15 மாதத்தில் 12 விலங்குகள் சாவு… வண்டலூர் உயிரியல் பூங்காவில் தொடரும் சோகம்… மருத்துவ வசதி குறைபாடுதான் காரணமா..? கண்டுகொள்ளுமா அரசு..?

Author: Babu Lakshmanan
25 March 2022, 6:08 pm

சென்னை : வண்டலூர் உயிரியல் பூங்காவில் கடந்த 15 மாதத்தில் மட்டும் 12 விலங்குகள் உயிரிழந்த சம்பவம் வன உயிரின ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் முக்கிய உயிரியல் பூங்காக்களில் முதன்மையானது செங்கல்பட்டுவை அடுத்துள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவாகும். இந்தப் பூங்காவில் சிங்கம், புலி, சிறுத்தை, மான், குரங்கு உள்பட பல்வேறு வன உயிரினங்கள் உள்ளன.

Vandaloor Zoo- updatenews360

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவத் தொடங்கிய போது, கடந்த ஆண்டு வண்டலூர் உயிரியல் பூங்காவையும் இந்த நோய் தொற்று விட்டு வைக்கவில்லை.

கடந்த ஆண்டு ஜுன் 3ம் தேதி இளமையும், துடிப்புமிக்க நீலா என்னும் சிங்கம் கொரோனாவால் பாதித்து உயிரிழந்தது. இது வண்டலூர் பூங்காவில் கொரோனாவுக்கு ஏற்பட்ட முதல் இழப்பாகும்.

இதைத் தொடர்ந்து, அனைத்து சிங்கங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, பிறகு சிகிச்சைக்கு பின் மீண்டு வந்தன. கொரோனா அச்சுறுத்தலால் சிறிது நாட்கள் பூங்கா மூடியே வைக்கப்பட்டிருந்தது.

இது ஒருபுறம் இருக்க, கடந்த ஆண்டு அக்டோபர் இறுதிக்குள் 4 சிங்கங்கள், 3 புலிகள் மற்றும் ஒரு சிறுத்தை என 8 விலங்குகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்தன. இது பூங்கா ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து, இந்த ஆண்டும் வண்டலூர் பூங்காவில் உயிரிழப்புகளை தடுக்க முடியவில்லை. சிங்கம், புலி, சிறுத்தை மற்றும் ஜாகுவார் உள்ளிட்டவை உயிரிழந்தன.

அதுமட்டுமில்லாமல், கடந்த ஜனவரி மாதம், மருத்துவ பரிசோதனைக்காகமாதிரிகளை மருத்துவர்கள் சேகரித்துக் கொண்டிருக்கும் போது, கூண்டின் கதவில் சிக்கி, சிறுத்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது.

இதன்மூலம், கடந்த 15 மாதத்தில் மட்டும் 12 விலங்குகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது, பூங்காவில் தரமான கால்நடை மருத்துவ கட்டமைப்பு இல்லாததுதான் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், பராமரிப்பு பணிகளும் சரியாக மேற்கொள்ளப்படுவதில்லை என்றும் சொல்லப்படுகிறது.

விலங்குகளின் உயிரிழப்புகளை தடுக்க தமிழக அரசு உடனடி கவனம் செலுத்தி, பூங்காவுக்கு தேவையான மருத்துவ வசதிகள் மற்றும் கட்டமைப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என்பதே விலங்கின ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

  • singampuli shared the experience on mayandi kudumbathar movie நான் நடிக்கவே மாட்டேன்னு சொன்னேன், ஆனா அவர்தான் என்னைய?- ஓபனாக போட்டுடைத்த சிங்கம்புலி…