சென்னைக்கு 2-வது விமான நிலையமா?.. எங்க ஊரை விட்டுடுங்க… கொந்தளிக்கும் கிராம மக்கள்!!
Author: Babu Lakshmanan16 August 2022, 6:18 pm
2வது விமான நிலையம்
சென்னைக்கு அருகே இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும், இதற்காக 5000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஒரு பகுதி விவசாயிகளின் வயிற்றில் புளியைக் கரைப்பதாக அமைந்துள்ளது. இந்த புதிய விமான நிலையம் அமைக்கப்படுவதற்கு பல காரணங்கள் உண்டு.

தற்போது சென்னை மீனம்பாக்கத்தில் இருக்கும் சர்வதேச விமான நிலையம் ஆண்டுக்கு சுமார் 2 கோடியே 19 லட்சம் பயணிகளை கையாண்டு வருகிறது. தினமும் 60 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகள் வந்து செல்கின்றனர். தவிர அன்றாடம் சுமார் 500 விமானங்களும் வந்து போகின்றன. டெல்லி, மும்பைக்கு அடுத்து மிக அதிக அளவில் சரக்குகளைக் கையாளும் தளமாகவும், மிக அதிகமான பயணிகள் வந்து செல்லும் தளமாகவும் மீனம்பாக்கம் விமான நிலையம் திகழ்கிறது.
4,791 ஏக்கர்
கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டுமென்கிற கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. எனினும் கூடுதல் விமானங்களை நிறுத்தும் அளவிற்கும் விமானங்கள் புறப்பட்டு செல்வதற்கும் ஏற்ப அதிக அளவில் ஓடு பாதைகளை அமைக்க போதிய இடவசதி இல்லாததால் பெரிய அளவில் விரிவாக்கம் செய்யும் பணி தடைபட்டது.
இந்த நிலையில்தான், சென்னை நகருக்கு அருகில் இருக்கும் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்தில் உள்ள பரந்தூர் கிராமத்தை மையமாக கொண்டு 4,791 ஏக்கர் நிலப்பரப்பில் இரண்டாவது விமான நிலையம் அமைத்துக் கொள்ள அனுமதிக்கும்படி மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டுக் கொண்டது. அதற்கு மோடி அரசும் இரண்டு வாரங்களுக்கு முன் அனுமதி அளித்தது.
மற்றொரு மைல் கல்
இத் திட்டம் குறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறும்போது,“பரந்தூரில் அமையவிருக்கும் புதிய விமான நிலையத் திட்டத்தை செயல்படுத்துவது என்பது நமது மாநிலத்தின் வளர்ச்சிக்கான படிக்கட்டு. தமிழகத்தை 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவாக்கும் உயர்ந்த குறிக்கோளை எட்டுவதற்கான பயணத்தில் இது மற்றொரு மைல் கல்லாகும்” எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
அதேபோல,`பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு அரசின் வசம் 4,000 ஏக்கர் நிலம் தயாராக இருப்பதாகவும், இன்னும் 1,000 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த வேண்டியிருப்பதாகவும்’ தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். மேலும், இந்த விமான நிலையம் மட்டும அமைந்தால் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் இரண்டாவது தொழில்புரட்சி ஏற்படும் எனவும் அவர் கூறினார்.
விவசாய நிலம்
இந்த நிலையில்தான், புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்க பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுமார் 11 கிராமங்களில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட இருக்கிறது என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.
குறிப்பாக பரந்தூர், ஏகனாபுரம், அக்கமாபுரம், மேலேரி, வளத்தூர், தண்டலம் , நாகப்பட்டு, நெல்வாய், மகா தேவி மங்கலம், உள்ளிட்ட 12 கிராமங்களில் உள்ள குடியிருப்பு மற்றும் நீர்நிலை பகுதிகளை திமுக அரசு கையகப்படுத்த திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் கொந்தளிப்புக்கு உள்ளான ஏகனாபுரம் கிராம மக்கள் தங்கள் பகுதியில் மட்டும் சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்தை புதிய சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்காக தமிழக அரசு கையகப்படுத்த கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் தங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என்று அவர்கள் கருதுவதுதான்.
தவிர ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள வசதி போல், மாற்று இடம் அளித்தாலும் எங்களுக்கு அமையாது எனக் கூறி எங்கள் பகுதியில் உள்ள குடியிருப்புகளையும் விவசாய நிலப் பகுதிகளையும் எடுப்பதை கைவிட்டு, தமிழக அரசு வேறு பகுதிகளை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் ஆவேசமாக கூறுகின்றனர்.
ஏகனாபுரம் கிராமத்தைப் போலவே அதனைச் சுற்றியுள்ள ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 10 நாட்களாக பல்வேறு வித ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.
தீர்மானம்
இந்த நிலையில்தான் ஏகனாபுரம் கிராமவாசிகள் துணிச்சலான ஒரு முடிவையும் எடுத்துள்ளனர். சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏகனாபுரத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது.
அப்போது புதிய சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி சரவணன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட மக்கள் ஒரு மனதாக முடிவு எடுத்து அதற்கென தீர்மான புத்தகத்தில் கையொப்பமிட்டு அத்தீர்மானத்தை நிறைவேற்றியும் உள்ளது தெரிய வருகிறது.
நீர்நிலைகள்
இது பற்றி ஏகனாபுரம் கிராம மக்கள் சிலர் கூறும்போது, “இந்தக் கிராமத்தில் 150 வருடங்களுக்கு முன்பு எங்களது முன்னோர்கள் வசித்துள்ளனர். அவர்களின் வழியில் இப்போது ஆறாவது தலைமுறையாக வசிக்கும் எங்களுக்கு பெரும் சோதனையாக சர்வதேச விமான நிலைய பிரச்னை வந்துள்ளது. எங்கள் ஊரைச் சுற்றி மட்டுமே 6 நீர் நிலைகள் உள்ளன. மற்ற 11 கிராமங்களில் 24 நீர்நிலைகள் இருக்கின்றன.
எங்கள் கிராமத்தில் சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்தை நம்பி எங்களுடைய வாழ்க்கை நகர்ந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் விமான நிலையம் அமைப்பதற்காக பரந்தூரை சுற்றி உள்ள 12 கிராமங்களிலும் 3 ஆயிரம் ஏக்கர் நஞ்சை நிலத்தை
கையகப்படுத்த போகிறார்கள் என்றும் சொல்கிறார்கள். இப்படி விவசாய நிலத்தை கையகப்படுத்தி விமான நிலையம் அமைப்பது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை?…
குடியிருப்பு, நீர்நிலை பகுதிகளை தவிர்த்து பிற பகுதிகளில் விமான நிலையம் அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து இருக்கிறோம். என்ன நடக்கப் போகிறதோ? என்று எங்களுக்கு மனசு படக் படக் என்று அடித்துக் கொள்கிறது.
தேர்தலின் போது, உங்களுக்கு தேவையான அத்தனை வசதிகளையும் செய்து தருவோம் என்று எங்களுக்கு வாக்குறுதி அளித்தனர். ஆனால் இப்போதோ தமிழக அரசு எங்களின் பூர்வீக வசிப்பிடத்தை விட்டு விரட்டியடிக்க முடிவு செய்துவிட்டது பெரும் வேதனையாக உள்ளது” என்று அவர்கள் மனம் குமுறுகின்றனர்.
சமூகப் போராளிகள் எங்கே..?
சமூக நல ஆர்வலர்களும் பரந்தூரை சுற்றியுள்ள 11 கிராம மக்களின் வேதனை நியாயமானதே! என்று கூறுகின்றனர்.
“எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியின்போது சென்னை -சேலம் எட்டு வழி பசுமை சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தியபோது அதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சமூகப் போராளிகள் என்ற பெயரில் சில அமைப்புகளும் அதை ஊதி ஊதி பூதாகரமாக்கின. சில நடிகர்களும் போராட்டக் களத்தில் குதித்தனர். திமுக, விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அந்த 8 வழிச் சாலை திட்டத்தை முடக்கவும் செய்தன.
அதேநேரம் தற்போது சர்வதேச விமான நிலையம் அமைய இருக்கும் பரந்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராம விவசாயிகள் இதற்கு ஆதரவு தெரிவிப்பதாக திட்டமிட்டு ஒரு தகவல் சில ஊடகங்களில் பரப்பப்படுகிறது.
உணவு தரும் விளைநிலங்களையும், குடிநீர் தரும் நீர்நிலைகளையும், மக்கள் வாழும் வீடுகளையும் இடித்து தரை மாட்டமாக்கி விட்டு அதன்மீது ஓடுபாதைகளையும், தொழிற்சாலைகளையும், வணிக வளாகங்களையும் அமைப்பதை வளர்ச்சி என்று அரசே கூறுவதை எப்படி ஏற்க முடியும்?…
நீர்நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருக்கும் தனியார் கட்டடங்களை இடிப்பதற்குச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் தமிழக அரசு, சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கு, நீர்நிலைகளை அழிக்க முயற்சிப்பது எந்த வகையில் நியாயமாகும்?…
திமுக அரசு விவசாயத்தை மேம்படுத்த மிகுந்த கவனம் செலுத்துகிறது, அதற்காக தனியாக வேளாண் பட்ஜெட்டும் போட்டுள்ளோம் என்று பெருமைபட்டுக் கொள்கிறார்கள். ஆனால் பரந்தூர் மற்றும் அதன் சுற்று வட்ட 11 கிராமங்களில் பல தலைமுறைகளாக வாழும் ஆயிரக்கணக்கான மக்கள், விவசாயிகளின் வேதனையை திமுக அரசு புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டிய சமூகப் போராளிகளும் அரசியல் கட்சிகளும் இப்போது எங்கே போனார்கள் என்பதும் புரியவில்லை.
புதிய சர்வதேச விமான நிலையம் அமைப்பது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நிச்சயம் பாதிக்கும். இவர்களுக்கு என்னதான் மாற்று இடம், இழப்பீடு வழங்கினாலும் சொந்த ஊரில் காலம் காலமாக வசிப்பவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவது சரியான நடவடிக்கை அல்ல என்றே கருதத் தோன்றுகிறது” என அந்த சமூக நல ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.