லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை… அமித்ஷாவுக்கு ஆந்திர காங்கிரஸ் அவசர கடிதம்!
Author: Udayachandran RadhaKrishnan20 September 2024, 6:44 pm
ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அதில் திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பது குறித்த அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகளை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.
லட்டு பிரசாதம் கோடிக்கணக்காண பக்தர்களின் புனிதமானதாகவும் மத முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது, மேலும் அதன் தயாரிப்பு பண்டைய மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களுடன் இணைந்தது.
நெய்யில் விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை கவலையை ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 18 ஆம் தேதி ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ”லட்டு பிரசாதத்தில் மூலப்பொருளாக சேர்க்கும் நெய்யில் இறந்த விலங்குகளின் கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது என்று கூறினார்.
கடந்த சில ஆண்டுகளாக லட்டு பிரசாதத்தின் தரம் குறித்து தொடர் புகார்கள் வந்த நிலையில், எந்த அரசும் விசாரணை நடத்தவில்லை.
மாநில அரசிடமிருந்தோ அல்லது திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறங்காவலர் குழுவில் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.
மேலும் படிக்க: முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி குறித்து கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டர்.. அதிமுக வழக்கறிஞர் பிரிவினர் பரபர புகார்..!
ஜூலை 6, 2024 தேதியிட்ட ஆய்வக அறிக்கை பன்றிக்கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் கலந்திருப்பது உறுது செய்யப்பட்டுள்ளது. ஆனால் அறிக்கை சமர்பிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்தும், மாநில அரசு விசாரணையை துவக்கவில்லை என்பது கவலை அளிக்கிறது.
கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகள் ஆபத்தில் உள்ளன, அது உண்மை என நிரூபிக்கப்பட்டால், இந்த விஷயம் மாநிலப் பிரச்சினைகளை மீறி, தீவிரமான பக்தர்கள் அவமதிப்புச் செயலாகும்.
இந்தச் சூழலின் இதன் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால் இதற்கு காரணமானவர்கள் அரசியல் தொடர்புகள் அல்லது சமூக அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் கடுமையான சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருமலை நமது நாட்டில் மிகவும் புனிதமான தலங்களில் ஒன்றாகும். இதில் அரசியல் தலையீடு இல்லாமல் இருக்க வேண்டியது அவசியம்.
இந்த விவகாரம் குறித்து உடனடியாக விசாரணைக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என அவர் கடிதத்தில் எழுதி உள்ளார்.