திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு.. ஓபிஎஸ் வருவார்… முடிவையும் ஏற்பார்… கே.பி.முனுசாமி நம்பிக்கை!

Author: Babu Lakshmanan
20 June 2022, 2:37 pm

சென்னை : அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்படும் நல்ல முடிவை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஏற்றுக் கொள்வார் என்று துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் இருந்து வருகின்றனர். தற்போது, ஒற்றைத் தலைமை தேவை என்ற வலுக்கத் தொடங்கிய நிலையில், 7 நாட்களாக இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தனித்தனியே தங்களின் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தற்போது, எடப்பாடி பழனிசாமியே ஒற்றைத் தலைமைக்கு தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. அதிமுகவில் மொத்தம் உள்ள 75 மாவட்ட செயலாளர்களில் 62 பேர் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஓபிஎஸ்-க்கு வெறும் 11 மாவட்ட செயலாளர்களே ஆதரவளித்துள்ளனர். எனவே, ஜுன் 23ம் தேதி நடக்கும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தேர்வு செய்யப்படும் என்று தெரிகிறது.

இதனிடையே, ஒற்றைத் தலைமை தேவையில்லை என்று கூறி வரும் ஓபிஎஸ் தரப்பினர், இன்று எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில், பொதுக்குழுவை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், இதனை ஏற்க மறுத்த இபிஎஸ் தரப்பினர், பொதுக்குழு நடக்கும் ஸ்ரீவாரி மண்டபத்தில் இபிஎஸ் தரப்பினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

அங்க செய்தியாளர்களிடம் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி பேசியதாவது :- ஜூன்‌ 23-ல்‌ அதிமுக பொதுக்குழு வானகரம்‌ ஸ்ரீவாரி மண்டபத்தில்‌ திட்டமிட்டபடி நடைபெறும்‌. மகிழ்ச்சியுடனும்‌, எழுச்சியுடனும்‌ அதிமுக பொதுக்குழு நடைபெறும்‌. இபிஎஸ்க்கு ஓபிஎஸ்‌ அனுப்பிய கடிதம்‌ குறித்து எங்களுக்கு எதவும்‌ தெரியாது. ஓபிஎஸ்‌ அனுப்பிய கடிதம்‌ கிடைக்கப்‌ பெற்றிருந்தால்‌ இபிஎஸ்‌ எங்களிடம்‌ தெரிவித்திருப்பாரே?.

பொதுக்குழு தீர்மானங்கள்‌ தொடர்பான ஆலோசனையில்‌ ஓபிஎஸ்‌ கலந்துகொண்டார்‌. பொதுக்குழு கூட்டத்தை நடத்தி தீர்மானத்தை தேர்தல்‌ ஆணையத்திற்கு அனுப்ப ஒருங்கிணைப்பாளர்‌ ஒப்புதல்‌ அளித்தார்‌. பொதுக்குழுக்‌ கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க வேண்டாம்‌ என்பது அனைவரின்‌ ஒப்புதலுடன்‌ முடிவு செய்யப்பட்டது. அதிமுக உட்கட்சி தேர்தலை சுட்டிக்காட்டி சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க வேண்டாம்‌ என்றார்‌ ஓபிஎஸ்‌.

அதிமுகவின்‌ பெரும்பாலான மூத்த தலைவர்கள்‌ பொதுக்குழு கூட்டத்தை நடத்த ஆதரவாக உள்ளனர்‌. அதிமுக பொதுக்குழுவுக்கு ஒருங்கிணைப்பாளர்‌ ஓபிஎஸ்‌ உறுதியாக வருவார்‌. பொதுக்குழுவில்‌ பங்கேற்று ஓபிஎஸ்‌ தனது கருத்துகளை எடுத்துரைப்பார்‌. ஒருசில குழப்பவாதிகள்‌ தங்களது தேவைகளை பூர்த்தி செய்வதற்கு குழப்பம்‌ விளைக்க முயற்சி செய்கின்றனர்‌.

பொதுக்குழுவில்‌ ஒற்றைத்‌ தலைமைத்‌ தீர்மானம்‌ கொண்டு வரப்படுமா என்பது குறித்து இப்போது கூறமுடியாது, எனக் கூறினார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்