சிஏஏ-வை உங்களால் தடுத்து நிறுத்த முடியாது… தமிழகத்தில் கொண்டு வந்தே தீருவோம் ; CM ஸ்டாலினுக்கு சவால் விட்ட அமித்ஷா !!
Author: Babu Lakshmanan14 March 2024, 12:08 pm
தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டம் கட்டாயம் அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேசிய குடியுரிமை திருத்த சட்டம் 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சிகள் கண்டங்களை தெரிவித்து வருகின்றார். தமிழகம், கேரளா, டெல்லி , மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்களும் தேசிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தங்கள் கண்டங்களை பதிவு செய்து வருகின்றனர்.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மத்திய அரசு அமல்படுத்தினாலும், தற்போது தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படாது என தெரிவித்திருந்தார்.
எதிர்கட்சிகளின் இந்த முடிவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு கிடையாது என்று கூறிய அவர், குடியுரிமை திருத்த சட்டம் முழுக்க முழுக்க மத்திய அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்றும், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதில் உறுதியாக இருப்பதாக கூறினார்.
மேலும், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜய், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் சிஏஏ விவகாரத்தில் அரசியல் செய்வதாகவும், சிஏஏ என்பது யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்கான சட்டம் அல்ல என்றும், இந்து, கிறிஸ்துவ அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் சட்டம் என்று கூறினார்.