நாடாளுமன்றம் மட்டுமல்ல தமிழக சட்டப்பேரவையிலும் மாற்றம் நிகழும் : கோவையில் ஜேபி நட்டா உறுதி!!
Author: Udayachandran RadhaKrishnan27 December 2022, 9:24 pm
நாடாளுமன்ற தேர்தல் வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில், தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அரசியல் கட்சிகள் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தத் தொடங்கிவிட்டன.
அந்த வகையில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அனைத்து மாநிலங்களுக்கும் சென்று கட்சியினரை நேரில் சந்தித்து தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக ஜே.பி. நட்டா, தமிழகத்தில் இன்று நாடாளுமன்ற தேர்தல் பணிகளை தொடங்கி வைத்து பிரசாரத்தை தொடங்கினார்.
முன்னதாக கோவை விமான நிலையத்திற்கு வந்த அவரை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய மந்திரி எல்.முருகன் உள்ளிட்ட பா.ஜ.க.வினர் நேரில் சென்று வரவேற்றனர்.
இதனையடுத்து கோவை மாவட்டம் காரமடை அருகே தென்திருப்பதி நால்ரோடு பகுதியில் நடக்கும் வாஜ்பாய் பிறந்த நாள் நல்லாட்சி தின பொதுக்கூட்டத்தில் ஜே.பி.நட்டா கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது;- “பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா முன்னோக்கிச் சென்று ஒரு பெரிய பாய்ச்சலை எடுத்து வருகிறது. இந்தியா இப்போது பாதுகாப்பான கைகளில் உள்ளது. இந்தியா தற்போது வலிமையுடன் முன்னேறி வருகிறது, விரைவில் உலகின் தலைசிறந்த தலைமையாக மாறும்.
நாடாளுமன்ற தேர்தல் மட்டுமின்றி தமிழக சட்டசபை தேர்தலிலும் மாற்றம் நிகழும். நம்பிக்கையான முன்னேற்றத்தை பார்த்துக் கொண்டே இருக்கின்றோம். யாரும் பட்டினியாக இருக்கக்கூடாது என்பதற்காக அன்னை யோஜனா திட்டத்தைக் கொண்டு வந்தோம்.
விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தியாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கொரோனா தடுப்பூசிகளை உலகம் வியந்து பாராட்டியுள்ளது.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.