டும் என்ற கோரிக்கைக்கு சாதகமாக தீர்ப்பு அமையாவிட்டாலும் அமலாக்கத்துறை அதை எளிதில் விட்டுவிடாது. அதற்காக சுப்ரீம் கோர்ட் வரை கூட செல்வதற்கு வாய்ப்பும் உண்டு.

இவர்கள் தவிர சீனியர் அமைச்சர்கள் இருவரும், ஜூனியர் அமைச்சர்கள் மூவரும் என மேலும் ஐந்து பேர் அமலாக்கத்துறையிடம் விரைவில் சிக்கலாம் என்கிறார்கள். இந்த கணக்கின்படி பார்த்தால் தமிழக அமைச்சர்களில் மூன்றில் ஒரு பங்கினர் வழக்கு, விசாரணை என இன்னும் சில ஆண்டுகள் கோர்ட்டுக்கு அலைய வேண்டியதிருக்கும்.

இதில் ஒரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால் செந்தில் பாலாஜியும், பொன்முடியும் அமலாக்கத்துறையின் வழக்குகளை சட்டப்படி எதிர்கொள்வார்கள் என்று கூறிவரும் திமுக சென்னை உயர்நீதிமன்றம் அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோரின் விடுதலையை கண்டிக்கும் விதமாக தாமாக முன்வந்து வழக்கை மறு விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருப்பது பற்றி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் சைலன்ட்டாக இருப்பதுதான்.

வாய் மூடிக் கொண்ட திமுக!!

அதேநேரம் அதிமுக ஆட்சியிலோ அல்லது பாஜக ஆளும் மாநிலங்களிலோ அமைச்சர்கள் மீதான வழக்குகளில் இப்படி விடுதலையை எதிர்க்கும் விதமாக தாமாக முன்வந்து வழக்கை உயர் நீதிமன்றங்கள் மறு விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருந்தால் திமுகவினர் இந்நேரம் வானத்துக்கும் பூமிக்குமாக குதித்து இருப்பார்கள். இதற்கு பொறுப்பேற்று உடனே முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்று போராட்டங்களையும் அறிவித்திருப்பார்கள். ஆனால் நடப்பது தங்களது ஆட்சி என்பதால் திமுகவின் மூத்த வழக்கறிஞர்கள் வாய் மூடி கப்சிப் ஆகி விட்டனர். இதை சட்டப்படி சந்திப்போம் என்று சொல்வதற்கு கூட தயங்குகிறார்கள்.

வழக்கமாக இதுபோன்ற விவகாரங்களை விவாத மேடையாக மாற்றி அனல் பறக்க மணிக் கணக்கில் பேசும் டிவி செய்தி சேனல்களும் இதை கண்டுகொள்ளாமல் வெறும் செய்தியுடன் தாவி விட்டதுதான் ஆச்சரியமாக இருக்கிறது” என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். இவர்கள் சொல்வதிலும் நியாயம் இருக்கவே செய்கிறது!

  • Reason Behind Selvi in Kushi குஷி படத்தில் ஜோதிகாவின் பெயருக்கு பின்னால் இப்படி ஒரு கதையா…ரகசியத்தை உடைத்த எஸ் ஜே சூர்யா..!
  • Views: - 394

    0

    0