சிக்கியது, செந்தில் பாலாஜி பேசிய லஞ்ச ஆடியோ?… இறுகும் அமலாக்கத்துறையின் பிடி!
Author: Udayachandran RadhaKrishnan15 ஜூலை 2023, 9:45 மணி
அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட ஜூன் 14ம் தேதிக்கு பிறகு தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவருக்கு சரியாக ஒரு மாதம் கழித்து சென்னை ஐகோர்ட்டின் மூன்றாவது நீதிபதி அளித்த தீர்ப்பு கடும் நெருக்கடி அளிப்பதாக அமைந்துவிட்டது.
திமுக அரசுக்கு தலைவலி!!
இது தனிப்பட்ட முறையில் செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல, ஆளும் திமுக அரசுக்கும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் பெரும் தலைவலியை கொடுத்திருக்கிறது என்றே சொல்லவேண்டும்.
தவிர ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா, சகோதரர் அசோக்குமார் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கும் இக்கட்டான சூழலை ஏற்படுத்தி விட்டுள்ளது.
ஏனென்றால் ஆட்கொணர்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது மட்டும் அல்லாமல் செந்தில் பாலாஜியின் கைது சட்டரீதியாக செல்லுபடி ஆகும், அவரை அமலாக்கத்துறை தங்களது காவலில் எடுத்து விசாரிக்கவும் முடியும். நிரபராதி என்றால் அதை கோர்ட்டில்தான் செந்தில் பாலாஜி நிருபிக்கவேண்டும்” என தீர்ப்பின் மூன்று முக்கிய அம்சங்கள் குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது நீதிபதி அதிரடி தீர்ப்பு
இதன் மூலம் ஏற்கனவே டிவிஷன் பெஞ்ச்சில் நீதிபதி பரத சக்கரவர்த்தி அளித்த தீர்ப்பை மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் அப்படியே ஏற்றுக்கொண்டும் உள்ளார்.
இந்த தீர்ப்பு தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சட்ட ரீதியாக பல்வேறு சிக்கல்களை தோற்றுவித்தும் இருக்கிறது.
இத்தனைக்கும் அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 40-க்கும் மேற்பட்டோரிடம் ஒரு கோடியே 64 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கை இன்னும் இரண்டு மாதங்களுக்குள் விசாரித்து அறிக்கையை எங்களிடம் தாக்கல் செய்யவேண்டும். இல்லையென்றால் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து நாங்களே விசாரிப்போம் என்று கடந்த மே மாதம் 16ம் தேதி சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவும் பிறப்பித்தது.
இதன் அடிப்படையில்தான் அமலக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 13ம் தேதி சென்னையில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டிற்கு சென்று அவரிடம் 17 மணி நேரம் விசாரணை நடத்தியும் ஒத்துழைக்காத காரணத்தால் அவரை கைது செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருணைப் பார்வை
தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி மாலை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, அமைச்சர் செந்தில் பாலாஜியை நேரடியாக பார்த்துவிட்டு முதல் முறையாக நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்ட போதே அமலாக்கத்துறை என்னை மருத்துவமனையிலும் விசாரிக்கலாம் என்று கூறிவிட்டு அதன் பின்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தால் தற்போது ஏற்பட்டுள்ள பரிதாபகரமான நிலையில் இருந்து அவர் எளிதில் விடுபட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஏனென்றால் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு விட்டு, அடுத்த ஓரிரு நாட்களில் செந்தில் பாலாஜி இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தால் தன் உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் விசாரணைக்கு மிகுந்த ஒத்துழைப்பு கொடுக்கிறார் என்ற கருணைப் பார்வை அவர் மீது விழுந்திருக்கும். ஆனால் அவரோ, சென்னை அமர்வு நீதிமன்றம், இதய அறுவை சிகிச்சை செய்து கொள்பவரிடம் விசாரணை என்ற பெயரில் நெருக்கடி அளிக்கக்கூடாது என்று அமலாக்கத்துறைக்கு விதித்த நிபந்தனைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதாக நினைத்து இப்போது இடியாப்ப சிக்கலில் மாட்டிக் கொண்டுவிட்டார் என்கிறார்கள்.
செந்தில் பாலாஜி இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டு மூன்று வாரங்களுக்கும் மேலாகி விட்டதால் அவருடைய உடல்நிலை இப்போது எப்படி இருக்கிறது?… அவர் எப்போது டிஸ்சார்ஜ் ஆவார்?… என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
விசாரணையை தொங்கும் அமலாக்கத்துறை
அதேநேரம் சென்னை ஐகோர்ட்டின் மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் அளித்த தீர்ப்பில் செந்தில் பாலாஜி சிகிச்சை பெறும் காலத்தை நீதிமன்ற காவலில் இருப்பதாக கருதக்கூடாது. சிகிச்சை பெற்று முடிந்த பின்பு அவரைக் காவலில் எடுத்து விசாரிக்கலாம். இதுபற்றி இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முடிவு செய்யவேண்டும்” என்று கூறியிருப்பதால் செந்தில் பாலாஜி சற்று ஆறுதல் அடைந்திருக்க கூடும்.
பொதுவாக இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட நடுத்தர வயது உடையவர்கள் இரு வாரங்களில் இயல்பு நிலைக்கு திரும்பி டிஸ்சார்ஜ் ஆகியும் விடுவார்கள். ஆனால் செந்தில் பாலாஜியோ மூன்று வாரங்களுக்கும் மேலாக மருத்துவமனை சிகிச்சையில் இருந்து வருகிறார். இது அமலாக்கத் துறைக்கு நிச்சயம் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தும். அதனால் வருகிற 17ம் தேதியே அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்கும் நடவடிக்கைகளை தொடங்குவதற்கான வாய்ப்புகளே அதிகம்.
இது அவசர வழக்காக எடுத்துக் கொள்ளப்பட்டால் ஒரே நாளில் அனுமதி கிடைக்கும் நிலையும் உள்ளது. ஆனால் தனியார் மருத்துவமனையில் இருந்து அமைச்சரின் தற்போதைய உடல் நலம் குறித்த தகவலை கேட்டுப் பெறவேண்டிய கட்டாயமும் ஏற்படும்.
சாதமான தீர்ப்பு வர No Chance
அந்த மருத்துவமனை நிர்வாகம் அமைச்சர் செந்தில் பாலாஜி நன்கு குணமடைய இன்னும் ஓரிரு வாரங்கள் ஆகலாம் என்று கோர்ட்டில் தகவல் தெரிவித்தால் அதை ஏற்றுக் கொள்ளாமல் அமலாக்கத்துறை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவ நிபுணர்கள் குழு, அமைச்சரின் உடல்நிலையை முழுமையாக பரிசோதனை செய்ய அனுமதிக்கவேண்டும் என்ற கோரிக்கையை சென்னை ஐகோர்ட்டில் எழுப்பி
அதன் மீது உத்தரவு பெற முயற்சிக்கும்.
அதேநேரம் ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டின் மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் அளித்த தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வார்கள் என்பதும் நிச்சயம்.
ஆனால் சென்னை ஐகோர்ட்டில் ஏற்கனவே இரு நீதிபதிகள் அமர்வு, அதில் அவர்கள் அளித்த மாறுபட்ட தீர்ப்புகள், அதனைத் தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி, மூன்றாவது நீதிபதியை நியமித்து வழக்கிற்கு தீர்வு கண்டது என்ற அணுகுமுறைகளின் அடிப்படையில் பார்த்தால் செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டில் சாதகமான தீர்ப்பு வருவதற்கு வாய்ப்பு மிக மிக குறைவு என்றே சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.
செந்தில் பாலாஜி பேசிய ஆடியோ
இந்த நிலையில்தான், வருமானவரித்துறை அதிகாரிகள் கரூர், ஈரோடு, கோவை, நாமக்கல், சென்னை உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட இடங்களில் செந்தில் பாலாஜி மற்றும் அவருடைய தம்பி அசோக்குமார் ஆகியோருக்கு நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள், அவர்களது அலுவலகங்களில் கடந்த 30 நாட்களில் நான்கு முறை அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஒரு முக்கிய டைரியும், செந்தில் பாலாஜி பேசியதாக கூறப்படும் ஆடியோ ஒன்றும் கைப்பற்றப்பட்டதாகவும், அந்த இரண்டு முக்கிய ஆதாரங்களும் தற்போது அமலாக்கத்துறையின் கைகளுக்கு வந்து விட்டதாகவும்
ஒரு பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.
அந்த டைரியில் 30 ஆயிரம் கோடி ரூபாய் யார் யாருக்கு, யார் மூலம் கொடுக்கப்பட்டது என விரிவாக எழுதப்பட்ட தகவலும், ஆடியோவில் இது தொடர்பாக சில முக்கிய அமைச்சர்களிடம் செந்தில் பாலாஜி பேசி இருப்பதும் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதை அமைச்சர் மறுக்கும் பட்சத்தில் அவருடைய குரல் ஆடியோ ஆய்வக பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் நிலையும் அமலாக்க துறையால் ஏற்படலாம்.
அமலாக்கத்துறை செக்
ஏற்கனவே வேலை வாங்கித் தருவதாக கூறி செந்தில் பாலாஜி லஞ்சம் வாங்கியதாக கூறப்படும் வழக்கில் 1 கோடியே 34 லட்சம் ரூபாயை செந்தில் பாலாஜி தனது வங்கி கணக்கிலும், 29 லட்சத்து 55 ஆயிரம் ரூபாயை அவரது மனைவி மேகலா வங்கி கணக்கிலும் செலுத்தி இருப்பதை அமலாக்கத் துறை கண்டு பிடித்துள்ளது, என்கிறார்கள்.
அதேபோல கரூரில் கடந்த ஆண்டு மே மாதம் 25 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, அமைச்சர் செந்தில்பாலாஜி, அசோக்குமார் ஆகியோர் கூட்டு சேர்ந்து, பினாமிகள் பெயரில், 11 லட்சம் ரூபாய்க்கு வாங்கியதையும் அமலாக்கத்துறை உறுதிப்படுத்தி உள்ளது. இதற்கு அசோக்குமார் மனைவி, மாமியார் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளதால் இந்த வழக்கில், செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா, அசோக்குமாரின் மனைவி நிர்மலா மற்றும் அவர்களது குடும்பத்தினரையும் சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை சேர்த்துள்ளது.
தப்பிக்க முடியாமல் தவிக்கும் சகோதரர்கள்
இதில் ஒரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால், அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் நேரில் ஆஜராகவேண்டும் என்று மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு அவர் எனக்கு இதயத்தில் பிரச்சினை இருப்பதாக கூறி நான்கு வாரங்கள் கால அவகாசம் கேட்டிருக்கிறார். இதனால் இவர்களுக்கு இதே வேலையாகி போய்விட்டது என்று மூன்றாவது நீதிபதி முன்பாக நடந்த வழக்கு விசாரணையின்போது அமலாக்கத்துறை சார்பில்
ஆஜரான வக்கீல்கள் சலிப்போடு குறிப்பிட்டனர்.
ஏற்கனவே அசோக்குமார் தலைமறைவாக இருக்கிறார் என்று கூறப்படும் நிலையில் அவரும் இதய பிரச்சனையை காரணம் காட்டுவது கேலி பேசும் நிலைக்கு உள்ளாகியும் விட்டது.
இப்படி நாலா பக்கமும், அமைச்சர் செந்தில் பாலாஜி, அசோக்குமார் இருவர் மீதும் அமலாக்கத்துறையின் பிடி இறுகி வருவதால் இவர்கள் சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் இருந்து தப்பிப்பது எளிதான காரியம் அல்ல என்பது மட்டும் புரிகிறது.
0
0