கைவிரித்த மத்தியஅரசு : கவலையில் மூழ்கிய திமுக!!
Author: Udayachandran RadhaKrishnan6 March 2022, 4:40 pm
ரஷ்யா தீவிர போர் தொடுத்துள்ள உக்ரைன் நாட்டில் 21 ஆயிரம் இந்திய மாணவர்கள் சிக்கித் தவித்து வந்தனர். இவர்களில் பெரும்பான்மையானோரை அண்டை நாடுகளின் எல்லைகள் வழியாக மத்திய அரசு, “ஆபரேஷன் கங்கா” என்னும் சிறப்பு நடவடிக்கையின் கீழ் விமானங்கள் மூலம் மீட்டுவிட்டது. இன்னும் 3 ஆயிரம் பேர் மட்டுமே பாதுகாப்பாக அழைத்து வரப்பட வேண்டிய நிலை உள்ளது.
தமிழக சிறப்பு குழு
இதற்கிடையே, உக்ரைனில் சிக்கித்தவிக்கும் தமிழக மாணவர்கள் 2 ஆயிரம் பேரை மீட்டு வருவதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 3-ம் தேதியன்று திமுக எம்பிக்கள் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி, எம் எம் அப்துல்லா மற்றும் டிஆர்பி ராஜா எம்எல்ஏ ஆகியோர் கொண்ட சிறப்பு குழு ஒன்றை அமைத்தார்.
உக்ரைனின் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா, போலந்து, சுலோவாக்கியா ஆகியவற்றில் தற்காலிகமாக அடைக்கலம் புகுந்துள்ள தமிழக மாணவர்களை அழைத்து வரும் முயற்சியில் இந்த குழு ஈடுபடும் என்றும் அறிவிக்கப்பட்டது. இவர்களுக்கு உதவி செய்வதற்காக 4 ஐஏஎஸ் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டனர்.
மத்திய அரசிடம் அனுமதி கேட்ட தமிழக சிறப்பு குழு
இதைத்தொடர்ந்து, தமிழக அரசின் சிறப்பு குழு டெல்லிக்கு சென்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தி தங்களை உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு செல்ல அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டது.
இந்த சந்திப்புக்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி சிவா, “உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு சென்று, இந்தியர்களை மீட்பது பற்றி ஆலோசிக்கவே, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தோம். அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க, இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி ஜெய்சங்கர் எங்களிடம் தெரிவித்தார். அங்குள்ள தமிழக மாணவர்களிடம், வெளியுறவு அதிகாரிகள், இந்தியில் மட்டுமே பேசுவதாக கூறப்படுவது பற்றியும் கவலை தெரிவித்தோம்.
ஆபத்தான சூழலில் தமிழக மாணவர்கள்
உக்ரைனில் இருந்து இதுவரை 771 தமிழக மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் ஏராளமானோர் அங்கு காத்திருக்கின்றனர். கீவ் போன்ற போர் நிகழும் நகரங்களில் ஆபத்தான சூழலில் தமிழக மாணவர்கள் பலர் சிக்கியுள்ளனர். சுமி என்ற பகுதியில் அதிகமான மாணவர்கள்பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
உக்ரனிலிருந்து எல்லைகளுக்கு பேருந்துகளில் பயணிக்கும் மாணவர்கள், அதற்கான கட்டணத்தை அளிக்க முடியாமல் தவிப்பதாக புகார் எழுந்ததை வெளியுறவு அமைச்சரிடம் தெரியப்படுத்தினோம். இதற்கு கல்வி நிறுவன ஏஜெண்டுகள் மூலமாக தொகை அளித்து, உதவி வருவதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இது குறித்து, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்குவதாகவும் அவர் கூறினார். கூடுதல் விமானங்களை ஈடுபடுத்தி, இந்தியர்கள் அனைவரும் விரைவில் மீட்கப்பட்டுவிடுவார்கள் என்றும் உறுதியளித்தார்” என்று குறிப்பிட்டார்.
தமிழக குழுவுக்கு அனுமதி மறுப்பு?
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தமிழக அரசின் சிறப்பு குழுவிடம் கூறியிருப்பதை பார்த்தால் முதலமைச்சர் ஸ்டாலின் அமைத்த குழுவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
இந்த சந்திப்பு குறித்து, மத்திய வெளியுறவு அமைச்சக வட்டார அதிகாரிகள் சிலர் கூறும்போது, “ஏற்கனவே நான்கு மத்திய அமைச்சர்கள், உக்ரைனின் அண்டை நாடுகளில் தங்கி, மீட்புப்பணிகளை தீவிரமாக கவனித்து வருகின்றனர். இந்த நிலையில் மாணவர்களை மீட்டு வர, உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு செல்ல, தமிழக குழு அனுமதி கேட்டது. தமிழக எம்.பி.க்கள் அங்கு செல்வதால் என்ன செய்துவிட முடியும்? ஒவ்வொரு மாநிலமும், இப்படி அனுமதி கேட்டால் என்ன செய்வது?
எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் அங்கு சென்று, அவர்களுக்கு ஏதாவது பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டால், அதற்கு யார் பொறுப்பு ஏற்பது என்பது உள்ளிட்ட பல பிரச்சினைகள் இந்த விவகாரத்தில் அடங்கியுள்ளது.
உக்ரைனில் இருந்து இந்தியர்கள் அனைவரும், இன்னும் ஓரிரு நாட்களில் மீட்கப்பட்டு விடுவார்கள். தற்காலிக போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பும் தற்போது வெளியாகி உள்ளது. எனவே உக்ரைனின் பக்கத்து நாடுகளுக்கு நீங்கள் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று தமிழக எம்.பி.க்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றனர்.
தேவையில்லாமல் தமிழக குழு
இதுகுறித்து டெல்லியில் அரசியல் சட்ட வல்லுநர்கள் கூறும்போது, “போர் நடக்கும் உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்பதற்காக திமுக அரசு அமைத்த சிறப்பு குழு தேவையற்ற ஒன்று. ஏனென்றால் இவர்கள் செல்ல விரும்பும் நாடுகளுக்கு அனுமதி வழங்கிவிட்டால் இந்திய அரசியலமைப்பு சட்ட விதிமுறைகளில் அது ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துவதாக அமையும்.
இதையே சாக்காக வைத்து நிலநடுக்கம், பெருவெள்ளம், பனிச்சரிவு போன்ற இயற்கை பேரிடர் அதிகம் நடக்கும் நாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தினரை மீட்க சிறப்பு குழு அமைக்க தமிழக அரசு முயற்சி மேற்கொள்ளலாம்.
தமிழகம் தனி நாடா?
அது, ஒரு தனி நாடு போல தமிழகம் செயல்படுவதற்கு அங்கீகாரம் அளித்தது மாதிரி ஆகிவிடும்.
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு ஏற்படும் பிரச்சினை என்பது முழுக்க முழுக்க வெளியுறவுத் துறை சம்பந்தப்பட்ட விவகாரம். அதை தமிழக அரசு புரிந்து கொண்டது போல் தெரியவில்லை. தமிழகத்தின் சிறப்பு குழுவில் இடம்பெற்ற
8 பேரும் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு செல்ல மத்திய அரசிடம் அனுமதி கேட்கத்தான் டெல்லி வந்துள்ளனர். அதற்கு வெளியுறவுத் துறை மறுப்பு தெரிவித்து இருப்பது சரியான நடவடிக்கைதான்.
திமுகவின் தவறான எண்ணம்!!
இதுபோன்றதொரு குழுவை அமைக்காமலேயே தமிழக மாணவர்களை பத்திரமாக மீட்டு தரவேண்டும் என்ற கோரிக்கையை வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மூலம் தமிழகஅரசு வேண்டுகோளாக வைத்திருக்கலாம்.
பிரதமர் மோடியிடமோ வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடமோ போனில் தொடர்பு கொண்டிருக்கலாம். அதுதான் சரியான அணுகுமுறையும் கூட. திமுக அரசுக்கு கவுரவமான விஷயமாகவும் இருந்திருக்கும்.
இல்லையென்றால் அரசியல் ரீதியாக ஆதாயம் பெறுவதற்காக திமுக அரசு இதுபோல் முயற்சி மேற்கொள்கிறது. தேசிய அளவில் தங்களை முன்னிலைப் படுத்திக் கொள்ள விரும்புகிறது என்ற தவறான எண்ணம்தான் அனைத்து தரப்பு மக்களிடமும் ஏற்படும்” என்று அந்த சட்ட வல்லுநர்கள் தெரிவித்தனர்.