கர்நாடகாவை அன்றே அலறவிட்டவர் விஜயகாந்த்… இன்று குரல் கூட கொடுக்க யாரும் முன்வரல ; பிரேமலதா விஜயகாந்த் பரபர பேச்சு..!!

Author: Babu Lakshmanan
29 September 2023, 3:43 pm

காவிரி நதிநீர்ப் பிரச்சனைக்கு நடிகர் சங்கம் போராட்டம் நடத்தாதது ஏன் எனவும், விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது காவிரி உரிமைக்காக போராடினார் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் சென்னை மாவட்ட செயலாளர்கள் மற்றும் மத்திய சென்னை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:- காவிரி நதிநீர் பிரச்சனை வாட்டல் நாகராஜ் தமிழகத்துக்கு தண்ணீர் தரக்கூடாது எனக் குரல் கொடுக்கிறார். தமிழகத்தில் நடிகர் சங்கங்கள் உள்ளிட்ட சங்க அமைப்புகள் ஏன் குரல் கொடுக்கவில்லை. நடிகர் சங்கத் தலைவராக விஜயகாந்த் இருந்த போது, அனைத்து நடிகர்களையும் திரட்டி போராட்டம் நடத்தினார். ஆனால், தற்போது யாரும் குரல் கூட கொடுப்பதில்லை. துரைமுருகன் உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என்கிறார். விவசாயிகளுக்காக எந்தவித முன்னேற்பாடும் இல்லை.

யானை கட்டி போரடித்த மண்ணில் இன்று தண்ணீர் இல்லை. உண்மையான மக்களுக்காக விவசாயிகளுக்காக போராட யாரும் முன் வரவில்லை. தமிழ் உணர்வுள்ள அனைத்து சங்கங்களையும் ஒன்றிணைத்து முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லிக்கு சென்று பிரதமர் மற்றும் சோனியா காந்தியை சந்தித்து முறையிட வேண்டும்.

கர்நாடகாவை காங்கிரஸ் ஆள்வதால் சோனியாவிடம் முறையிட வேண்டும். 3000 கன அடி கொடுப்பதாக துரைமுருகன் சொல்கிறார். எப்படி ஏற்க முடியும். ஒரு மாதம் தண்ணீர் குடிக்காமல் துரைமுருகன் வேண்டுமானால் இருக்கட்டும். இதுவரை துரைமுருகன் எந்த நதிநீர்ப் பிரச்சனைகளை தீர்த்திருக்கிறார். விவசாயிகளுக்காக போராடிய பி.ஆர்.பாண்டியன் கைது செய்யப்படுகிறார். ஆசிரியர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

கச்சத்தீவு பிரச்சனை, காவேரி பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டதா?, மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு கண்டிரிக்கிறார்களா? காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளுமே தமிழகத்துக்கு ஏதாவது தீர்வை தந்திரிக்கிறார்களா?. அவர்களுடன் அதிமுக, திமுக கூட்டணி அமைக்க முயற்சிப்பது ஏன்?.மகளிருக்கு 1000 ரூபாய் முறையாக போய்ச் சேரவில்லை. குடும்ப அட்டை வைத்திருந்தும் 1000 ரூபாய் கிடைக்காதவர்கள் குமுறலுடன் இருக்கிறார்கள். வங்கிகளில் பாதிப்பணத்தை பிடித்து விடுகிறார்கள். மீதி பணம் தான் மக்களுக்கா போய் சேர்கிறது.

தேர்தல் வாக்குறுதி அளித்த போது அனைத்து பெண்களுக்கும் 1000 ரூபாய் என்றார்கள். இப்போது தகுதி உள்ளவர்களுக்கு என்கிறார்கள். தேர்தலுக்கு முன் ஒரு வாக்குறுதி பின்னர் ஒரு வாக்குறுதியா?. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு எங்கே அளித்திருக்கிறார்கள். அனைவரையும் போதைக்கு அடிமையாக்கியதுதான் மிச்சம் என்றார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 515

    0

    0