அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க இபிஎஸ் வருகை… ஆரத்தி எடுத்து வரவேற்ற கட்சி நிர்வாகிகள்… தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு…!!
Author: Babu Lakshmanan26 December 2023, 10:49 am
அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க வருகை தந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆரத்தி எடுத்து கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை- வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் இன்று தொடங்கியது. பொதுக்குழு நடைபெறுவதை முன்னிட்டு அதிகாலை முதலே மண்டபத்தின் முன்பு அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் குவிந்து வருகின்றனர்.
இன்னும் சில மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அதிமுக பாஜக கூட்டணி முறிவு ஏற்பட்ட பிறகு அதிமுக பொதுக்குழு செயற்குழு கூடுவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது. தமிழக அரசுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் கூடியது. இதில், பங்கேற்க அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகை புரிந்தார். ஏராளமான தொண்டர்கள் குவிந்ததால் தள்ளு, முள்ளுவுக்கு பிறகு, அரங்கத்திற்கு அவர் வருகை புரிந்தார்.
அப்போது, அவரை ஆரத்தி எடுத்து கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர், மேடையில் இருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுக்கு இபிஎஸ் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.